/* ]]> */
Jul 152011
 

விஷ்வனாத் ஆனந்தை வீழ்த்திய பெண்- ஜூடிட்

போல்கார்-(ஜூலை 2011 தேதியிட்ட ரீடர்ஸ்

டைஜஸ்டில் வெளியான பேட்டியின் மொழியாக்கம்)

ஜூடிட் ஒரு அசாதரமான சூழலில் வளர்ந்தவர். தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளையும் உலகப் புகழ் பெற்ற செஸ் வீராங்கனைகளாக ஆக்குவதே அவர்களுடைய தந்தையின் இலட்சியமாக இருந்தது.

மூத்த மகள் சூஸன் 1996 இல் உலகச் சாம்ப்பியன் ஆனார். அவருக்கு இளையவர் சோஃபியா ஒரு கிராண்ட் மாஸ்டர். ஜூடிட் 1989 இல் இருந்தே ஆகச் சிறந்த பெண் செஸ் சாம்பியனாக உள்ளார். மட்டுமல்லாமல் ஆண்களுக்கு எதிரான போட்டிகளில் கடினமான ஒரு போட்டியாளராகவும் விளங்குகிறார். 15  வயதில் அமெரிக்காவின் பாபி ஃபிஷெர்ஸை (Bobby fischers) வென்று ஆண்களுக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.

அதோடு உலக சாம்பியன்கள் பலரையும் வென்றிருக்கிறார். போரிஸ் ஸ்பாஸ்கி( Boris spassky), காரி காஸ்பரோவ் (Garry kasparov), அனடோலி கார்போவ் (Anatoly karpov) மற்றும் விஷ்வநாதன் ஆனந்த் (Vishvanath anand).

1. ஆண்களை எதிர்த்தே விளையாட விரும்புகிறீர்கள்..ஏன்?

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் எல்லாவற்றிலும் என்ற நம்பிக்கையோடே வளர்க்கப்பட்டவள் நான். வளர்பிராயத்தில் ஆண்களுக்கு எதிராகவே விளையாடி வந்தேன், அதுவும் மிகச்சிறந்த போட்டியாளர்களுடன். என்வே ஆண்களுக்கு எதிராக விளையாடுவது என்பது இயல்பானதாகிவிட்டது எனக்கு. எப்போதாவது பெண்களோடும் விளையாடுவேன். செஸ் உலகின் உச்சத்தில் உள்ள பெண்களுக்கு என்னை வெல்ல வேண்டும் என்ற கனவு கட்டாயம் இருக்கும்.

2. பதினான்கே வயதில் ஆண்களின் சாம்பியன் பட்டம் வென்ற ஹௌ இஃபான் (Hou yifan) உங்களுக்கு எதிராக விளையாட விரும்புகிறார்?

சீனா இதற்கு முன்பும் உலக சாம்பியன்கள் பலரை கொடுத்திருக்கிறது. என்னுடன் ஒரு தொடர் போட்டி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அவர்களின் நெடு நாளைய திட்டம். வெகு விரைவில் அது சாத்தியப்படலாம். அவர்களும் வெல்வதற்கு மிகக் கடினமானவர்கள் தான் என்றாலும்,  என்னை வெற்றி கொள்ள வேண்டுமென்பது பலரின் ஆசையாக இருக்கும்.

3. நீங்கள் போரிஸ் கெல்ஃபாண்டுடன் ( Boris Gelfand) மோதிய உலகக் கோப்பை மாட்சை செஸ் அறிஞர்கள் சென்ற வருடங்களின் ஆகச்சிறந்த மாட்சுகளில் ஒன்றெனக் கணித்திருக்கிறார்கள். கெல்ஃபாண்ட் வெற்றி பெற்றாலும் அவருடைய ராஜாவின் நிலையை கவிழ்க்க அசாதாரணமாக விளையாடினீர்கள். மென்மையான பெண்களின் ஆட்டம் போலல்லாமல் வலிமைமிக்க போட்டியாக இருந்தது ?

இளம்வயதில் தான் இம்மாதியான அபாயம் பற்றின கவலையற்ற விளையாட்டுத்திறனை பிரயோகித்து வந்தேன். போட்டியாளர் எதிர்பாராவண்ணம் நேரடியாக ராஜாவைத் தாக்கி அவரை நிலை குலையச்செய்து சரணடைய வைப்பேன். இப்போதும் என்னை வலிமையான தாக்குதல் நடத்தும் ஒரு போட்டியாளராகத்தான் கருதுகிறார்கள். ஆனால் இப்பொழுது என் விளையாட்டு முறை வெகுவாக மென்பட்டு விட்டது என்று தான் நான் நினைக்கிறேன்.

4. உங்கள் நான்கு வயதுக் குழந்தை ஹான்னா வும், ஆறு வயது ஆலிவரும் செஸ் விளையாடுகிறார்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரிகளுக்கும் உங்கள் பெற்ரோரிடத்தில் கிடைத்த அதே அடிப்படைப் பயிற்சி அவர்களுக்கும் கிடைக்குமா?

என் கணவர் குஸ்ஃஜ்டவும்( Gusztav) நானும் என் பெற்றோரைப் போன்ற தீவிரமான இலட்சியத்தோடு எங்கள் குழந்தைகளை வளர்க்கவில்லை. மாறி வரும் இன்றைய உலகில் ஒரே திசை நோக்கி அவர்கள் பயணிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர்களே விரும்பும் ஒரு துறையில் அவர்கள் சிறப்பாக பயிற்சி பெறுவதைத்தான் எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு பல மொழிகளை கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆங்கிலப்பள்ளி ஒன்றில் பயிலும் அவர்களுக்கு ஸ்பானிஷ் பேசும் கவர்னஸ் ஒருவரை நியமித்துள்ளோம்.

5. உலக மொழிகள் பயில்வதை ஏன் அத்தனை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள்?

சிறு வயதில் பல வெளி நாடுகளில் போட்டிகளுக்காக நான் தங்க நேர்ந்தது. அங்கு பேசப்பட்ட மொழி தெரியாமல் பல சிரமங்களுக்கு ஆளானேன். அந்த மொழிகளை அறிந்து கொண்ட பின் வாழ்வு எத்தனை இலகுவாக ,அருமையாக இருந்தது என்பதையும் கண்டேன். மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் கலாச்சாரத்தை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளவும் மொழியறிவு மிகவும் முக்கியம்.

6. செஸ் விளையாட்டாளராக இருப்பது முன்பை விட இப்போது சிரமமான துறையாகி விட்டது என்று நினைக்கிறீர்களா?

ஆம்..நிச்சயமாக! அதனுடைய கலாபூர்வமான , விளையாட்டுத்தன்மை மாறி மிகக் கடினமான ஒரு துறையாக அது மாறி விட்டது. உச்சத்தில் இருக்கும் வீரர்களுக்கு தினந்தோறும் பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேர பயிற்சி கூடப் போதாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு வீரருக்கும் விளையாட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் மிகச்சிறப்பான பயிற்சி உள்ள பல உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள். கணிணி அறிவும் ஏராளமாகத் தேவைப் படுகிறது. அதோடு உடலையும் மிகச் சிறப்பாக வைத்திருக்க வேண்டியுள்ளது. வருடம் பூராவும் விளையாட அவர் தன்னை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டுமே.

7. இயந்திரங்கள் இப்போது மிக ஸ்மார்ட்டாகி விட்டனவே? ஐ. பி. எம் மின் (IBM) சூப்பர் கம்ப்பியூட்டர் வாட்ஸனுடன் விளையாட நீங்கள் தயாரா?

இந்த வாட்ஸன் மட்டும் மனிதத் தன்மையோடு இருக்குமானால் நான் தயார் தான். பல மஷீன்களோடு விளையாடி இருக்கிறேன். சூப்பர் கணிணி டீப் ப்ளூ ( deep blue) வை சோதித்த முதல் வீராங்கனை நான் தான். உலக சாம்பியன் கஸ்பரோவை டீப் ப்ளூவின் மேம்படுத்தப்பட்ட மாடல் தோற்கடித்தது. மஷீன்கள் மிகவும் வலிமை கொண்டவையாகி விட்டன. நம்மை விட வேகமானவையாக மட்டுமல்லாமல் தம்முள் ஏதோ ஆறாம் அறிவு கொண்டவை போல  உள்ளுணர்வுடன் செயல் படுகின்றன..சுருங்கச்சொன்னால் அவை எப்பேர்பட்ட கிராண்ட் மாஸ்டரையும் தோற்கடிக்கும் வல்லமை கொண்டவை.

மொழியாக்கம்

…ஷஹி…

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>