/* ]]> */
Feb 012013
 

விஸ்வரூபம் – விவாதம் – கமல் – ஜெ -கலை – இன்னும் பிற – அனந்து

எனது முந்தைய பதிவில்  விஸ்வரூபம் படத்திற்கு எதிராக எழுந்த ஆர்ப்பாட்டத்தையும் , அதை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடையையும் குறித்து எழுதியிருந்தேன் . அந்த பதிவில் நான் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததை எதிர்த்து ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார் . அவர் கேட்டிருந்த கேள்விகளும்  , அதற்கான எனது பதில்களும் இதோ :

Anonymous said…

!) ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய
 கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999
 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக
கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய
கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில்
நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம்
இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?
2) குஜராத் கலவரத்தில் நடந்த கொடுமைகளை மையபடுத்தி
எடுக்கப்பட்ட பர்ஜானியா,பிராக் போன்ற படங்கள் சமூக
ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று தடைசெய்யபட்டதே
அப்போது கருத்துசுதந்திரம் பற்றி பேச யாரும்
முன்வரவில்லையே?
3) கமல்ஹாசனின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நல்லவர்களே
இதே கமல் நாளை பகவகீதையை தீவிரவாத நூலாகவும்,கோவில்கள்
ஆசிரமங்களை தீவிரவாதபயிற்சி முகாம்களாகவும்,ஹிந்துக்களை
தீவிரவாதிகளாகவும் சித்தரித்து படம் எடுத்தால் அதனை கண்டித்து
நிச்சயம் பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் வீதிக்கு
வருவார்கள்.அவர்களை கண்டித்து ஸ்டேடஸ் போட
தைரியம் இருக்கிறதா?
4) நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் இலங்கையில்
நடந்தது இனப்படுகொலைகளாக தெரியலாம்.ஆனால்
அந்நாட்டுமக்களின் பார்வையில் அது  ஒரு தீவிரவாதத்திற்கு
எதிரான அரசின் சுதந்திரப்போர்.
அதில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவத்தினர் தியாகிகள்.
கமல்ஹாசன் ஒருவேளை சிங்கள படையின் தளபதியாக
பொறுப்பேற்று ஈழப்புலிகளை வேட்டையாடி இலங்கையை
ஆபத்திலிருந்து காப்பாற்றுவதுபோல் படமெடுத்தால்
அதனை இருகரமேந்தி வரவேற்க நீங்கள் தயாரா?

5) சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவைத்த

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த சம்பங்கள் சினிமாவை மிஞ்சும்
அளவிற்கு சுவாரஸ்யம் உள்ளவை.ஆனால் அதில் தொடர்புடைய
அரசியல் தலைவர்களை மையபடுத்தி ஒரு படம் எடுக்க
எந்த சினிமாகாரனிற்க்காவது தைரியம் உள்ளதா?
6) உசாமா இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்று சொல்லி
லட்சகணக்கான அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா வீசிய
குண்டில் தன் குடும்பத்தை இழந்த அப்பாவி ஆப்கான் இளைஞன்
அமெரிக்க ராணுவத்தை பழிக்குபழி வாங்குவதாக படம் எடுத்து
அதில் அப்கான் இளைஞனாக நடிக்க கமல் மட்டுமல்ல எந்த
கலைகூத்தாடிக்காவது தைரியம் இருக்கா?
7) வெறும் 20 பேர் மிரட்டலுக்கு அரசு பணிந்து படத்தை தடைசெய்வதா?
என்று சிறுபிள்ளைதனமாக ஒருவர் கேள்விகேட்க்கிறார்.சுமார்
80 லட்சம் முஸ்லீம் மக்கள் வாழும் தமிழகத்தில் அவர்கள் நடத்தும்
போராட்டம் என்பது இவருக்கு இவ்வளவு அற்பமாக தெரிகிறது.
முடிவுகளை எடுப்பதில் மிகவும் உறுதியானவர் முதல்வர் ஜே
என்பது சிறுபிள்ளைக்குகூட தெரியும்.அப்படி பட்டவர் இந்த
விஷயத்தில் இப்படி ஒரு தடை முடிவை எடுத்திருக்கும்போதே
அதன் தாக்கம் என்ன என்பது இவருக்கு தெரியவில்லையா?
ஒருவரின் கலைசுதந்திரம் காக்கப்படவேண்டும் என்றுபேச
ஒருவேளை மெய்ஞானம் தேவைப்படலாம். ஆனால்
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனஉணர்வுகளை
புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் போதும்….

பெயரில்லா அல்லது பெயர் சொல்ல விரும்பாத நண்பரே உங்கள் கேள்விகளிலும் ஒரு நியாயம் இருக்கிறது , அதற்கு நான் தருகின்ற பதில்களை நடுநிலையோடு கேட்பீர்கள் என்கிற நம்பிக்கையில் சொல்கிறேன்.

1. நீங்கள் குறிப்பிட்ட டேம் 999 போன்ற படங்கள் இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையையோ அல்லது நடந்து முடிந்த கலவரங்களை  மேலும் ஊதி  பெரிதாக்குவது  போலவோ நீதிமன்றத்திற்கு பட்டதால் தடையை நீக்கவில்லை , ஆனால் தமிழகத்தில் இந்து – முஸ்லிம் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறதா ? அல்லது இந்த படம் அதனை ஊக்குவிக்கறதா ? சொல்லப்போனால் இது போன்ற எதிர்ப்புகள் தான் பிரிவினையை தூண்ட காரணமாய் அமைந்துவிடுகின்றன . மேலும் டா வின்சி கோட் , ஒரே ஒரு கிராமத்திலே போன்ற படங்களை தடை செய்ய முடியாது என்று கோர்டே உத்தரவிட்டதோடு , ஒரு சிலரின் சொந்த விருப்பு , வெறுப்புக்காக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தணிக்கை செய்யப்பட படத்தை திரையிட விடாமல் தடுக்க முடியாது என்றும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறது …

2. இதற்கும் மேற்சொன்ன பதிலே பொருந்தும் …

3. இந்துக்கள் கமல் படங்களை எதிர்த்திருந்தால் அன்பே சிவம் , தசாவதாரம் என்று ஒரு படமும் வந்திருக்காது . கமல் பகுத்தறிவு என்ற போர்வையில் இந்துக்களை தான் தன்  படங்களின் வாயிலாகவும் , பேட்டிகள் மூலமாகவும் தாக்கி வந்திருக்கிறார் . இந்துக்களின் சகிப்புத்தன்மையும் , மனப்பக்குவமுமே அவரை காத்து வந்திருக்கிறது . நீங்கள் சொல்வது போல ஹிந்து தீவிரவாதி (!) எவனாவது பகவத் கீதையை படித்து விட்டு கொலை செய்வது போல ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் அதை இயக்குனர்களுக்கு கொடுக்கலாம் . படத்தில் தான் காட்டிய எல்லா காட்சிகளுக்கும் உரிய ஆதாரங்களை கமல் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார் …

4.நீங்கள் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறீர்கள் . அப்படியே  ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் இலங்கையில் புலிகளின் ஈழ போராட்டத்துக்கு அங்குள்ள முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருந்ததும் , அதனால் அவர்களுக்குள்ளேயும் கொலைகள் நடந்தாகவும் தான் வரலாறு சொல்கிறது …

5. இது நல்ல கேள்வி . அப்படி ஒரு படம் வந்தால் சந்தோசம் தான் . அதே போல அரசியல்வாதிகளும் , போலீஸ்காரர்களும்  படங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலும் ஒரு படம் வெளியே வர முடியாது . அவர்களை அநியாத்துக்கு வில்லன்களாக மட்டும் தான் காட்டி  வருகிறார்கள் .

6. முதலில் ஆப்கான் தீவிரவாதிகள் எந்த முஸ்லீமையும் கொன்றதில்லையா ? அப்போது அங்கே செத்தவர்கள் எல்லாம் எந்த மதத்தினர் ? தலிபானுக்கு எதிராக குரல் கொடுத்ததால் கொடூரமாக சுடப்பட்ட மலிமா எந்த மதம் ? அமெரிக்கா ஆப்கானை தனியாகவா அழித்தார்கள் , அதற்கு உதவி செய்த சவூதி அரேபியாவும் , பாகிஸ்தானும்  இஸ்லாமிய நாடுகள் இல்லையா ? ஆப்கான் தீவிரவாதிகள் பற்றிய படத்தை பார்த்து விட்டு இங்குள்ள முஸ்லீம்கள் ஏன்  கோபப்பட  வேண்டும் ? அப்பொழுது அந்த தீவிரவாதத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களா ? இரட்டை கோபுரத்தை தகர்த்து பல உயிர்களை கொன்ற போது ஏன் அதை எதிர்க்கவில்லை ? காஷ்மீரில் இருந்து சொந்த நாட்டு மக்கள், பண்டிட்டுகள், படுகொலை செய்யப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டபோது, இப்போது நடுநிலை, ஜனநாயக உரிமை, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை என்று பேசும் ஒருசில இஸ்லாமியர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளும் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த கேள்விகளுக்கான பதில்களை யோசிக்க ஆரம்பித்தால் உண்மை புரியும் …

7. மனதை தொட்டு சொல்லுங்கள் எல்லா முஸ்லீம்களும் படத்தை எதிர்க்கிறார்களா ? மனுஷ்யபுத்திரன் , ஜாவேத் அக்தர் உட்பட  பல பக்குவமுள்ள முஸ்லீம்கள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பேசி வருவது உங்கள் காதுகளில் விழ வில்லையா ? பொது மக்களில் எவ்வளவோ முஸ்லீம்கள்  இணைய தளம் மூலம் படத்தை தடை செய்யக் கோரி எழுந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து தங்களின் அதிருப்தியையும்  , கமலுக்கான தங்களின் ஆதரவையும் தெரிவித்து வருவதை நீங்கள் பார்க்கவில்லையா ? நீங்கள் சொல்வது போல தற்போதைய முதல்வர் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலும் , உறுதியும் உடையவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை . இதே முதல்வர் 2004 ஆம் ஆண்டு அதே மன உறுதியுடனும் , துணிச்சலுடனும் கொண்டு வந்த மத மாற்ற தடை சட்டத்துக்கு பிறகு ஏன் அதரவு தெரிவிக்கவில்லை ? இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மற்ற மாநிலங்களில் கூட படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இங்கே மட்டும் தடை எனும் போதே யோசிக்க வேண்டாமா ? …

கடைசியாக , எதை வைத்து ஒடுக்கப்பட்ட சமூகம் என சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை . அமெரிக்காவில் ரிலீசான படத்திற்காக பொது மக்களின் இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் இங்கே சென்னையையே சில நாட்கள் ஸ்தம்பிக்க வைத்ததோடு , இந்தியாவே திரும்பிப்பார்க்கும் ஒரு கலைஞனின் 100 கோடி முதலீட்டு படத்தை அவன் பிறந்த தமிழ்நாட்டிலேயே ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் அளவிற்கு வல்லமை படைத்தவர்கள்  ஒடுக்கப்பட்ட சமூகத்தினரா ?! . ஒரு வேளை இந்தியாவில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தர்கள் எந்த கால கட்டத்தில் என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் …

ஒரு படம் ஒரு சாராருக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் அதை யாருமே பார்க்கக் கூடாது என்று தடுப்பதற்கு உரிமை இல்லை . என் முந்தைய பதிவில் சொன்னது போல ஒரு படத்தை பார்த்து விட்டு சகோதரர்களாக பழகி வரும்  இந்து – முஸ்லீம்கள் இடையே பிரிவினை வரும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது . தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் தான் அதற்கான வாய்ப்பை கொடுக்குமே தவிர கமல் எடுத்த படமல்ல …

உண்மையிலேயே தொடர்ந்து ஒரு சமூகத்தை தவறுதலாக சித்தரிப்பது போல படங்கள் வந்தால் அதை தணிக்கை செய்வதில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க சொல்லி மத்திய  அரசிடம் மனு கொடுக்கலாமே ஒழிய தணிக்கை செய்யப்பட்டு ரிலீசா வதற்கு முதல் நாள் தடுப்பது என்பது நியாயமானதாக தெரியவில்லை . இந்த தடையை பார்த்து விட்டு அடுத்து ஆதி பகவன் படத்தை போட்டுக்காட்ட வேண்டுமென இந்து அமைப்புகள் மனு கொடுத்துள்ளன . இப்படி ஒவ்வொரு அமைப்பினரும் மனு கொடுக்க ஆரம்பித்தால் யாரும் படம் எடுக்க முடியாது . எனவே தயவுசெய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.