/* ]]> */
Dec 082011
 

சினிமா உலகில் எத்தனையோ விதமான இயக்குனர்கள் இருந்தாலும் , அவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் வணிக ரீதியான வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழக்கமான பாணியில் இருந்து சற்றும் மாறுபடாமல் வசூலை நோக்கியே செல்லும் பார்முலா இயக்குனர்கள் ஒரு வகை , வெற்றி தோல்வியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு பரீட்சார்த்த முயற்சிகள் மூலம் புது அனுபவத்தை கொடுக்கும் டிரென்ட் செட்டர் இயக்குனர்கள் மற்றொரு வகை …

இதில் இரண்டாவது வகை இயக்குனர்களே அதிகம் இளைய தலைமுறையினரை கவர்பவர்களாக இருக்கிறார்கள் … அந்த வரிசையில் கடந்த பத்து வருடங்களில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமான இருவர் செல்வராகவன் மற்றும் கௌதம்மேனன்…இவர்கள் இருவரின் பின்னணியும் மாறுபட்டிருந்தாலும் இவர்களின் படங்கள் இளைஞர்களை கவர்வதில் மாறுபடவில்லை …இருவரும் அதிகம் பேசுவதில்லை , ஆனால் இவர்களின் படங்கள் பேசுகின்றன…

s

செல்வராகவனின்  முதல் படம் “துள்ளுவதோ இளமை” விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களால் வசூலை குவித்தது. நடுபக்கத்தில் ஆபாச படத்தை வெளியிட்டு விற்பனையை அதிகமாக்கிய நம்பர் ஓன் வார இதழ் கூட இப்படத்தை மோசமாக விமர்சித்தது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படத்தில் ஒரு உண்மை இருந்தது …செல்வாவிடம் தைரியமும் இருந்தது…

இந்த படம் முழுக்க முழுக்க செல்வராகவனின் உழைப்பாக இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கஸ்தூரி ராஜாவின் பெயர் இயக்குனராக இடம்பெற்றது … “ காதல் கொண்டேன் ” காதலை மையப்படுத்தினாலும் சிறு வயதில் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் மன ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை சொல்ல தவறவில்லை…

“ 7 ஜி ” ஒரு காதல் காவியம் …படத்தில் ரவிகிருஷ்ணாவும் , சோனியாவும் தெரியவில்லை …கதிரும் , அனிதாவுமே மனதில் நின்றதே இயக்குனரின் வெற்றி …காதல் சம்பந்தப்பட்ட உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாக பதிய வைப்பதில் தான் வல்லவர் என்பதை செல்வராகவன் நிரூபித்த படம் 7 ஜி…

“ புதுப்பேட்டை ” வன்முறையின் புது கோணம் … ரௌடிகள் உருவாவது உடல் பலத்தில்  அல்ல … சூழ்நிலையும் , மன உளைச்சலுமே அதற்கு முக்கிய காரணம் என்பதை காட்சிகளில் தெளிவாக உணர்த்தி இருப்பார்…எதையுமே விசுவலாக சொல்லும் திறமை இவரிடம் அசாத்தியமாக இருக்கிறது …இவரின் தெலுகு ரீமேக் படமான “யாரடி நீ மோகினி”  வெற்றி பெற்றதோடு மெல்லிய உணர்வுகளை மிகையில்லாமல் பதியவும் செய்தது  …

ஆயிரத்தில் ஒருவன் ” பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சி….முதல் பாதி காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தன. இரண்டாவது பாதியில் படம் தடம் மாறியிருந்தாலும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன …படம் குடும்பத்தோடு சென்றவர்களை முகம் சுளிக்க வைத்ததும் உண்மை எனினும் அப்படம் ஒரு மைல்கல் …

தனுஷிற்கு இப்போது ஒரு ரசிகர் வட்டமும் , பிசினஷும் வந்து விட்ட பிறகு கூட “ மயக்கம் என்ன” வில் அவரை கார்த்திக்காக பார்க்க வைத்ததே செல்வராகவனின் பலம்…யாமினியை மட்டும் யாரால் மறக்க முடியும் ?. படத்தை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லா தரப்பினரையும் மயக்கியிருக்கும் … அதை பற்றி அதிகம் கவலைப்படாததே செல்வராகவனின் மற்றொரு பலம் … இப்போது அவருடைய கூட்டணியில் யுவன் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்தாலும் அதை ஜி.வி யின் இசை நிவர்த்தி செய்து வருகிறது …

“ மின்னலே” வில் ஆரம்பித்து “விண்ணைத்தாண்டிவருவாயோ  ” வரை கௌதமிற்கு காதல் கை கொடுக்கிறது . நகர இளைஞர்களிடம் இவரின் படமும் ,பாடல்களும் பெரிய வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன …”காக்க காக்க ” சூர்யாவிற்கு  மட்டும் திருப்புமுனையாக அல்ல , அதன் பிறகு வந்த காவல்துறை சம்பந்தப்பட்ட மற்ற படங்களுக்கும் ஒரு முன்னோடி…இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது..

இதன் அடுத்த பதிப்பாக வந்த “ வேட்டையாடு விளையாடு ” ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் …நீண்ட நாட்களுக்கு பிறகு கமலிற்கு அற்புதமான அறிமுக காட்சி… “ வாரணம் ஆயிரம் ” படத்தில் அப்பா – பையன் உறவை அவ்வளவு அழகாக சித்தரித்திருப்பார் கெளதம் …காதல் தோல்வி பாட்டுக்கு அஞ்சலை ஒரு அக்மார்க் …

இவரைப்போல ஹீரோயின்களை அவ்வளவு அழகாக யாரும் காட்டுவது இல்லை…ஆனால் சிம்புவையும் மிக அழகாக VTV யில் காட்டியிருப்பது புதுசு. காதலின் எல்லா கோணங்களும் இதில் அற்புதம் …கௌதமின் பலம் உணர்ச்சிகளை துல்லியமாக எடுப்பது , இசைக்கு அதிக கவனம் செலுத்துவது …

காதலை வலிக்க வலிக்க சொல்லி விட்டு அடுத்த படத்திலேயே காமுக கொலைகாரனை வைத்து சைக்கோ த்ரில்லரை எடுக்க முடியுமா ? முடியுமென்பதை “ நடுநிசி நாய்கள் ” நிரூபித்தது …. வணிக ரீதியாக குரைக்காவிட்டாலும் குறைந்த செலவில் பாடல்களோ , வாத்தியங்களின் பின்னணி இசையோ இல்லாமல் எடுக்கப்பட்ட புது பாணி படம் …

கௌதமை போல செல்வராகவன் கமலுடன் கைகோர்க்க முடியாமல் போனதில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் …இருவரும்  காதலை தாண்டி மற்ற பரிமாணங்களிலும் பயணம் செய்வதில் ரசிகர்களுக்கு சந்தோசம்… தனுஷ் சிம்பு  இருவரும் நடிப்பில் தேறி இருப்பது இவர்களின் ஆளுமை …நிச்சயம் இவர்களின் அடுத்த படங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு இளைய தலைமுறையினரிடம் என்றும் நீங்காது என்பதே இருவரின் பலம் …

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>