/* ]]> */
Jul 292011
 

பித்ரு தோஷம்

ஆடி அமாவாசை பித்ரு தோஷம்
 

1. பித்ரு தோஷம் என்றால் என்ன?

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

2. அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும்  பித்ரு தோஷம் உண்டு.

3. அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம்  செய்வதும், திருவெண்காடு சென்று  திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

4. அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது.  அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.  ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும்  வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும்,  பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள்  ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

5. எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி  கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று  கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

6. ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இது வருவது ஏன்?

ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். தெய்வத்தை வணங்காவிட்டால், சாமி கோபித்துக்கொள்ள மாட்டார். ஆனால், தென்புலத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். அவற்றைச் செய்யத் தவறினால் வருவதுதான் பித்ரு தோஷம்.

பிதுர் தோஷம் நீக்கும் ஆடிமாத வழிபாடு:-

தட்சிணாய காலத்தின் முதல் மாதமான  ஆடிமாதம்  இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடிமாத அமாவாசை பிதுர்களாகிய மறைந்த நம் முன்னோர்கள் பூஜைக்கு ஏற்றதாக போற்றப்படுகின்றது. ஆடி அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும். இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை  திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி , கடற்கரை ஸ்தலங்களன ராமேஸ்வரம், தனுஷ்கோடி , முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புஹார், வேதாரண்யம், கொடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. அப்போது மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு , தேங்காய் , பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள். பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்கிறார்கள்.

தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற இடம்தான்.

கேரளாவிலும் ஆடி அமாவாசை:-

ஆடி அமாவாசையை முன்னிட்டு, கேரளாவில் அனைத்து கோவில் குளங்கள், ஆறுகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு ‘ வாவு பலி ‘ எனும் பித்ரு தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள் நற்கதி அடைவதற்காகவும், அவர்களின் ஆசியால் குடும்பத்துக்கு நல்வாழ்வும், வளமும் கிடைப்பதற்காகவும் இதை அவர்கள் செய்கிறார்கள்.  அமாவாசையைக் குறிக்கும்  ‘ உவா ‘ எனும் தமிழ்ச்சொல்லே மலையாள மொழியில் ‘ வாவு ‘ என்று அழைக்கப்படுகின்றது.

கேரளாவில் உள்ள  திருவல்லம் பரசுராம சுவாமி கோவில், அருவிக்காரா மற்றும் சங்குமுகக் கடற்கரை, வர்க்கலா ஜனார்த்தன சுவாமி கோவில், பெரியாறு மற்றும் பாரதப்புழா ஆற்றங்கரைகள் ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான மக்கள் ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க குவிவார்கள்.

Tags : tamil aadi amavasai adi amavasai pooja and pithru dosham

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>