/* ]]> */
Dec 152011
 

காலையில் அழுது முகம் வீங்கிக் கிளம்பிய நானும் இப்போது முகத்திலும் கழுத்திலும் புள்ளி புள்ளியாக தோலை சிலிர்க்க வைக்கும் இந்தக் காற்றை ஒரு முறுவலோடு எதிர்கொண்டபடி இந்த பஸ்ஸில் பயணிக்கும் நானும் எப்படி ஒருத்தியாக இருக்க முடியும்? அதுவும் இந்த மண் ரோட்டின் ஓரங்களில் நுரைத்துக்கொண்டு மழை நீர் ஓடுவதையும் அதில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் ஆட்களையும் பார்த்துக்கொண்டே போகும் போது ? ஒரே நேரத்தில் நானும் மீனுவும் திரும்பியும் வேறு பார்த்துக்கொண்டோம் . சிரிப்பு தான் . அப்படியே கொஞ்சம் சாய்ந்தும் கொண்டேன் மீனுவின் தோளில்.  லேசாய் ஒரு புன்னகையோடு சேர்த்துக்கொண்டாள் வெதுவெதுவென்றிருந்த அவள் கழுத்தோடு சேர்த்து.

“அப்புடி அழுது ஊத்திக்கிட்டு வந்த அவர் திட்டிட்டாருன்னு ? இப்ப என்ன ஒரே இளிப்பு ?”

“ஆமாம் போ இப்ப கூட சிரிக்காதடீங்கிறியா ?இந்த மண் ரோடுங்களும் இப்புடி வழியெல்லாம் இருக்குற கள்ளிச்செடியுமா இந்த பஸ்ல இப்பிடியே போய்ட்டே இருக்கலாம் ஏன் மீனு 

வெறித்தபடி சொல்கிறேன் ..

“சரி விடுடீ இப்பத்தான சிரிச்சுக்கிட்டு வந்த? அதெல்லாம் விடு அப்பறம் பாத்துக்கலாம்” என்றாள்.போய் இறங்கும் வரையிலும் என் கையை விடவேயில்லை அவள்.

“வாம்மா பொண்ணு என்னமோ நீ ஒட்டுன அளவு ஒன் பேரு ஒட்டல எனக்குப்பாரு”  என்றார்  சிரித்தவாறே  தெய்வா ஆச்சி .

“ஆமா ஆன்ட்டி ஒங்க பேரு மட்டும் என்னவாம்? ஒங்களுக்கு வந்து வசந்தா , சாந்தா , நல்லம்மா இல்லாட்டினா அன்னம்மா இப்படி ஏதாவது வக்காம தெய்வான்னு ஏன் வச்சாங்க? என்னமோ பெரிய சூலாயிதத்தோட காளி நிக்கிறாப்பல இல்ல தோணுது தெய்வான்னதும் ?
“ஏம்மா இவட்ட போய் வாயக் குடுப்பியா நீ ? எத்தன தடவ சொல்ல ஒனக்கு முழுப்பேரு வராட்டி பானுன்னு சொல்லேன் “என்றாள் மீனு .

மீனு அம்மாவுக்கு கனம் என்றால் அப்படி ஒரு கனமான உடம்பு .பெருத்து, வயிரு வரையுமான மார்பு. முகத்தில் மட்டும் ததும்பும்  ஒரு அமைதியும் அழகும் . சும்மாவே குள்ளமான உருவம் முதுகுத்தண்டு ஆபரேஷன் செய்ததில் இருந்து இன்னமும் குறுகிவிட்டார் போல தோன்றும் எனக்கு . டிஸ்க்ப்ரொலாப்ஸ் ஆனதில் ஆபரேஷன் செய்து ஸ்க்ரூ பொருத்தப்பட்ட முதுகு .

மீனுவின் அப்பா வளையப்பட்டியில் இருந்த பெரிய வீட்டை விற்று விட்டு அவர் பிறந்த இந்த கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பூர்வீக வீட்டை ஆல்டர் பண்ணி குடி வந்திருக்கிறார் . பள்ளி ஒன்று துவங்கி நாலைந்து நண்பர்கள் உதவியோடு நடத்தி வருகிறார்கள் .

பெரிய முற்றம் , சுற்றியும் அடுப்படி , அறைகள் என்று விஸ்தாரமான வீடு . இத்தனை பெரிய வீட்டை தாங்கி நிற்பது வீடு நெடுகிலும் இருக்கும் தூண்கள் தான்.முற்றத்தைச் சுற்றி இருந்த தூண்கள் அத்தனை அழகு  . மயில் , செடி கொடிகள் , மிருகங்கள் , கோலங்கள் என்று வேலைப்பாடும் ரொம்ப நுணுக்கம். மீனு இடம் வாங்கி வீடு கட்டிய சமயம் இந்த வீட்டுத் திண்ணையில் இருந்த ரெண்டு பெரிய தூண்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து அப்படியே பூசி வைத்துக்கொண்டாள் தன் வீட்டு ஹாலில். அவள் தாத்தா காலத்தியது என்பதால் அண்ணன் தம்பிகளுக்கெல்லாம் கூட அதில் கொஞ்சம் வருத்தம் தான் என்றும் ,அம்மா தான் ரொம்ப சமாதானம் செய்தார் என்று சொல்லியிருக்கிறாள்.வெள்ளிப்பூண் இட்ட கதவுகளும் தூண்களும் கூட இந்த மாதிரியான பழைய நகரத்தார் வீடுகளில் இருக்குமாம் . இத்தனை பெரிய வீட்டை சுத்தம் செய்து பராமரிப்பது பெரிய மலைப்பு தான் . கொல்லையில் சுண்டை , வெண்டி , ரோஜா என்று தோட்டம் வேறு.

“ஏ இங்க வா இந்த ரூம் நீ பாத்ததேயில்ல என்ன ? “அவள் தம்பி சிவாவின் அறை .

“ஒரே மருந்து வாடையா இருக்கே ?”

“ஆமா எங்க வீடுங்கள்லயே இந்த வாட வரும் . சாமானெல்லாம் நெறைய இருக்கு என்ன ? அதான் ..இங்க பாரு இது தான் எங்க அப்பத்தா ஐயா போட்டோ .
அடுத்திருந்த பூஜை அறைக்கு சென்றோம் . நிலைக்கு நேர் எதிரே மாட்டியிருந்த போட்டோ என்னவோ ஒரு விசித்திரமான உயிர்ப்புடன் வெறித்தது .

“இது யாரு மீனு ?”

“நான் தான் சொல்லிருக்கேனே எங்க சித்தப்பா ..செந்தில்ன்னு . சின்ன வயசுலேயே ஒரு ஆக்சிடெண்ட் ஆகி முடியாம இருந்தாருன்னு ?”

“ஆ ஆமா ஆமா .”

“இவரு தான் .” படுத்தவாறே எடுத்திருந்த போட்டோ .பெரிய குங்குமப்பொட்டோடு வெறித்துப்பார்த்தவாறு அந்த சித்தப்பா .

காபி , தேங்காய்பர்பி, முறுக்கோடு  வந்தார் மீனுவின் அம்மா .

“குடுங்க ஆன்ட்டி .ஏன் இத்தன பலகாரம் சாப்புடற நேரத்துல ..”

“இன்னம் சமைக்கலம்மா  நேரம் ஆகும் “என்றார் காபியை ஆற்றியபடியே .

“ஏம்மா செந்திப்பா சாகும் போது எத்தன வயசு ?”

“ம்ம் அவகளுக்கு ஆக்சிடெண்ட் ஆனப்ப 22வயசு ,சாகறப்ப என்ன நாப்பது நாப்பத்து அஞ்சு இருக்கும் . அத்தினி வருசமும் படுக்கையில தான் பானு . செத்ததும் கூட கிட்னி பெயிலியர்ல தான் . அது வரைக்கும் ஒரு புண்ணு வராம பாத்துக்கிட்டோம். டாக்டர்லாம் கேட்டாங்க இத்தினி வருஷம் படுக்கையில கெடந்த ஒடம்பு புண்ணு வக்காம பாத்திருக்கீங்களே ?உங்க அஸ்பண்ட்டான்னு !”

பெருமையா அல்லது இன்னதென்று தெரியாத ஒரு பாவத்தோடு முற்றத்தில் லேசாக உயரம் கொடுத்து இருந்த ஒரு படியில் உட்கார்ந்தார் காய்நறுக்க .தூண் ஒன்றில்  சாய்ந்து காலை மடக்கி அமர்ந்தவாறு அவர் நறுக்கிகொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்தேன் . வாங்கி நறுக்கிக்கொடுக்க ஏனோ தோன்றவில்லை .

“எப்புடி இருக்கு பாரு சொரக்கா இப்பத்தான் பொறந்த மாதிரி ..பறிக்கவே மனசில்ல எனக்கு.”

என்னமோ அதுக்கு வலிக்கும் என்கிறார் போலவே தொலியைத்தவிர ஒரு இணுக்கு சதையும் கூட பிய்ந்து விடாமல் அத்தனை நுணுக்கமாக சீய்த்துக்கொண்டு இருந்தார்.

“நெஞ்செலும்பும் சொரக்காயும் சேர்த்து கொழம்பு வச்சா அவங்களுக்கு புடிக்கும் . நீ திம்பியா?”

“எல்லாம் திம்பா விடு மா சீக்கிரம் செய்யேன் . எப்ப சாப்ட்டு ஸ்கூல் போயி …நல்லாப் போமா நாங்க 5.30 மணி பஸ்சுக்கு போகலாம்னு வந்தோம் .”

கொல்லையில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த ஆயா குரல் கொடுத்தது . “ஏன்த்தா ரவைக்கி சாப்புட்டுட்டு போகலாம் இல்ல ? என்ன அவசரம் ?”

“இல்ல ஆயா எங்க செட்டியாரு வந்துருவாங்க .பயலுவல தனியா விட்டுட்டு வந்திருக்கேன் . அப்பாவுக்கு ஆப்பரேசன் ஆகி முடியாததால ஸ்கூல் வேலய ஒத்தயா பாக்கவேண்டியிருக்குன்னு இவள வேற கூட்டிட்டு வந்துருக்கேன் . இவ வீட்டுலயும் விடியமே ரொம்ப சத்தம் போட்டாகளாம் . இருட்டறதுக்குள்ள  போகணும் . இல்லாட்டினா இவுங்களும் வையத்தேன் செய்வாங்க .”

“ஏன் பானு திட்டுவாங்களா என்ன அவங்க ?” மீனு அம்மாவின் கண்களில் தெரிந்தது வருத்தமும் கொஞ்சம் கோபமும் கூட .

“ஆமா ஆன்ட்டி எந்த வீட்டுல தான் திட்டல சொல்லுங்க ! இதுல இவங்களும் ஒண்ணும் பெறத்தியில்ல . அத்த மகன் ரத்தினம் தான்…அங்கிள் மாதிரியா? அப்புடில்ல தெய்வா தெய்வான்னு உங்கள தாங்குறாங்க ?”

“போடீ போ எங்க அப்பாட்ட எங்க அம்மா பட்ட பாடு எனக்கில்ல தெரியும் . அடி கூட வெளுத்திருவாங்க . இப்ப அல்சிமர்ஸ், மூட்டு வலி அது இதுன்னு ஒடுங்கிட்டாங்க . இப்பவுமா படுத்த முடியும் .”

பேசிக்கொண்டதையெல்லாம் முகம் மாறாமல் சிரித்த வண்ணமே கேட்டுகொண்டு சமைத்தார் ஆச்சி .

கழுவியானதையெல்லாம் கவிழ்த்து வைக்கவென உள்ளே வந்தது ஆயா . சரியாய் பழுத்து, வதங்கின பழம் போன்ற கிழம் . ‘இது ஆன்ட்டிக்கு வேலைக்கா’ என்று எண்ணிக்கொண்டேன் .

“ஏன் மீனு -ஆயா இன்னிக்கோ நாளைக்கோ எண்ணிக்கோன்னு இருக்கு. இது என்னடி வேலை செய்யும் .”

“ஆமா  இங்க ஏதுடீ வேற ஆளு வேலக்கி ?ஆயாவுக்கும் இப்ப யாரும் இல்லியே ? சும்மா ஒக்காந்து சாப்புடாது தெரியுமில்ல? அம்மாவுக்கு இது ஒதவியா ?ஆயாவுக்கு அம்மா ஒதவியான்னு தெரியல . அப்பாவும் இப்புடி நடையில்லாம இருக்காங்க. அம்மாவுக்கு ஒரு தொண இது . இத்தினி வருஷம் அம்மா ஆளே வச்சதில்ல . எங்க ஐயா , ஆயா , செந்திப்பா எல்லாரையும் பாத்தாங்க  . நாங்களும் அத்தினி புள்ளைக . என் தம்பிங்க எல்லாம் பாடாத்தேன் படுத்தி வப்பாய்ங்க . இட்லி சுட்டா சுட்டுகிட்டே இருக்கணும் . அவிச்சு போடப்போட பறக்கும் பாரு இட்லி..ம்ம்…”

குழந்தைகள் எல்லோரும் உடன் இருந்த நாட்களை நினைவில் கொண்டு வந்தது ஆன்ட்டி முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

“ஆமாஆமா ஒன் ஃப்ரெண்ட கூட அவ தம்பிங்க சுடற இட்லின்னு தான் கூப்புடுவாய்ங்க. பறப்பா இட்லின்னா “..மீனு யாரைப்பற்றியோ பேசுவது போல் எங்கேயோ பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 பால் சட்டியில் பிசுக்கு அப்படியே அப்பியிருந்தது தெரிந்தது . ஆன்ட்டி குழம்பை கிண்டிக்கொண்டே ஆயா கையில் இருந்து அதை வாங்கி ஒரு ஸ்பூனால் வரண்டி மறுபடியும் கழுவி வைத்தார் .வற்றி சுருங்கியிருந்த மார்புகளின் ஊடே பூணூல் போல முந்தானை கிடக்க கூனிக்கொண்டே ஆயா இங்கும் கொல்லைக்குமாக நடந்து கொண்டு இருந்தது .

“ஏன் ஆயா இந்த முந்தி எதுக்கு தான் போட்டிருக்கீங்க  ?” என்றேன் சுருங்கி ,பிரிபிரியாய் இருந்த அதன் கைகளைத் தடவிக்கொண்டே . தொட்டதில் கூச்சமும் அத்தனை நேரமும் இல்லாத வெக்கமுமாக “போ பாப்பா “என்று முந்தியை சரி செய்து கொண்டு நரைத்து விட்ட இமைகளின் ஊடே வெளிச்சமாய் சந்தோஷம் கசிய சிரித்துக் கொண்டது ஆயா .  திரும்பிப் பார்த்தேன் மீனு , ஆன்ட்டி முகத்திலும் ஆயாவின் சிரிப்பு .

“ஏங்க ஆன்ட்டிஆயா வயசுல அழகா இருந்திருக்கும் போலயே ?”

“ஆமா  ? கிண்ணுன்னு அப்புடி அழகா இருக்கும் . எனக்கு வெவரம் தெரியப்ப இருந்து பாக்கறேனே .”

சுரைக்காய் குழம்பு ,பாகற்காய் வதக்கல் அதிலும் இன்னொரு கை சமைத்துப் போட்டு பார்த்துப் பார்த்துப் எடுத்து வைக்க சாப்பிட்டது பெரிய  ஆறுதலாகவும் நிறைவாகவும் இருந்தது. பரிமாறிக்கொண்டே “அன்னிக்கு உண்ணா செஞ்சிருந்தா பாரு பாகக்கா வதக்கல்   அப்புடித் தான் இருந்துச்சு ..என்னமோ கொஞ்சம் வெல்லமும் பொட்டுக்கடலையும் போட்டாளாம் .”  என்றார்.

“போதும் மா ஒன் மருமக புராணம் . ஆமா அது என்ன அவள டெலிவரிக்கு இங்க வரச்சொல்லியிருக்கியாமே வள்ளியம்ம சொன்னா ? ஏன்ம்மா ஒனக்கு பாக்கவே ரெண்டு ஆள் வேணும் , இதுல அப்பா வேற . நீ எப்புடி மா புள்ளப்பேறு எல்லாம் பாப்ப ?”

“ஏன் மீனு அவ எங்க போவா அவ சித்தி பாப்பாளா சொல்லு . நாம தான பாக்கணும் ?” மீனுவின் தம்பி மனைவி உண்ணா நிறைமாதமாய் இருந்தாள் . அம்மா இல்லை அவளுக்கு . இப்போ பிரசவம் பார்க்க அவள் சித்தியை நம்பி அனுப்பாமல் தானே வைத்துக்கொள்வதாய் சொல்லியிருக்கிறார் ஆன்ட்டி .ஆச்சர்யமாய் எல்லாம் இல்லை எனக்கு ,மீனு அம்மாவின் குணம் தெரிந்தது தான்.எங்களுக்கு சாப்பாடு போட்டு விட்டு அவள் அப்பாவுக்கு தட்டில் போட்டுக்கொண்டு போனார் .

  மீனுஅப்பா நடத்தும் பள்ளிக்குப் போய் , ரெஜிஸ்டர் செக் செய்து , நூலகத்துக்கு வந்திருந்த புத்தகமெல்லாம் கணக்கெடுக்க உதவி, வேலை முடிந்து பறந்து போனோம் அவள் வீட்டுக்கு மறுபடி .

“போச்சு டீ இன்னிக்கு 5.30 பஸ் எப்புடி முடியும் ? மண்டகப்படி தான் மறுபடி ” என்றேன்.

“விடு இது என்ன புதுசா ஒனக்கு ? எப்பவும் வாங்கறது தான ? என்னமோ அதிசயமா  பேசற ?”

காபி வேண்டாம் என்று மறுத்து விட்டு அவள் அம்மா  கொடுத்த சுண்டை , வெண்டைக்காய்  புதினா கட்டோடு ஆயாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். பறித்து வைத்திருந்த ரோஜாக்களை மறந்து விட்டோம் என்று பின்னாலேயே வந்து கொடுத்து விட்டு சென்றார்.ஒரு பத்து  நிமிட நடையில் தெரு முக்கில் பஸ் ஸ்டாண்ட் . இனி அடுத்த பஸ் வர காமணி ஆகும்  காபியாவது குடிச்சிட்டு வந்திருக்கலாம் அங்கலாய்த்துக் கொண்டாள் .

“இது என்ன மண்டபமா மீனு” என்றேன் அருகில் இருந்த ஒரு பெரிய பில்டிங்கைப் பார்த்து .

“இல்ல இது எங்க அம்மாவோட ஆயா வீடு , அதோ ஊரணிக்கு அந்தப்பக்கம் தெரியிது பாரு அது தான் எங்க அப்பத்தா வீடு . அம்மாவும் அப்பாவும் அத்தை புள்ள மாமன் புள்ள தான ? அங்கேருந்து சைக்கிள்ல வருவாங்களாம் எங்க அப்பா ,அம்மாவப் பாக்க நிச்சயம் பண்ண அப்பறம் . ஒனக்கு தெரியாது இல்ல? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப ஜாஸ்தி . எங்க செந்திப்பாவ தான் எங்க அம்மாவுக்கு பேசி இருந்திச்சு . அவருக்கு ஆக்சிடெண்ட் ஆகவும் தான் அம்மாவ அப்பாக்கு கட்டிட்டாங்க .

சரட்டென்று வந்து நின்ற பஸ்ஸில் ரொம்ப உயரமான படிகளில் ஏறத்தடுமாறினேன் . மீனு பிடித்து இழுத்து ஏற்றினாள் . மறுபடி ஒரு சுற்று சுற்றி மீனு வீட்டு வழியாகத்தான் சென்றது பஸ் . திண்ணையில் அமர்ந்திருந்த ஆயாவுக்கு போனியில் காபியை நீட்டிக்கொண்டு நின்றிருந்தார் தெய்வா ஆச்சி .

“ஏன் மீனு, உங்க அம்மா கையால கொதிக்கக்கொதிக்க காபி வாங்கி குடிச்சா ஆயா மனசுல, ஒடம்புல இருக்க சுருக்கமெல்லாம் போயிரும் இல்ல  ? “என்றேன் . லேசாய் சிலிர்த்து உதறின கையை என் இடுப்போடு சேர்த்து அணைத்து தோளில் சாய்ந்து கொண்டாள் மீனு .

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>