/* ]]> */
Nov 262011
 

அபிமன்யு ராஜராஜனின் “கதை சொல்லப் போறேன்” (2007) எனும் தலைப்பே புத்தகத்தைப் படித்து முடித்து தான் கீழே வைக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. இருபது சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் முதல் கதையே காதல் கதை -

ஃபிப்ரவரி பதினாலு - ஊனமற்ற பெண் ஒருத்தியின் அவநம்பிக்கையைப் போக்கி அவளுடைய காதல் வெற்றி பெரும் கதை . படிக்கும் யாருக்கும் உற்சாகம் பெருகும் வண்ணம் இருப்பது தான் இந்தக் கதையின் ஸ்பெஷலிட்டி .

கவிதாவின் வீடு – படித்த நண்பர்கள் பலரிடமும் நடத்தின சர்வேயில் பெரும்பாலருக்குப் பிடித்த கதை . அழகாகத் துவங்கி விறுவிறுவெனச் செல்கிறது நரேஷன் . என்னவோ ஏதோவென நாம் யோசியா வண்ணம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது ஆனால் முடிவு எதிர்பாராத விதத்தில் அழுத்தமானது . கடுமையாக கனக்கச் செய்கிறது மனதை .

மாற்றம் – ஒரு குழந்தையின் மனநிலையை அழகாக சித்தரித்துள்ள கதை. தாயற்ற பர்பி எனும் அந்த சிறுவன் கதையின் முடிவில் எதிர்கொள்ளும் வாழ்வு மாற்றம் மிகுந்த துயர் உண்டாக்குகிறது நம் உள்ளங்களில் .

சொல்லாமலே -உற்சாகமான ஒரு சிறுகதை ..எதிர்பாரா அசத்தல் முடிவு . சோகமாக முடிந்து விடுமோ எனும் பதட்டத்துக்கு நம்மை ஆளாக்கி “அதெல்லாம் ஒண்ணும்  இல்லையே பாரு” என்று புன்னகை ஒன்றை நம் முகங்களில் விரிய விடும் எழுத்து .

ஏலியன் ஃபேப்ரிக்ஸ் -பங்குச்சந்தை நுணுக்கங்களும் அசத்தலான தொழில் நுட்ப அறிவும் கைவரப்பெற்றவர் ஆசிரியர் என்பதைப் புரிய வைக்கும் சிறுகதை . குறும்பும் மெல்லிய காதல் இழை ஒன்றும் ஓடுமாறு எழுதி இருப்பது வெகுவாக ரசிக்க வைக்கிறது.

எலி முக விழிப்பு -அட்டகாசமான நகைச்சுவைச் சிறுகதை . பிரம்மாதமான டைமிங் காமெடி, கலக்கலான சென்னைத்தமிழ், அப்போதைய (இப்போ மட்டும் என்ன? ) ஹாட் டாபிக்கான போலிச்சாமியார்களும் அவர்களை நம்பி ஏமாறும் படித்த முட்டாள்களையும் பற்றியது . எழுத்தில் ஒரு நகைச்சுவை காட்சியை விரிய வைப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது அத்துறையில் இருப்பவர்கள் நன்கு அறிந்தது . எலி முக விழிப்பு படிக்கும் போதே காட்சிக்குக் காட்சி நம் கண்களின் முன் விரிவது தான் மிகவும் ஆச்சர்யத்துக்கு உரிய ஒன்று . மட்டுமல்லாமல் படிக்கும் போது ஒரு புன்னகை பரவுவதே எழுதியவரின் வெற்றி என்றாகும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவு அருமையான காமெடி கலாட்டா இது!

மிரட்டல் - “எளியோனை வலியோன் அடித்தால் வலியோனை வல்லவன் அடிப்பான்” எனப் புரிய வைக்கும் கதை . மிக எளிமையாகத் துவக்கி நீட்டாக முடித்திருக்கிறார் ஆசிரியர்.

நிறை பூஜை - அடேங்கப்பா இரவில் படித்தால் நிச்சயம் உறக்கம் பிடிக்காது. கடுமையான திகில் உண்டாக்கும் கதை . சுகுகாடு பற்றின வர்ணனை பயங்கரம்! கதையைக் கொண்டு சென்றிருப்பதில் செம ட்விஸ்ட் .

சத்தியமேவ ஜயதே - பெயரே சொல்லிவிடும் கதையின் தீமை(theme) . நேர்மையும் வாய்மையும் இன்னமும் இருக்கிறது , அதோடு கூட வாழவைப்பதும் அதுவே தான் . நிராசை அடைய வேண்டாம் என ஆறுதல் சொல்லும் அருமையான ஒரு கதை . ஆசிரியருக்கு ஒரு ஷொட்டு !

இராவுத்தர் பாட்டு - கொஞ்சம் அதிகமாகவே மனதைக் கனக்கச்செய்யும் கதை . வாழ்வின் ஓட்டமும் ,பொருளாதாரச் சிக்கல்களும் ஒரு மனிதனின் வாழ்முறையையே அன்றி மனதின் வளமையை மாற்றி விடாது எனத் திண்மையாக உரைக்கும் கதை . கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே தானே ? நம் அன்றாட வாழ்வில் நாம் பார்த்து மறக்கும் பல ராவுத்தர்களை நினைவில் கொண்டு வந்து, கதை எழுதியதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் ஆசிரியர். கதையின் ஊடாக ஆசிரியரின் இசை ரசனையும் மென்மையாக வெளிப்பட்டிருக்கிறது .

புலி வருது - மிகுந்த சமூக அக்கறை -ஏன்  ? உலகத்தின் மீது , இயற்கையின் மீதே உள்ள காதலையும் அக்கறையையும் ஆசிரியர் கச்சிதமான ஒரு கதையோட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கும் முயற்சி. “வர்டுவல் ரியாலிட்டி” போன்ற தொழிற் நுட்பங்களை எல்லாம் புகுத்தி , கதையின் நாயகன் கதையின் முடிவைத் தீர்மானிக்க ஒரு அருமையான ஃப்ளாஷ் பேக்கைக் கொண்டு வந்து சபாஷ் போட வைக்கிறார் அபி . மிகப் பிரமாதம் அபி. அழிந்து வரும் புலிகள் குறித்து இது சமூகத்துக்கு விடப்பட்டிருக்கும் ஒரு அறைகூவல் தான் .

சக்கரம் - தமிழ் சினிமா உலகின் நிதர்சனத்தை அக்கக்காய் பிட்டு வைக்கும் கதை. ஒரு சக்கரம் சுழல ஆரம்பிக்கையில் எங்கு துவங்குமோ அங்கேயே வந்து முடிவது போல சினிமாவில் ஈடுபடும் நபர் ஒருவரின் துவக்கம் முதல் இறுதிப்படிக்கட்டு வரும் பேசும் கதை . கதாசிரியரின் சினிமா ஞானம் ஆச்சர்யப்படுத்துகிறது.

அது - அடேங்கப்பா – பயமுறுத்தும் பேய்க்கதை . அபியின் வழக்கமே போல் முடிவு அதை விட பயங்கர சஸ்பென்ஸ் .

இன்டரோகேஷன் - மிகத்திறமையாக எழுதப்பட்டிருக்கும் துப்புதுலக்கும் கதை . வித்தியாசமான சிந்தனை. அசத்தலான முடிவு.

ஹலோ - பிரமாதமான வித்தியாசமான கதைக்களன் . வெறும் தொலைபேசி உரையாடல்களினாலேயே கதையை சொல்லி முடித்திருக்கும் உத்தி உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. முடிவும் எதிர்பாராமையின் உச்சம் .

விதி ஓலை - என் பெர்சனல் ஃபேவரிட் கதை . அட்டகாசமான த்ரில்லர் . ஏதோ பழங்காலத்து ஓலைசுவடி , ஜோசியம் என்று செல்கிறதே கதை என்று படித்துக்கொண்டிருக்கும் போதே சூடு பிடிக்கிறது. முடிவு அப்படி ஒரு த்ரில்லிங் திகில். ஓலைச்சுவடியில் எழுதப்படிருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் செய்யுள் எல்லாம் திரு. அபி அவர்களே எழுதியது என்பது ப்ளெஸன்ட் சர்ப்ரைஸ் .

களவாணிப்பய – ஒரு சிறுவன் அறியாவயதில் செய்யும் சின்னஞ்சிறு திருட்டு பெரியவர்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு எப்படி ஒரு கள்வாணி உருவாகிறான் என்பதையும், எத்தனை தான் திருடனாக இருந்தாலும் அவன் மனதின் ஆழத்தில் இருக்கும் மனிதமும் , பிறந்த ஊர்ப்பாசமும் ஊரைக்காக்க அவன் செய்யும் களவாணித்தனத்தையும் ஒரு களவாணியின் வாக்குமூலமாகவே எழுதியிருக்கிறார் அபி. மிகவும் வித்தியாசமான முயற்சி. கதையின் நடை மிக இயல்பான ,அழகானது.

ஹூப்ளி எக்ஸ்ப்ரெஸ் – பிரமாதமான கதைப்பின்னல் – கதாநாயகன் இப்படிப்பட்டவன் என்ற நம் ஆணித்தரமான தீர்மானத்தை அடித்து நொறுக்கி முற்றிலும் மாறுபட்ட ஒரு குணாதிசயத்தை நம் முன்னால் விரிக்கும் போது ஆச்சர்யம் , அசத்தல்.

டின்னர் - பக்காவான, எக்ஸிக்யூடிவ்களின் வாழ்முறையை ..நம் கண்களின் முன் கொண்டு வரும் கதை . நாயகன் நாயகியிடம் வழிவது நல்ல ரொமான்ஸ். முடிவு இதிலும் ஆச்சர்ய சர்ப்ரைஸ் .

முறை - இத்தனை விஷயம் பேசினேன் – ஜாதிக்கொடுமையை விட்டு விடுவேனா ? என்கிறார் அபி. சிறு குழந்தைகள் தேர் செய்து விளையாடுவதில் ஜாதிபூதம் நுழைந்து அவர்களின் பிஞ்சு மனங்களில் கலந்து விடும் நஞ்சையும், கல்வித் தேவதையின் அனுக்கிரகம் கிடைத்து விட்டால் பிறகு எல்லா பூதங்களும் அடிபணிந்து தான் ஆகவேண்டும் எனும் அழகான கருத்தை வலியுறுத்தும் கதை. குழந்தைகளின் இயல்பு மாறாமல் பிள்ளைமையின் அறியாமையையும் ஆசைகளையும் எழுத்தில் வடித்திருப்பது வெகு அருமை.

அருமையான இருபது கதைகள் . பிரமாதமான பிளானிங் என்பதைக் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அரைத்த மாவையே அரைக்காமல் ஒவ்வொரு கதையும் சொல்முறையில், கதைக்களனில், பேச்சு வழக்கில், திட்டமிடலில் என்று எல்லாக் கோணங்களிலும் வித்தியாசமானவை.

ஒரே கதாசிரியர் இத்தனை விதமாகவும் யோசித்திருக்கிறாரா? இப்படி இத்தனை பேச்சு வழக்கில் –அதாவது சென்னைத் தமிழில் , ஊர் ஸ்லாங்கில் அதே சமயம் அட்டகாசமான எக்ஸிக்யூடிவ் ஆங்கிலத்திலும் அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் பேசிக்கொள்ளும் தனித்த பிள்ளை மொழி அதோடும் கூட தெலுங்கு, மலையாள வாடை அடிக்கும் பேச்சு என்று எல்லாவகையான வழக்கும் கையாளப்பட்டிருப்பது ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைக்கிறது. மட்டுமல்லாமல் தொழில் நுட்ப அறிவு வெளிப்பட்டிருக்கும் இடங்கள் அசத்துகின்றன.

பங்குச்சந்தை விபரங்கள் ஆகட்டும், சிறுவர்கள் செய்யும் தேரின் நுட்பமாகட்டும் ஒரு திரைகலைஞனின் பார்வையில் ..எண்ணங்கள் வெளிப்பட்டிருக்கும் விதமாகட்டும் பிரமாதம்.

புலி வருது கதை கதைத்தொகுப்புக்கே சிகரம் வைத்தார் போன்றதொன்று . இன்றைய நிலையில் மக்களுக்கு மிகத்தேவையான ஒரு விழிப்புணர்வை ஊட்டி உள்ள கதை . மாணவர்களுக்கு அவசியம் சொல்லப்பட வேண்டிய கதை.

செண்டிமென்ட் இல்லாமலா எனும் கவிதாவின் வீடு ..முடிவு பெண்களின் கண்களில் நிச்சயம் நீர் துளிர்க்க வைக்கும். ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ஒரு இதமான சர்ப்ரைஸ் . நெஞ்சை வருடும் நிதர்சனத்துக்கு ஒரு ராவுத்தர் பாட்டு.

இப்படி——-” எனக்கு யாரும் இப்படித்தான் இவன் எழுதுவான் என்று முத்திரை குத்திவிட முடியாது, நான் பல்திறமையாளன் என்னால் எதுவும் முடியும் !எல்லாம் முடியும்!” என்று அபிமன்யுராஜராஜன் அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கும் தொகுப்பு தான் கதை சொல்லப்போறேன்.

மேலும் பல அருமையான நூல்களை வெளியிட்டு ஆசிரியர் புகழேணியின் உச்சத்தை அடைய வேண்டும் என்று மூன்றாம்கோணத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

பெருமிதத்துடன்

..ஷஹி..

tags

kathai solla poren, abimanyu rajarajan, abi, abimanyu, short stories, short story collection, book review, vaasikalaam vaanga,

கதை சொல்லப் போறேன், அபிமன்யு ராஜராஜன், அபிமன்யு, அபி, சிறுகதைத் தொகுப்பு, வாசிக்கலாம் வாங்க, புத்தக விமர்சனம், நூல் விமர்சனம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>