
அஜித் நெகடிவ் கேரக்டரில் நடித்த “மங்காத்தா” படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது…இந்த வெற்றியின் மூலம் ரசிகர்கள் தங்கள் மனதைக் கவர்ந்த ஹீரோக்களை வழக்கமான இமேஜ் வட்டத்தை தாண்டி வேறு வேறு களங்களில் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பது புலனாகிறது….
கதைக்கேற்றபடி ஹீரோக்கள் வில்லன் வேடம் தரிப்பது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல..ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து அந்தந்த கால கட்டங்களில் வெளிவந்த இது போன்ற படங்கள் வெற்றி ,தோல்வி இரண்டையும் சந்தித்திருக்கின்றன…
“பராசக்தி” மூலம் அறிமுகமாகி நடிப்பிற்கு புது இலக்கணம் வகுத்த “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் கதைக்கேற்றபடி எந்த விதமான ரோலையும் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தைரியமாக ஏற்று நடிப்பதில் வல்லவர்.. இவர் தேச துரோகம் செய்பவனாக நடித்த “அந்த நாள்” ( வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் பாடல்களே இல்லாமல் எடுக்கப்பட்ட அருமையான கிரைம் படம் ), பெண்களை காம வலைக்குள் சிக்க வைப்பவனாக நடித்த “திரும்பிப்பார்” , எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்து இவர் வில்லனாக நடித்த “கூண்டுக்கிளி” , இது மாதிரியான படங்கள் சில உதாரணங்கள்..
அந்தக்காலத்தில் சிவாஜி பெரிய ஹீரோவாக இருந்து கொண்டே இது போன்ற வேடங்களில் நடித்தது மிகப்பெரிய விஷயம்…ஹீரோ என்றால் ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டும் , தீமை கண்டால் பொங்கி எழ வேண்டும் , நிச்சயம் ஏழையாக இருந்து பணக்காரர்களை எதிர்க்க வேண்டும் , மது அருந்தாமை ,சிகரட் குடிக்காமல் இருத்தல் , தாய் சொல்லை தட்டாமை , பெண்களை தெய்வம் போல மதிப்பது ( கனவில் ஹீரோயின் கூட டூயட் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை ) இப்படி பல எழுதப்படாத சட்டங்கள் இருந்த கால கட்டத்தில் , அதிலும் குறிப்பாக சம கால ஹீரோவான எம்.ஜி.ஆர் இது போன்ற இமேஜ் வட்டத்தை சிறிதும் தாண்டாத நேரத்தில் சிவாஜி எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குரியவை…
வில்லன் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் “நடிகவேள்” எம்.ஆர்.ராதா.. ஹீரோவாக, அதே நேரத்தில் நெகடிவ் கேரக்டரில் இவர் நடித்த “ரத்தக்கண்ணீர்” , எம்.ஆர்.ராதாவின் குரல் ஏற்ற இறக்கங்களுக்காகவும், நக்கல் பேச்சு கலந்த நடிப்புக்காகவும் இன்று வரை பேசப்படும் படம்…
வில்லன்களான மனோகர் , அசோகன் இருவரும் ஹீரோக்களாக நடிக்க ஹீரோவான “ஜெமினி” கணேசன் வில்லனாக நடித்த படம் “வல்லவனுக்கு வல்லவன்”..இந்தப் படம் பெரிய வெற்றியடைந்தது…
காதல் மன்னனைப் போலவே காதல் இளவரசனான கமல் “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தில் வில்லனாக நடித்தார்…ஹீரோவாக சிவகுமார் நடித்திருப்பார்…புது புது முயற்சிகளுக்கு எப்போதுமே தோள் கொடுக்கும் கமல் ஆன்டி ஹீரோவாக நடித்த “மன்மத லீலை”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற படங்களில் கலக்கியிருப்பார்..படங்களும் பெரிய வெற்றி பெற்றன…
வில்லன்களில் ஜாம்பவான்களான வீரப்பா , நம்பியார் , மனோகர் , அசோகன் போன்றவர்களுக்கிடையே கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட வித்தியாசமான வில்லன் “ரஜினி காந்த்”…
“புவனா ஒரு கேளிவிக்குறி” படத்தின் கதையைக் கேட்ட ஹீரோ சிவகுமார் வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட , வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த ரஜினிக்கு அந்த சான்ஸ் அடித்தது…மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரை வில்லனாக பார்க்க வேண்டுமென்ற ஆசை ரசிகர்களுக்கு எப்போதுமே உண்டு…அவரும் அதற்கு நெற்றிக்கண், பில்லா, எந்திரன் உட்பட பல படங்களின் மூலம் இன்று வரை தீனி போட்டுக் கொண்டு தானிருக்கிறார்….
சூப்பர் ஸ்டாரை வைத்து “முரட்டு காளை” படத்தை எடுக்க முடிவு செய்த A .V .M ஹீரோவுக்கு சமமான வில்லனை தேடிக் கொண்டிருந்தது…15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக நடித்த “தென்னகத்து ஜேமஸ் பாண்ட்” A .V .M இன் கண்களில் பட , வில்லனாக அறிமுகம் ஆனார் ஜெய்சங்கர்…
“காதலிக்க நேரமில்லை” படத்தில் அறிமுகமாகி ”அதே கண்கள்” , “உத்தரவின்றி உள்ளே வா” உட்பட வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் , எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் குறைந்து ரஜினி - கமல் காலம் கோலோச்சிய நேரத்தில் பெரிய ஹீரோவாக தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர்.. “ஊமை விழிகள்” இவரை வில்லனாக பேச வைத்தது….
வில்லன்களின் அடையாளங்களான பெரிய கண்கள் , பயங்கரமான தோற்றம் , விகாரமான சிரிப்பு இவையெல்லாம் மக்களுக்கு போரடிக்க தொடங்கிய கால கட்டத்தில் , உருவ அமைப்பில் ஒல்லியாக இருந்தாலும் தன் கில்லியான குரல் வளத்தால் இலக்கணங்களை உடைத்த வசீகர வில்லன் ரகுவரன்…இவர் ”ஏழாவது மனிதன்” படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருந்தாலும் “உதயம்” படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார்..புரியாத புதிர் படத்தில் இவர் பேசிய “ஐ நோ” வசனம் இன்னும் காதுகளில் ஒலித்துக் மொண்டிருக்கிறது…
கன்னடத்திலிருந்து வந்திருந்தாலும் இயல்பான நடிப்பும் , இசைஞானியின் பாடல்களுக்கு இவரின் வாயசைப்பும் இங்கே மோகனை வெள்ளி விழா நாயகனாக வலம் வர வைத்தன…மோகனின் பல படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடியிருக்க இவர் “நூறாவது நாள்” படத்தில் வில்லனாக நடித்தது பலரை புருவம் உயர வைத்தது….
“நீர்க்குமிழி” படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி , தொடர்ந்து “சர்வர் சுந்தரம்” , “எதிர் நீச்சல் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நகைச்சுவை மன்னனாக பல வருடங்கள் அமர்ந்திருந்தவர் நாகேஷ்…”தில்லானா மோகனாம்பாள்” படத்தில் நெகடிவ் கேரக்டரில் இவர் அருமையாக நடித்திருந்தாலும் , “அபூர்வ சகோதரர்கள்” படத்தில் முழு நீள வில்லனாக மிரட்டியிருப்பார்…
நாகேஷைப் போலவே “பிறந்தேன் வளர்ந்தேன்” உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்த அருமையான காமெடி நடிகரான கவுண்ட மணி “ரகசிய போலீஸ்” படத்தில் வில்லனாக ரவுசு கட்டியதை ஏனோ யாரும் ரசிக்கவில்லை….
வில்லனாக நடிக்கும் ஆசை இருந்தாலும் முழு நேர வில்லனாக தன்னை காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் இரு வேடங்களில் நடித்து ஓரளவு தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள்…அப்படி விஜய் தன்னை ஆசுவாசப்படுத்திய படம் “அழகிய தமிழ் மகன்”…வில்லன் விஜய் கிளைமாக்ஸ் இல் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகாமல் இருந்திருந்தால் பேசப்பட்டிருப்பார்..( ஒரே விதமான கெட் அப்புக்கு நான் பொறுப்பல்ல.)
இன்றைய கால கட்டத்தில் ஹீரோ பிரசன்னா வில்லனாக நடித்த “அஞ்சாதே” படத்தையும் , அதே படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்த அஜ்மல் வில்லனாக நடித்த “கோ” படத்தையும் குறிப்பாக சொல்லலாம்…அதே போல “ஆய்த எழுத்து” படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்த மாதவனையும் மறக்க முடியாது…
நடிகைகளை போல வில்லன்களையும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் இன்றைய தமிழ் சினிமா இருப்பது துரதிருஷ்டமே…வீரப்பா , எம்.ஆர்,ராதா , ரகுவரன் என்று தங்கள் குரல்களிலேயே கலக்கியவர்களைப் பார்த்த நமக்கு ஆசிஷ் வித்யார்த்தி , சியாஜிசிண்டே போன்றவர்களின் நடிப்பு நன்றாக இருந்தாலும் டப்பிங் வாய்ஸ் ஒன்ற விட மறுக்கிறது…பாவம் பிரகாஷ்ராஜ் தான் எத்தனை படங்களில் வில்லனாக நடிப்பார்…
கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்நேரத்தில் ஹீரோ , வில்லன் என்றெல்லாம் பெரிய பாகுபாடுகள் தேவையில்லை என்றாலும் ஹீரோக்களை வில்லன்களாக வெள்ளித்திரையில் பார்க்கும் போதே சுவாரஷ்யம் நம்மை தொற்றிக் கொள்கிறது…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments