/* ]]> */
Oct 122011
 
DOG

jpg
அந்த இரயில்வே ஸ்டேஷனில்  எப்பொழுதும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருப்பதில்லை..சின்ன ஸ்டேஷன் என்பதால் போலீசுக்கும் அங்கு பெரிதாக வேலை இருக்காது..அவ்வப்போது கேட்கும் இரயில் ஓசையை தவிர , நிரந்தரமாய் கேட்பது அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் உடல்  இளைத்த கருப்பு நாயின் குரைப்பும் , அதை அடக்க  குருட்டு பிச்சைக்காரன் எழுப்பும் தடிச்சத்தமும் …

இந்த நேரத்தில் , அதுவும் ஆள் அரவமற்ற இடத்தில் தலை நிறைய மல்லிகைப்பூவுடனும் , மாநிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய முயற்சியில் தோல்வியடைந்த மேக்-அப் புடனும் முப்பது வயதுக்கு மிகாத தோற்றமுடைய அந்த பெண் ஏன் அமர்ந்திருக்கிறாள் என்று அவளை கடந்து செல்லும் வெகு சிலரை போல நீங்களும் புருவம் உயர்த்தலாம் … அவள் கண்களை சற்று நேரம் உற்றுப்  பார்த்தால் அவள் யாருக்காகவோ ஆவலுடன் காத்திருப்பது  புரியும் …

அவள் முகத்தில் இப்போது பிரகாசம் …”  ஏன் இத்தன லேட்டு ? எம்மா நேரமா காத்து கிடக்கிறது ! ? கொஞ்சம் பொய் கோபத்துடன் அவள் சிணுங்கினாள் …

” ஏன் கோசுக்கிற , வேலைய முடிச்சுப்புட்டு வர வேணாமா ”

” ஆமா கலெக்டர் வேல ”

” கலெக்டர் வேல இல்லன்னாலும் கவெர்மென்ட் வேலைல ”

” இத்த சொல்லியே ஆள மடக்கிப்புடு ”

” இந்தா மொதல்ல இந்த அல்வாவ சாப்புடு ”

” ஏய் ! கடசில அல்வா தான் கொடுக்கப்போறேன்னு சொல்லாம சொல்றியா ?.

” பிடிக்குமேனு வாங்கியாந்தா ரொம்ப தான் வார்றியே ” சொல்லிக்கொண்டே திரும்ப முயன்றவனை அவள் கைகள் இறுக்கியணைத்தன  … அவர்கள் செய்கையில் வெட்கப்பட்டு நிலா சிறிது நேரம் மேகத்திற்குள் மறைந்தது …

jpg
” எவ்வளவு நாள் தான் இப்படி சந்துலயும் , டேசன்லையும் மீட் பண்றது “

   ” கொஞ்ச நாள் பொறுத்துக்க , நம்ம நண்பன் வீடு காலியாவுது ” சொல்லிக்கொண்டே கண் சிமிட்டினான் …

” யாரு , வெளக்கமாத்துக்கு சட்ட போட்ட மாதிரி வெட வெடன்னு இருப்பானே அவனா ?.. அவனும் அவன் பார்வையும் … சுத்தமா சரியில்ல ”

” ஆமா அவன் கூட என்ன குடும்பமா நடத்த போற , சாவிய கொடுத்துட்டு அவன் பாட்டுக்கு போவ போறான் ”

” அது சரி , ஏற்கனவே ஒருத்தன் கூட குடும்பம் நடத்தறதே கஷ்டமா இருக்கு , அதுல இது வேறவா ? ”

” ஊருக்கு போனார்னு சொன்னியே எப்ப வராரு ? ”

” ஆமா அவர் போய் ரெண்டு நாளாச்சு , என்ன பிரயோஜனம் …ம்ம் ..ஒன்னத்தையும் காணோம் ”

” நான் என்ன பண்றது அவ கண்ல மன்ன தூவிட்டு வரதுக்குள்ள போதும்  போதும்னு  ஆயிருது , அவள போட்டுத்தள்ளுனாதான் நிம்மதி  ” பெருமூச்சு விட்டவனின் வாயை பொத்தினாள் அவள் …

அவன் ஒரு நிமிடம் அவளை உற்று பார்த்து விட்டு ” என்ன தான் இருந்தாலும் நீயும் ஒரு பொம்பளதான்னு நிரூபிச்சுட்ட ” என்று சொன்னான்

” அதெல்லாம் ஒன்னும் இல்ல , நீ அவள போட்டுத்தள்ளிட்டு உள்ள போய்ட்டேன்னா அப்புறம் ஏன் கதி ? ”

” அத்தானே பாத்தேன் , நீயாவது அவ மேல இரக்கபடறதாவது   ” வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கைகள் அவளிடம் எதையோ தேடிக் கொண்டிருந்தன …

jp
உர்ர்ர் , உர்ர்ர் ” அந்த சத்தம் இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்தது …

   ” மொதல்ல அந்த நாய துரத்து , கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுதா ?… அவள் சொன்னவுடன் ,  அவன் கையில் கிடைத்த எதையோ அதன் மேல் விட்டெறிய , அந்த கருப்பு நாய் அதற்கு பயந்தது போல பின்வாங்கி திரும்பவும் வந்து லொள் என்றது …

” சனியன் , இந்த நாய பாத்தாலே எனக்கு ஆவாது , வெறி நாய் மாதிரி இருக்கு , சுத்தமா வெவஸ்தையே கெடையாது ,  துரத்து ! … திரும்பவும் அவள் உசுப்பேற்ற அவன் கல்லை பொறுக்கிக்கொண்டு நாயை துரத்தி  ஓட , இந்த சத்தத்தில் எரிச்சலடைந்த குருட்டு பிச்சைக்காரன்

” இந்த நாய்ங்களுக்கு வேற வேலையே இல்ல ” என்று முனகியவாறு திரும்பிப்படுத்தான் …

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>