ஷிவகோரி –சுயம்பு லிங்கம் (நன்றி கூகுள்)
ஷிவக்கோரி
இத் திருத்தலமானது கட்ரா விலிருந்து என்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது “கோரி” என்றால் குகை என்று அர்த்தம் சுயம்பு லிங்கம் அமைந்த குகை ஆனதால் “ஷிவகோரி” எனப்பெயர் பெற்றது .நான்கு மீட்டர் உயரமுள்ள சுயம்பு லிங்கம் . இத்திருத்தலத்தின்
வரலாறு பின் வருமாறு :
” பஸ்மாசுரன் ” என்ற அரக்கன் , வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தான். கடவுள் காட்சி தராததால்,கோபமுற்று தன உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட போது ,சிவபெருமான் அரக்கனின் முன் தோன்றினார்.என்ன வரம் வேண்டும் ?
கேள் என்றார் .அதற்கு பஸ்மாசுரன் ” தன கையை யார் தலை மீது வைத்தாலும் ,அவர்கள் உடனே சாம்பலாகி விடவேண்டும்” என்ற வரத்தைக்கேட்டான் .தந்தேன் என்று கூறி மறைந்தார் சிவபெருமான்.அரக்கனின் அட்டகாசம்தாங்கமுடியவில்லை.தேவர்களும்,முனிவர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர்.தன ஆணைக்கு இணங்க மறுத்தவர்களை பஸ்மாசுரன் அவர்கள் தலையில் கையை வைத்து சாம்பலாக்கினான் . அனைவரும் ஒன்று கூடி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர் .தங்களைக்காக்குமாறும், பஸ்மாசுரனைக் கண்டிக்குமாறும் வேண்டினர் .சிவபெருமான் அரக்கனை அழைத்தார் .தீயசெயல் புரிவதை நிறுத்தும்படி ஆணையிட்டார். ஆனால் பஸ்மாசுரனோ , மகாதேவனின் ஆணைக்கு இணங்காமல் எதிர்த்து பேசியதோடு மட்டுமல்லாமல் வரமளித்த ஈசனின் தலையிலேயே கை வைக்க முற்பட்டான். வரம் கொடுத்த நாயகன் ஓட ( திருவிளையாடல் ) அரக்கன் துரத்த ,சிவபெருமான் இந்த குகையில் வந்து ஒளிந்து கொண்டாராம் . இந்தத் திருவிளையாடலைக் கண்ட மகாவிஷ்ணு “மோகினி அவதாரம் “( அழகிய பெண்வேடம் ) எடுத்து பஸ்மாசுரனின் முன் தோன்றினாராம் . மோகினியின் அழகில் மயங்கிய அரக்கன் ( இதில் அறியப்படுவது யாதெனின் ,மனைவியைத்தவிர மற்ற பெண்களைக்கண்டு மயங்குபவன் அரக்கனாவான்.) மோகினியைத்தன்னுடன் வருமாறு அழைத்தான் . ஆனால் மோகினியின் உருவத்திலிருக்கும் மகாவிஷ்ணுவோ , பஸ்மாசுரனிடம் முதலில் தான் நடனம் ஆடப்போவதாகவும்,அம்மாதிரியே பச்மாசுரனும் ஆடினால் அவனுக்கு இணங்குவதாகவும் கூறினார் .காமம் தலைக்கேறியதால், அரக்கனும் நடனமாட சம்மதித்தான் . நடனம் துவங்கியது . மோகினியின் அங்க அசைவுகளால் தன்னிலை மறந்தான் பஸ்மாசுரன் .நடனத்தின் ஒரு கட்டத்தில் மோகினி தன தலைமீது தன கையை
வைத்து ஆடத்துவங்கினாள். தன்னிலை மறந்த அரக்கனும் தன் கையைத் தனது தலையில் வைத்து ஆட முற்பட்டபோது
சாம்பலாகிப்போனான் . ( ” தன வினை தன்னைச்சுடும்” என்று பஸ்மாசுரனின் அம்மா அவனுக்கு சொல்லித்தரவில்லை போலிருக்கிறது! )ஒரு வழியாக அரக்கன் அழிந்து போனான். “ஷிவகோரி ” என்கிற குகையின் வரலாற்றை அறிந்துகொண்டீர்களா அன்பர்களே!
நம் பிரயாணத்திற்கு வருவோம் :
தங்கியிருந்த ஓட்டலின் மூலமாகவே ஷிவகோரிக்குச் சென்று வர கார் பதிவு செய்து கொண்டோம்
.கண்டிப்பாக நாங்களும் ஷிவகோரிக்குவருகிறோம் என்று கூறியவர்களெல்லாம் உறங்கச் சென்று விட்டனர் .காரில் தூங்கிக்கொள்ளலாம் என்று நாங்கள் மூவரும் புறப்பட்டோம் ( பெண்கள் முன்னேற்றம் -நாட்டின் முன்னேற்றம் ) அமைதியான இடம் சிறிய சிறிய மலைகளின்மீது ஏறுவதும் இறங்குவதுமாகப் பிரயாணம் சென்றது .ஒரு சில வாகனங்களே வழியில் தென்பட்டன . மூன்று மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு குகை அமைந்திருக்கும் “ரான்சூ” கிராமத்தை சென்றடைந்தோம் .
ஷிவகோரி குகைக்கு ( நான்கு கிலோமீட்டர் )செல்லும் மலைப்பாதை பயணம்
குகையைச்சென்றடைய மூன்று கிலோமீட்டர் மலைப்பாதையில் செல்லவேண்டும் என்றார்கள் .நடந்து செல்வதால் மாலைக்குள் ( கட்ரா )ஓட்டலுக்கு திரும்ப முடியாது , மேலும் மூவரும் பெண்கள் , குறுகிய மலைப்பாதை பயணம் வேறு ,சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து செயல்படவேண்டும் என்பதால் மீண்டும் பல்லக்குப் பயணம் தொடங்கிற்று .
அமர்நாத்,வைஷ்ணவோதேவி யை அடுத்து ஷிவகோரியிலும் பல்லக்குப்பயணம்
ஒருமணிநேரத்தில் குகைவாயிலை அடைந்தோம் .இரண்டு சிறிய மலைகளுக்கு நடுவே குகை காணப்பட்டது. வரிசையில் தான் செல்லவேண்டும் பலத்த காவல் ஒருவர் பின் ஒருவராகத்தான் அனுமதித்தனர் .தவழ்ந்து தான் செல்லவேண்டும்.
மேலே தெரிவது ஷிவகோரி குகை .படிகளில் வரிசையில்தான் செல்லவேண்டும்
இருட்டாகவும் ஈரமாகவும் இருந்தது மேலே ஏற சிலருக்கு உதவி தேவைப்பட்டது. பெரிய குகைதான் .நான்கு அடி உயர சிவலிங்கம், அருகே கணபதி, பார்வதி, நந்திதேவர் குகையின் மேற்புரத்தோற்றம் நாக அமைப்பில் காணப்பட்டது .குகையின்
மேற்புரத்திலிருந்து நீர் கசிந்த வண்ணம் இருந்தது .அங்கே மிகச்சிறிய நுழைவாயில் தென்பட்டது .அதில் நுழைந்தால் அமர்நாத் குகையை
சென்றடையலாமாம் .அதில் சென்றவர்கள் ஒருவரும் இதுவரை திரும்பவில்லை என்பதால் பாதை அடைக்கப்பட்டுள்ளதாம் . சுயம்பு
லிங்கத்தை தரிசனம் செய்த பிறகு மற்றொரு குகைப் பாதை வழியாகத்தான் வெளியே வரவேண்டும் . வெளியே வந்தோம் .வானம்
இருட்டிக்கொண்டு வந்தது .மழை வலுத்தது ,வருடாவருடம் யாத்திரிகர்களின் வருகை அதிகரித்துக்கொண்டு போவதால் ,அரசு பல நல்ல வசதிகளைஏற்படுத்தியுள்ளது . மழை விட்ட பிறகு பல்லக்கில் அமர்ந்து அடிவாரம் வந்து சேர்ந்தோம் .
கட்ரா நோக்கி பயணித்தோம் .
sivakori , katra , pilgrimage , nandhi , pasamasuran , ganapathi , parvathi , lord shiva , ransu, ranchu
சிவகோரி , கட்ரா , ஆன்மீகப் பயணம் , பயணக்கட்டுரை , கணபதி , பார்வதி , ஷிவபெருமான் , பஸ்மாசுரன் , ரான்சு
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments