/* ]]> */
Dec 112011
 

ஒஸ்தி – திரைவிமர்சனம் – OSTHE FILM REVIEW

s

தபங் படத்தை பார்த்த போதே அதை தமிழில் ரீமேக் செய்தால் சல்மான் நடித்த ரோலில் சூர்யா அல்லது விக்ரம் யாராவது நடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும் எதிர்பாரா விதமாக எஸ்.டி.ஆர் ( எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர் ரசிகர்கள் தப்பா எடுத்துக்காதீங்க , இப்படி சொல்லலேன்னா சிம்பு கோவுச்சுப்பார் ) உடன் தரணி கை கோர்க்கவே கில்லி போல பெரிய வெற்றியை கொடுக்காமல் போனாலும் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பினேன் …

கடைசியில், படத்தை தரணி இயக்கினாரா அல்லது லொள்ளு சபா டீமிடம் கொடுத்து தபங் படத்தை கிண்டல் செய்து எடுக்க சொன்னாரா என்று சந்தேகப்படும் அளவுக்கு அவ்வளவு சொதப்பல்ஸ்… ரேவதியின் முதல் கணவருக்கு பிறந்தவர் சிம்பு , இரண்டாவது கணவர் நாசருக்கு பிறந்தவர் ஜித்தன் ரமேஷ் …தன் வளர்ப்பு தந்தை,தம்பி இருவரையும் சிறு வயதிலிருந்தே ஏற்க மறுக்கிறார் சிம்பு …

பெரியவனானவுடன் அடாவடி இன்ஸ்பெக்டராகும் சிம்பு அரசியல்வாதி பாக்ஸர் டேனியலின் ( சோனு சூத் ) அடியாட்களிடம் இருந்து தொகுதி மக்களிடம் ஓட்டுக்கு விநியோகிப்பதற்க்காக கொண்டு செல்லும் ரூபாய் 75 லட்சத்தை அடித்து புடுங்கி கொள்கிறார். பணத்தை கேட்கும் வில்லனுடன் மோதல் , பானை செய்யும் ரிச்சாவுடன் காதல் , அம்மா இறந்து விடவே அப்பா – தம்பியுடன் ஊடல் , நடுநடுவே பாடல் என போகிறது படம் …

s

இது போன்ற மசாலா படங்களின் பலமே ஹீரோ தான் … மாஸ் அப்பீல் சிம்புவிற்கு இருந்தாலும் அவருடைய பொருந்தாத திருநெல்வேலி பேச்சு ( இதுல பஞ்ச் வேற ), இருட்டில் கூட கூலிங் க்ளாஸ் போடும் அவருடைய ஸ்டைல் , ஆறடி இருக்கும் வில்லனை எக்கி எக்கி பார்த்து எகத்தாளம் செய்து விட்டு ஒவ்வொரு தடவையும் சுட்டி டி.வி குழந்தை போல அவர் போடும் ஆட்டம் , இதற்க்கெல்லாம் மேலே பேன்சி டிரஸ் காம்படீஷனில் வரும் சிறுவன் போல செயற்கை விறைப்புடன் அவர் போட்டுக் கொண்டு திரியும் போலீஸ் யுனிபார்ம் இவையெல்லாம் ஹீரோயிஷமாக இருந்திருக்க வேண்டிய எல்லாவற்றையுமே ஜீரோயிஷமாக மாற்றியது தான் கொடுமை … சிம்பு சல்மான் கானை காப்பியடித்ததற்கு பதில் தன் சொந்த ஸ்டைலான விரல் வித்ததையையே செய்திருக்கலாம் …

சிம்பு ரிச்சாவுடன் பேசும் போதெல்லாம் காவல்துறை என்று சொல்லி கலங்கப்படுத்தினாலும் “உன்ன பாத்து நான் வியக்கேன்” என்று சொல்லும் வசனங்கள் மட்டும் ஒரே ஆறுதல் … வில்லன் தன்னை கொல்ல ஏற்பாடு செய்தவனை வில்லன் கண் முன்னாலேயே கொல்வது , மந்திரி விஜயகுமாரை வில்லனுக்கு எதிராக திருப்பி விடுவது என சில இடங்களில் அட போட வைக்கிறார் …

r

பானை செய்யும் பெண்ணாக வரும் ரிச்சாவுக்கு பேஷன் ஷோவில் வருவது போல இடுப்பை காட்டிக்கொண்டே நடப்பது , சிம்புவுடன் டூயட் பாடுவது தவிர வேறெந்த வேலையுமில்லை … படத்தில் இவரின் பெயர் நெடுவாளியாம் … நட்டுவாக்கிளி கேள்விப்பட்டிருக்கேன் , அதென்ன நெடுவாளி ?… தபங்கில் உற்சாகமாக நடித்திருந்த சோனு சூத்தின் முகத்தில் ஏனோ ஒரு கலையே இல்லை … ஒரு வேலை முடிவு முன்னாடியே தெரிஞ்சிருச்சோ …?

ஜித்தன் ரமேஷுக்கு யாராவது நடிக்க சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் … எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் எப்படி தான் அவரால் நடிக்க முடிகிறதோ …? நாசர் , விஜயகுமார் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் … படத்தின் உருப்படியான விஷயம் சந்தானத்தின் காமெடியும் , தமனின் இசையில் பாடல்களும் …

சந்தானம் தம்பி ராமையாவிடம் ” அதான் அவார்ட் வாங்கிட்டேள்ள , அப்புறம் என்ன ஓவர் ஆக்டிங் ” , மயில்சாமியிடம் ” கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன் ” , குட்லக் லட்சுமணனிடம் ” கோவா பிரேம்ஜி மாதிரியே இருக்க ” என சகட்டுமேனிக்கு கலாய்த்து தன் டைமிங் காமெடியால் படத்திற்கு உயிர் கொடுக்கிறார் …

m

“கலசலா ” பாட்டுக்கு டி.ஆரையும் , எல்.ஆர். ஈஸ்வரியையும் பாட வைத்த காம்பினேஷன் சூப்பர் … தமனின் இசையில் ரொம்ப நாள் கழிச்சு நல்ல குத்து … இந்த பாட்டுக்கு நல்ல சதைப்பிடிப்பான யாரையாவது ஆட விட்டிருக்கலாம் … நோயாளி போல இருக்கும் ஒல்லியான மல்லிகா ஒட்டவேயில்லை …

வில்லனின் அடியாளாக வருபவர் செய்யும் காமெடி, தம்பியின் மணவறையில் அமர்ந்து சிம்பு ரிச்சாவிற்கு தாலி கட்டுவது,அண்ணன் தம்பி சண்டையை வில்லன் பயன்படுத்தி கொள்வது இப்படி சிலவற்றை ப்ளஸ்ஸாக சொல்லலாம் … ஹீரோ – வில்லன் மோதலை வைத்து சுவாரசியமாக பின்னப்படும் காட்சிகளே இது மாதிரியான படங்களுக்கு முதுகெலும்பு….

தில் , தூள் இரண்டிலும் இதை தரணி நன்றாக கையாண்டிருப்பார் … இதில் வில்லனின் பணத்தை அடித்து விடும் சிம்பு அதை அம்மாவிடம் கொடுத்து பீரோவில் பூட்டி வைத்ததை தவிர வேறெதையும் உருப்படியாக செய்யவில்லை … சின்ன வயசு சிம்புவாக வரும் சிறுவன் , ஜித்தன் ரமேஸ் , ஹீரோயின் அப்பாவாக வரும் கணேஷ் இப்படி பொருந்தாத காஸ்டிங் என்றும் நிறைய ஓட்டைகள் …

r

இதே கதை தான் தபங் என்றாலும் சல்மான் அதை தன் தோளில் சுமந்திருப்பார் , அதோடு சோனாக்ஷி , சோனு இப்படி நிறைய ப்ளஸ் அதனால் தான் முப்பது கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 200 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்தது …இந்த படம் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகி விட்டது …

ஒரு வேலை ” தபங் ” படத்தோடு இதை கம்பேர் செய்வதால் தான் எனக்கு படம் பிடிக்கவில்லையோ என்ற எனது சின்ன சந்தேகத்தை இல்லவேயில்லை என்று சொல்லாமல் சொல்வது போல் படம் முடிவதற்கு முன்னாலேயே எழுந்து ஓடிய ரசிகர்கள் தீர்த்து வைத்தார்கள் … வேறெந்த பெரிய பட ரிலீசும் இல்லாததால் பி ,சி சென்டர்களில் படம் ஓடலாம் , மற்றபடி ” கில்லி ” மூலம் பெஸ்ட் ரீமேக் கொடுத்த தரணியின் வொர்ஸ்ட் ரீமேக் தான் ” ஒஸ்தி ” …

ஸ்கோர் கார்ட் : 36

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>