/* ]]> */
Aug 042012
 ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்…
ஊழலுக்கு எதிராக , அதிலும் குறிப்பாக காங்கிரஸ் அரசின் உச்சக்கட்ட ஊழலை பார்த்து கொதிப்படைந்து போயிருக்கும் கோடானுகோடி இந்தியர்களுள் நானும் ஒருவன் …

என்ன தான் எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி யும் , கம்யூனிஷ்டும காங்கிரஸின் ஊழலை எதிர்த்தாலும் அதை அரசியலாகத்தான் மக்கள் பார்ப்பார்கள் , அதையே அரசியல் சாராத ஒரு தனி மனிதன் செய்யும் போது அனைவரிடமும் ஒருவித பரவசமும் , உத்வேகமும் தொற்றிக்கொள்ளும் … ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றிக் காட்டிய காந்தியவாதி அன்னா ஹசாரே முதன் முதலில் ஜன் லோக் பாலை வலியிறுத்தி உண்ணாவிரதம் இருந்த போது அனைவருக்கும் ஒரு உற்சாகம் பிறந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை …  அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு இரட்டடிப்பு செய்த போது மீண்டும் அன்னா களத்தில் குதித்த போதும் மக்களிடையே அதே வரவேற்பு இருந்து …

ஒரு பக்கம் அன்னாவிற்கு ஆதரவு பெருகிக் கொண்டே போனாலும் மறுபக்கம் அன்னாவின் ஊழலுக்கு எதிரான மசோதா நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் , அவர் ஒரு விளம்பர விரும்பி என்பதுமான விமர்சனங்களும் வளர்ந்து கொண்டே தானிருந்தன … பழுத்த அரசியல் விமர்சகரும் , காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தன் பத்திரிக்கையில் விமர்சித்து வருபவருமான சோ அவர்களே அன்னா அண்ட் குழுவினரை கோமாளிகளாகவே தொடர்ந்து சித்தரித்து வருகிறார் … சோவுடைய நையாண்டிகளை நான் ரசிப்பவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தே கொண்டிருந்தேன் …

இருப்பினும் கொஞ்சம் நுணுக்கமாக ஜன்  லோக் பாலின் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்த போதும் , அன்னாவை சுற்றியிருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்க்கும் போதும் , முன்னுக்கு பின் முரணான சில கருத்துக்களை அவர்கள் கூறும் போதும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது … அதனால் தானோ என்னவோ இந்த முறை அன்னா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது எனக்கு பெரிதாக எந்த சலனமும் ஏற்ப்படவில்லை … அது மட்டுமல்லாமல் இப்போது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அன்னா அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் , ஆனால் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது மேலும் நெருடலையே கொடுக்கிறது ..

அரசியலே சாக்கடை , அரசியல்வாதிகள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்த அன்னா குழுவினர் இப்போது தடாலடியாக அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்திருப்பது அவர்கள் நம்பகத்தன்மையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது… சட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் அரசியல் ரீதியான ஆதரவு தேவை , அரசியல்வாதிகள் எல்லோரும் ஒத்துழைத்தால் தான் அந்த வகையான சட்டத்தை கொண்டு வர முடியும் … ஊழலில்  ஊறிப்போன அரசியல்வாதிகள் அதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் , இதே சட்டத்தை வைத்து உயர் பதவியில் இருக்கும் ஊழல் செய்யாதவர்களை கூட ப்ளாக்மெயில் செய்யும் அபாயமும் இருக்கிறது …

ஆரம்பத்திலிருந்தே அன்னா குழுவினருக்குள்ளே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது , அதனால் தான் ஒரு நாள் மத்திய அரசை ஆதரித்தவர்கள் அடுத்த நாள் திட்டித் தீர்த்தார்கள் … இப்போது இருக்கும் சூழ்நிலையில் அன்னா கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியை பிடிப்பதென்பது நடக்காத காரியம் , அப்படியே பிடித்தாலும் இந்த மசோதாவை நடைமுறைப் படுத்த முடியுமா என்பது இமாலய கேள்வி … தற்போதைய நிலையில் தனித்து ஆட்சி என்பது எட்டாக்கனியாகி விட்ட நிலையில் அன்னா யாருடன் கூட்டு சேர்வார் ?

காங்கிரஸுடன் சேர முடியாது , பி.ஜே,பி யுடன் சேர்வதற்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு விருப்பமிருந்தாலும் யாராவது மதவாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தால் அதையும் செய்ய முடியாது … ஏற்கனவே ஊழலில்லாத மோடியின் ஆட்சியையும் , அவரையும் நியாமாக பாராட்டி விட்டு பின்னர் போலி மதவாதத்திற்கு பயந்து தன் கருத்துக்களை மாற்றியவர் அன்னா … இந்த சம்பவத்தின் போதே அரசியலில் குதிப்பதற்கு  அவர் ஆர்வமாய் இருப்பது ஒரளவு புலனானது , ஏனெனில் அரசியல்வாதிகள் தான் ஓட்டுக்கு பயந்து போலி மதவாதம் பேசுகிறார்கள் என்றால் அரசியல் சாரா இயக்கத்திலிருக்கும் அன்னா பயந்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை …

ஒவ்வொரு உண்ணாவிரதத்தின் போதும் தவறாமல் அவரை லைவாக ஆங்கில சேனல்கள் காட்டிய போது சில சமயங்களில் அவையெல்லாம் தமிழககத்தில் கடந்த ஆட்சியின் போது கலைஞர் டி.வி யில் ஒளிபரப்பான ” முத்தமிழ்கலைஞர்  ” அவர்களை நாயனாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை நியாபகப்படுத்தின … நிச்சயம் இதற்கு அன்னாவை குறை கூற முடியாது , ஆனாலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் அன்னாவையும் ஒரு விளம்பர பிரியரோ என்ற அச்சத்துடனே பார்க்க வைத்தன …

அரசியலில் ஈடுபடவும் , கட்சி ஆரம்பிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது , அதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடுமில்லை , ஆனால் அன்னா அரசியலில் ஈடுபட்டு தான் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதே எனது கேள்வி . எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆரம்பத்தை பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தான் கட்சியை தொடங்கியிருப்பார்கள் , ஆனால் அது போக போக மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அவர்களுடைய மாக்களுக்கும் , சுற்றியிருக்கும் கூட்டதிற்குமே பயன்பட்டிருக்கிறது …

அதே போல அன்னாவின் உண்ணாவிரதங்களும் அரசியல் ஸ்டண்டா ? தனிப்பட்ட முறையில் அன்னா நேர்மையாக இருந்தாலும் கட்சியிலிருப்பவர்கள் அனைவரையும் அதே போல கட்டுக்கோப்பாக வைக்க முடியுமா ? என்பது கேள்விகளெல்லாம் நம்மை குடைகின்றன … ஏனெனில் நம்மூரில் மன்மோகன்சிங் என்று ஒரு நல்லவர் இருந்தார் … ஒரு காலத்தில் சிறந்த பொருளாதார நிபுணராகவும் , நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாவும் , அப்பழுக்கற்ற நேர்மையாளராகவும் பார்க்கப்பட்டவர் இன்றோ முதலாளிகளின் மீது கொண்ட விசுவாசத்திற்காகவும் , அவர் கடைபிடிக்கும் கூட்டணி தர்மத்திற்காகவும் , அவர் மீதே எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும் அதே நடுத்தர வர்க்கத்தினரால் எதிரி போல பார்க்கப்படுகிறார் … அதைப் போல அரசியலில் குதிக்கப் போகும் அன்னாவும் மற்றுமொரு மன்மோகன் போல மாறிவிடக் கூடாது என்பதே மக்களின் ஆதங்கம் …

.. அனந்து ..

 

 

, , , , , ,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>