/* ]]> */
Apr 272018
 

‘வெர்டைகோ’ எனப்படும் தலைச் சுற்றல்:

vertigo

கிறுகிறுப்பு என்பது மிதமான தலைச் சுற்றல், கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான உண்மையான தலைச் சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது , நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாக சுற்றுவதுபோல் தோன்றும்; அல்லது சுற்றியுள்ள பொருள்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்தவகை தலைச் சுற்றல் தொல்லை அதிகம் என்றாலும், இந்த மாதிரி தலைச் சுற்றல் காரணமாக  உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.

வகைகள்:

மிதமான வகை:

இந்த வகை தலைச் சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச் சுற்றலும் சிறிது நேரம் இருக்கும்.  படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.

மத்திய வகை:

இவர்கலுக்குத் தலைச் சுற்றலோடு வாந்தியும் இருக்கும்.படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகவிடும்.

தீவிர வகை:

இந்த வகைதான் மோசமானது. தலைச் சுற்றலும் அதிகமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கி விழுந்துவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.

மினியர் நோய்:

உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால், காதுக்குள் அழுத்தம் அதிகரித்து தலைச் சுற்றல் வருவது ஒருவகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்தவகை தலைச் சுற்றல் உடனே குறையாது. இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்கவேண்டும் என்பதுபோன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாஅக்க் கேட்கும். இதற்கு ‘மினியர்’ நோய்  ( Miniere’ disease)  என்று பெயர்.

ஒரு திசைத் தலைச் சுற்றல்:

சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசைத் தலைச் சுற்றல்’ ( Benign Paroxysmal positional Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறி[ப்பாக இந்தவகைத் தலைச் சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைச் சுற்றலுக்காக வருகிறவர்களில்  பெரும்பாலானோருக்கு இந்த வகைத் தலைச் சுற்றல்தான் முக்கிய காரணமாக இருக்கும்.

உட்செவி நரம்புப் பிரச்சினை:

ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கி தலைச் சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச் சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக் காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச் சுற்றல் ஏற்படும்.

காரணங்கள்:

பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 % பெருக்கு தலைச் சுற்றல் ஏற்படுகின்றது என்றால், மீதி 20% பேருக்கு மற்ற காரணங்களால் தலைச் சுற்றல் ஏற்படுகின்றது.ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், மிகை ரத்தக் கொழுப்பு, ரத்த சோகை, ஊட்டச் சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத் துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்க விளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக் காயங்கள் என்று பல காரணங்களால் தலைச் சுற்றல் ஏற்படுவதுண்டு.

பரிசோதனைகள்:

ஒருவருக்கு முதல்முறையாக தலைச் சுற்றல் ஏற்படும்போது, முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ள முடியும்.மேலும் தலைச் சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், , அடுத்தமுறை இந்தத் தொல்லை வரும்போது பயப்படாமல், இருக்கலாம். பொதுவாக தலைச் சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும்.முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்,ஆர்.ஐ. ஸ்கேன், உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.

சிகிச்சை:

தலைச் சுற்றலுக்குப் பல தரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெறவேண்டும்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். காது தொடர்பான தலைச் சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. இயவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால், தலைச் சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச் சுற்றல் கட்டுப்படும்.

மினியர் நோய்க்கு காதின் செவிப் பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைஸின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குணமடையாதவர்களுக்கு அறுவை சிகிச்சை உதவுகிறது.

பயிற்சிகள்:

இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘ ஒரு திசைத் தலைச் சுற்றல் உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச் சுற்றலைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்யவேண்டியிருக்கும்.  படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும், தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகைத் தலைச் சுற்றலைத் தடுக்க உதவுகின்றன. இவற்றைக் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்து வந்தால், தலைச் சுற்றல் விடைபெற்றுக் கொள்வது உறுதி.

தடுப்பது எப்படி?:

உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ளவேண்டும். அதிகம் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்கவேண்டும். சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளைனல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.

புகை பிடிக்காதீர்கள்; மது அருந்தாதீர்கள்:

போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள். தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள்.கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். படுக்க முடியாத நிலைமைகளில், தரையில் உட்கர்ந்துகொண்டு , உடலை முன்பக்கமாக சாய்த்து முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள். படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது, நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம்.படுக்கையில் சிறிது  நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலை சுற்றல் ஏற்படாது. படுக்கையிலிருந்து எழுந்ததும், எடஹியாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ , சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.

தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்:

உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு  உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீரகள். அடிக்கடி தலைச் சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள் வீட்டுக் கழிப்பறை குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கமபிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச் சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளை  இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும்.  வீட்டிலும் குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரை விரிப்புகளையே பயன்படுத்துங்கள்.

இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்:

அடிக்கடி ,மாடிப்படிகளில் ஏறி இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். அப்படி சாப்பிடவேண்ட்ய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரை ஆலோசித்து சாப்பிடுங்கள்.

மன அழுத்தத்தைத் தவிருங்கள்:

வாகனத்தை ஓட்டாதீர்கள். ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.  ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>