/* ]]> */
Aug 022011
 

ஆடி மாதம் வரும் ஆடிப்பூரத்தின் சிறப்பும் அதில் அம்மனுக்கு நடக்கும் ஆன்மீக அலங்காரம் பற்றி ராஜேஸ்வரியின் ஆன்மீக உலக ஒளி உலா இப்போது பேசுகிறது…

வளம் தரும் அன்னைக்கு வண்ணமிகு வளைகாப்பு – உலக ஒளி உலா – ராஜேஸ்வரி

பூத்தவளே,புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே.பின் கரந்தவளே.கறைக்கண்டனுக்கு

மூத்தவளே.என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னையேன்றி மற்றோர்தெய்வம் வந்திப்பதே !


அம்பிகை பெயரிலேயே வழங்கப்படும் புலவர்அபிராமி பட்டர் போற்றிய அன்னை ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைக்கும் தாயாக கொண்டாடும் நாள். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும், மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும், ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும், புத்தேளிர் கூட்ட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள்.

 

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர்.

 

பசுவேறி அருள் கொடுக்கும் பரமேட்டி சிவ சொர்ணாம்பிகை

 

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு,  சக்கரைக் காப்பு, கற்கண்டு காப்பு என காக்கும் அன்னையை காப்பிட்டு கூப்பிடுவதுண்டு. அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

 

தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா

மனம் தரும், தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிலா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே

கனம் தரும் பூங்குழளாள் அபிராமி கடைக்கண்களே” 

 

பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், பாசாங்குசம் ஏந்தி, அபய முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், அன்னை நீலாயதாக்ஷி (கருந்தடங்கண்ணி) மகப்பேறும், மகத்தான செல்வமும், வேண்டுபவர்க்கு வேண்டியதையும், நினைத்த நல்லவற்றை நடத்திக் கொடுத்தும், அழகுத் திருக்கோலத்தில் இருந்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறாள். நிலவின் ஒளியை மறைக்கும் ஒளி மிகுந்த திருமுகம், அருளும் கருணையும், வாத்ஸல்யத்தையும் வாரி வழங்கும் நீலத்திருக் கண்கள்.நிறைந்தவள் அன்னை நீலாயதாக்ஷி 

 

 

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மையிலங்கு கண்ணிக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகத் ஜனனிக்கு, ஜகன் மாதாவிற்கு, அவளுக்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி.

 

 

இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

 

 

 ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகிறது. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

 

 

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு.  திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். சைதை காரணீஸ்வரர் ஆலயத்தில் சொர்ணாம்பிகை அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் அழகையும் கண்டு களிக்க ஆயிரம் கண் வேண்டும்.

மேல் மருவத்தூரில் ஆதி பரா சக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

உயர் அரங்கருக்கு கண்ணி உகந்தளித்த 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்

 [andal.jpg]

 

வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடபப்டுகின்றது. ஏனென்றால் இன்று தான் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள், பூமி பிராட்டியார் மண்ணுலகில் உள்ள நாம் எல்லாரும் உய்ய பெரியாழ்வாரின் திருமகளாராய் திருஅவதாரம் செய்து எம்பெருமானுக்கு பாமாலையும், பூமாலையும் சாற்றி , நாம் எல்லாரும் உய்ய வேத சாரத்தை எளிய தமிழில் திருப்பாவையாகப் பாடினார். எனவே வைணவ தலங்களிலும்

ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது

 

ஆடிப்பூரத்தன்று சந்தனக்காப்பும் வளைகாப்பும்

கண்டருளும் கற்பகாம்பாள்

அன்னை, அழகு ரூபம் கொண்டு பல்லாயிரக்-கணக்கான கண்கள் கொண்டவளாகத் தோன்றியதால், சதாக்ஷீ (சத + அக்ஷம் – கண்) ஆனாள். ஆயிரம் ஆயிரம் கண்களால் அருள்பார்வை நோக்கிய அம்பிகையின் திருவடிவில்,  அற்புதம் – தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், கனிகள், கீரைகள், மூலிகைகள் என்று பற்பல உணவுகளை, தமது திருமேனியெங்கும் நிறைத்தும் தாங்கியும் அன்னை காட்சி தந்தாள்; எனவே, சாகம்பரி (சாக – காய்கனி தொடர்பாக; அம்பரம் – ஆடை; காய் கனிகளையே ஆடையாகத் தரித்தவள்) ஆனாள். உலகின் தவிப்பைத் தீர்த்து உணவிடுவதற்காக, தாமே உணவுக் களஞ்சியமாக அன்னை அருள்பாலித்த வடிவமே, சாகம்பரி தேவி!

 

பரதேவதை, சாகம்பரியாக ஆவிர்பவித்து,கோடி சூரியப் பிரகாசம் தன்னுள் ஐக்கியப்பட்ட அம்பிகை தன் கரத்தில் தாமரை ஏந்தியிருக்க அந்தத் தாமரையை வண்டுகள் சுற்றிச் சூழ்ந்திருப்பது போல் காய்கள், கனிகள், வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை அவளுடைய பற்பல கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும்அன்னை சாகம்பரி தேவி

 

பூத வாகனத்தில் முப்பெரும்தேவியாய் 

அருள் பாலிக்கும் கருமாரியம்மன் 


வளைகாப்பு முருகன்

முற்கால மனிதர்களின் முழு முதற் கடவுளாக முருகனே வணங்கப்பட்டிருக்கிறான். குறிப்பாக போர்க்காலங்களில் ஆண்களுக்கும், பெண்கள் கர்ப்பமாக உள்ள சமயங்களிலும் அவர்களுக்கு கந்தனே காத்து நிற்பான் என்ற நம்பிக்கை நிலவியது.

 

போருக்கு செல்லும் ஆண்களுக்கு வேலவனை வேண்டிக்கொண்டு கைகளில் காப்பினை அணிவித்து வாழ்த்தி அனுப்புவார்கள். அது போலவே கர்ப்பிணிகளுக்கும் முருகனை கும்பிட்டு காவலாக காப்பாக இருக்கும்படி வேண்டி வளையல் போன்ற காப்பினை அணிவிப்பார்களாம். பிரசவ காலம் வரை பெண்களை உடன் இருந்து முருகனே காப்பாற்றுவான் என்ற அந்த நம்பிக்கையே இன்று கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதன் அடிப்படை காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.வேதங்களும் நம் முன்னோரும் அப்போதே சொல்லியிருக்கிறார்கள் கந்தனே கவசமாகவும் காப்பாகவும் இருப்பான் என்று.

கலியுக தெய்வம் கந்தனை வழிபடுபவர்களை தன் தண்ணருளால் காத்து, மனம் குளிரும் வண்ணம் வாழ்வளிப்பான் அம்பிகை மகிழ்தளித்த பாலன் கலியுக தெய்வம் கந்தக்கடம்பன்.

 

ஆவணி மூல திருவிழா ஈசன்

வளையல் விற்ற லீலை.

ஆடி அசைந்து வரும் திருவாரூர் ஆழித் தேர்

 

 

 

General India news in detail

Tags : A tamil aanmeegam write up on aadi pooram, a festival for goddess amman in the auspicious month of Aadi where Goddess amman in specially decorated for the festival with bangles and chantings from ancient tamil literature like thiruppavai.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>