ஈசனின்ஆசிர்வாதத்தால் பனி லிங்கம் தரிசனம் நல்லபடியாக நடந்தது . இறங்க ஆரம்பித்தோம் .

பால்டாலில் திருட்டு கிடையாது .அமர்நாத் பனிலிங்கம் தரிசனம் செய்து திரும்பி வரும்வரை நமது உடைமைகள் கூடாரத்தில் பத்திரமாகவே இருக்கும் .
இறங்கும் பாதைக்கு எதிர்முகமாக உட்காரவைத்து தேவதூதர்கள் இறங்க ஆரம்பித்தனர் . கூட்டநெரிசல் இன்னும் அதிகமாகியது . ஐந்து அடி அகல மலைப்பாதையில் அளவுகடந்த நெரிசலைப்பார்க்கும்போது என்னவோ செய்தது .மலை ஏற்றத்தின் போது உதவி செய்த எம்பெருமான் இறங்குவதற்கும் கண்டிப்பாக உதவுவார் என்று பொறுமையாக இருந்தேன் . பக்தர்களே ! இந்தக் கலியுகத்தில் மக்கள் தொலைத்த பல நல்ல குணங்களுள் ஒன்று ”பொறுமை” .குறிப்பாக இந்திய மக்கள் ”அவசரம்” என்கிற வியாதியால் தாங்களும் துன்புற்று அடுத்தவர்களையும் இக்கட்டுக்கு ஆளாக்குகின்றனர் .அதுவும் இந்திய ஆண்களுக்கு உள்ள அவசரம்” மூக்கைப்பொத்த வைக்கும் .
அடியேன் அமெரிக்காவில் ஐந்து மாதங்கள் மகனுடன் தங்கி அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து வந்துள்ளேன் .அங்குள்ள ஆண்கள் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை . எச்சில் துப்புவதும் கிடையாது . ( ஆனால் இருட்டிய பிறகு நமது உயிருக்கு உத்தரவாதமில்லை ) . மிகவும் வேகமாகத்தான் நடப்பார்கள் .ஆனால் பேருந்து நிலையம் , இரயில் நிலையம் , விமானநிலையம் மற்றும் பொது இடங்களிலும் வரிசையில்தான் பொறுமையாகத்தான் ஏறுவார்கள் . நமது பிரயாணத்திற்கு வருவோம் . எல்லைப்பாதுகாப்புப் படையினர் தொண்டைக்கிழியக் கத்திக்கொண்டிருந்தனர் . டோலிவாலாக்களின் நிலைமைதான் பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது . யாத்திரிகர்களைத் தூக்குவதும் பத்தடி நடப்பதற்குள் மீண்டும் டோலியை இறக்குவதும் , வேதனையாக இருந்தது .

பனியின்மீது நடப்பதற்கு பயிற்சி அவசியம் .சில இடங்களில் தேவதூதர்களுக்கும் வழுக்கும்.
கூடாரத்தை அடைய நடுச்சாமம் ஆகிவிடும் என்றார்கள் . ஒன்றும் புரியவில்லை .பசி ,தூக்கம் .பொறுமையை இழக்க ஆரம்பித்தேன் . அடியேனுக்குப் பிரியமான பாபாவிடம் வேண்டினேன் .இரவு 8 மணிக்குள் கூடாரம் சென்றடைய வேண்டும் என்று .அவ்வளவுதான் அருகே நின்று கொண்டிருந்த ஒரு எல்லைப்பாதுகாப்புப் படையினர், அடியேனைச் சுமந்து நின்றுகொண்டிருக்கும் தேவதூதர்களைப்பார்த்து ”ஏய் சலோ” என்று இந்தியில் கூறினார்கள் . பறந்தார்கள் தேவதூதர்கள்.இருபுறமும் நெரிசல் அப்படியே நிற்க . எனது பல்லக்கு மட்டும் மின்னல் வேகத்தில் இறங்க ஆரம்பித்தது . வழியில் ஒருவரும் குறுக்கிடவில்லை .மூன்று கிலோ மீட்டர் சிறிதும் நிற்காமல் கூட்ட நெரிசலைக் கடந்து பல்லக்கை இறக்கினார்கள்.அந்தக் குளிரிலும் வியர்வையில் நனைந்திருந்தார்கள் . பாபாவின் கருணை !
பக்தர்களே ! கடவுளிடம் ( நம்மை மீறிய சக்தி ) மனமுவந்து கையேந்துங்கள் .கோபப்படாதீர்கள் .திட்டாதீர்கள் . ஏன் என்று கேள்விகேட்காதீர்கள் .கெஞ்சுங்கள் . ”அவன்” இல்லை ” என்று சொல்லுவதில்லை . அடியேனது 49 வருட அனுபவம் .
ஒருவழியாக கூடாரம் வந்து சேர்ந்தேன் . பரம்பொருளுக்கும் , தேவதூதர்களுக்கும் மனதார நன்றி செலுத்தி , லங்கார்-இல் வயிறார உணவு உட்கொண்டேன் . எங்கள் குழுவில்அனைவரும் நலமாக வந்து சேர்ந்தனர் .-ஹெலிகாப்டரில் முன் பதிவு செய்த ஒரு தம்பதியர்களைத் தவிர . இரவு உறக்கத்தை எந்த கேளிக்கை இரைச்சலும் பாதிக்கவில்லை . நிம்மதியான ஆழ்ந்த நித்திரை .மறுநாள் ஸ்ரீநகருக்குத் திரும்பினோம்.
தாமதமாக வந்த அந்த தம்பதியரின் அனுபவங்கள் பின்வருமாறு :
அவர்களது ஹெலிகாப்டர் பயணச்சீட்டில் காலை 11 மணி என்றும், ஒருமணிநேரம் முன்னதாக வரவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது . இவர்களோ 9 மணிக்கெல்லாம் ஹெலிபேட் அருகில் சென்றுவிட்டனர் . சோதனைகளுக்குப்பிறகு உங்கள் முறை வரும்போது அழைப்போம் என்று கூறி சென்றுவிட்டனராம் . திரைப்பட அரங்குகளில் விற்பதைப் போல் அதிகப்படியான தொகையைக் கொடுப்போர்க்கு ( current booking–black ticket ) முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில்அனுப்பினார்களாம் .முன் பதிவு செய்தவர்களை மாலை 4.மணிக்கு மேல்தான் அனுமதித்தார்களாம் . பஞ்சவடி என்ற இடம் வரைக்கும் தான் வானஊர்தி செல்லும் . மேற்கொண்டு கால்நடையாகவோ. (அ) டோலியிலோ (அ) மட்டக்குதிரையிலோதான் பனிலிங்கம் தரிசனத்திற்குச் செல்லவேண்டும் . கிட்டத்தட்ட மூன்றரை கிலோமீட்டர் தூரம் கடக்கவேண்டும் .இந்தத் தம்பதியினருக்கு ஒருவழிப்பாதை பயணச்சீட்டுதான் கிடைத்ததாம் .ஆதலால் இறங்குவதற்கும் சேர்த்து டோலியை பதிவு செய்து கொண்டார்கள் . இரவு 7மணிக்குமேல் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை . இவர்கள் குகையைச் சென்றடையும்போது மணி ஏழாகிவிட்டிருந்தது .மறுநாள் காலையில்தான் தரிசனம் என்பதால் இரவுப்பொழுதை கூடாரத்தில் கழிக்கவேண்டியதாயிற்று .கடுமையான குளிர், அமைதியான சூழலில் சலசத்து ஓடும் நதியின் இரைச்சல் ,எதிர்பாராத செலவு என்று மிகவும் கலங்கிப்போயினராம் .அமர்நாத் கூடாரங்கள் அளவில் சிறியனவாகவும் கட்டில்கள் ஏதும் இல்லாமலும் தான் இருக்கும் . தண்ணீர் புகாத மெத்தையும் ,ஒரு கம்பளியும் இருந்தனவாம் . மேலும் ஐந்து நபர்கள் தங்கும்படியாகவும் , மிகவும் சிரமமாக இருந்ததாகவும் கூறினார்கள் . அதிகாலையில் எழுந்து தரிசனம் முடித்து டோலியில் திரும்ப ஆரம்பித்தனர் ஆனால் டோலிவாலாக்கள் வழக்கமாக மக்கள் செல்லும் பாதையை விடுத்து குறுக்கு பாதை என்று வேறு பாதையில் இறங்க ஆரம்பித்தனராம் ஒருவரும் தென்படவில்லையாம் .மிகவும் கவலை கொண்டனராம் . வெகுநேரம் கழித்து எதிரே ஒரு சிப்பாய் தென்பட்டாராம் . தடை செய்யப்பட்ட அபாயகரமான பாதையில் ஏன் இறங்குகிறீர்கள் என்று அடித்தார்களாம் (டோலிவாலாக்களை). ஏற்கெனவே பல பேர் இந்தப்பாதையில் இறந்துள்ளனராம் . பிறகு ,வழக்கமான பாதையில் திருப்பிவிட்டனராம் .
இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், பயணத்தில் தாமதம் ஏற்பட்டாலும் அவசரப்படக்கூடாது . மற்றவர்களையும் அவசரப்படுத்தக்கூடாது . டோலிவாலாக்களை அவசரப்படுத்தியதால்தான் அவர்கள் அபாயகரமான பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். ( it is better to be late, than to be called ”Late Mr.” )
தொடரும்
பாபா நளினி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




Please comment with your real name using good manners.