/* ]]> */
Nov 202011
 
பால் விலை

பால் விலை

கடந்த சில நாட்களாக செய்தித் தாள்களைப் பிரித்தால், பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டணம் உயர்வு என்ற செய்திகளே கண்ணில் படுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஏதாவது செய்து தரை மட்டமாக்க வேண்டும் என்பதில், நமது இந்திய அரசு உறுதியாகத்தானிருக்கிறது.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி என்பது சரியாகத்தானிருக்கிறது. மக்களை மத்தளமாக்கி, மத்திய,மாநில அரசுகள் வாசித்துக் கொண்டு, இல்லையில்லை வாரிச்சுருட்டிக் கொண்டு இருக்கின்றன.மத்திய அரசு,  பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை உயர்த்தினால், மாநில அரசு, பால், பேருந்துக் கட்டணம், காய்கறி என தன் பங்குக்கு சகட்டுமேனிக்கு விலையை உயர்த்தி மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் வேறு இருக்கிறதாம் அம்மையாருக்கு.
தினமலரில் 17 நவம்பர் 2011ல் வெளியான செய்தியில் “விலையேற்றம் குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலையேற்றம் ஏன் என்ற காரணத்தையும் விரைவில் தெரிவிக்க உள்ளதாக கூறிய கருணாநிதி, இதற்காக, கட்சி போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
2ஜி அலைக்கற்றை மோசடியில், 1.76 லட்சம் கோடி ரூபாய்களை தன் குடும்பத்தாரோடும், கூட்டணிக் கட்சியோடும் பங்கு போட்டுக்கொண்ட நேரத்தில் இவரது கட்சி கண்டனம் தெரிவிக்கவும், விளக்கம் சொல்லவும், போராடவும் தெரியாமல் முடங்கிக் கிடந்ததே, அதை மக்களாகிய நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவோமா என்ன? தேர்தல் நேரத்தில் இவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தில் தானே அம்மையாரைத் தேர்ந்தெடுக்க நாம் முன்வந்தோம்.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதற்கு நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார் கருணாநிதி. பேரன், பேத்தி எடுத்தவரல்லவா அவர்?!! அம்மையார் விடயங்களை ஆராய்வோமேயானால், அவர் விட்ட தேர்தல் வாக்குறுதிகளே நம் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. “நான் ஆட்சிக்கு வந்தால், மிக்ஸி, கிரைண்டர், கேபிள் இணைப்பு, பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி போன்றவற்றை இலவசமாக வழங்குவேன்” என உறுதி கூறியது இன்னும் நம் நினைவை விட்டு அழியவில்லை.
பால், காய்கறி, காஸ் என அடிப்படைத் தேவையான பொருட்கள் எல்லாவற்றின் விலையையும் உயர்த்திவிட்டு மின் சாதனங்களை இலவசமாக வழங்குவதில் பயன் என்ன இருக்கிறது? மேலும், மின்சாரத்திற்கே தட்டுப்பாடு உள்ள நிலையில், மின் சாதனங்களை வழங்குவது தன்னிறைவற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் என்பதை அம்மையார் அறிந்திருக்கவில்லையா என்ன? இந்த இலவசங்களையெல்லாம் அம்மையார் ஒன்றும் தன் சொந்தப் பணத்திலிருந்து வழங்கப் போவதில்லை என்பதை பாமர மக்களுக்குப் புரிய வைக்க நாம் தவறிவிட்டோமா?
காவலர்களின் பிள்ளைகளுக்கு சலுகைகளும், விபத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உதவித் தொகையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மையார் பெருமை பொங்க தெரிவித்துக்கொண்டிருப்பதையும், கை தட்டுவதற்கென்றே சட்ட சபையில் அமர்ந்திருக்கும் ஒரு குழுவினர் அவர்களது வேலையைத் தவறாமல் செய்துகொண்டிருப்பதையும் அம்மையாருக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் கண்ணுற நேர்ந்தது. இது நடந்த இரண்டே நாட்களில், பொருள்களின் விலையேற்றம்.
விலையேற்றத்துக்கு விளக்கம் கேட்டால், சென்ற அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டது என்ற பதில்தான் வரும். இப்போது, இவர் மட்டும் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ…? தினந்தினம், நெரிசலில் சிக்கி பேருந்துப் பயணம் செய்பவர்களுக்கு இந்த விலையேற்றம், மேலும் ஒரு எரிச்சல் என்பதும் அலுவலகம் செல்லும் தாய்மார்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்காக இந்த பாக்கெட் பாலையே நம்பியிருக்கிறார்கள் என்பதும் தாயுள்ளம் கொண்ட அம்மையாருக்குத் தெரியாமல் போனது வருத்தமே. பாமர மக்கள் இலவசத்திற்கு மயங்கியும், ஓரளவு அரசியல் தெரிந்தவர்கள் முந்தைய அரசைப் பழிவாங்கும் நோக்கோடும் வாக்களித்தோம். சரி, இந்த இலவச விவகாரமெல்லாம் பாமரர்களுக்குத் தெரியாது. கல்லூரியில் முதுகலைப் படிப்புப் படிக்கும் கண்மணிகளுக்குக் கூடவா இது தெரியாது? வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, எங்களுக்கும் மடிக்கணினி வேண்டும் என்று கொடிபிடித்தவர்கள், இந்த விலையேற்றத்துக்கு என்ன விலை தரப் போகிறார்கள்?
எம்.ஜி.ஆர் அவர்களுடைய கட்சி என்பதற்காக அதிமுக விற்கும், அண்ணா உருவாக்கிய கட்சி என்பதற்காக திமுக விற்கும், காமராசரின் கட்சி என்பதற்காக காங்கிரசிற்கும், என்னுடைய தலைவன் என்று கூறிக்கொண்டு முரசிற்கும் வாக்களித்தவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர், அண்ணா, காமராசர் அனைவரும் நாட்டு நலனுக்காக தங்களை உருக்கிக்கொண்டவர்கள். இவர்களின் வழி நடக்கிறோம் என்று கட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தங்களது நலனுக்காக நாட்டை உருக்கிக்கொண்டிருப்பவர்கள். வாக்களித்த நமக்கு நம் அரசு அளிக்கும் பரிசுகள்தான் இந்த விலையேற்றம். என்ன செய்வது, இந்த ஐந்தாண்டுகள் முடிந்து அடுத்த தேர்தல் வரும்போது, மக்களாகிய நமக்கு நூறுகளையும், ஒன்றிரண்டு தங்க மூக்குத்திகளையும், வேட்டி மற்றும் சேலையையும் கொடுப்பதற்காகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இம்முறை ஏமாந்து போன நாம் இனியாவது விழிப்போமா? இனியேனும், நம் தமிழ்நாட்டை நடிகர், நடிகைகளுக்கும், நம்மைச் சுரண்டித்தின்ன எண்ணும் நரிகளுக்கும் வாக்குகளால் விற்பதை விட்டு விட்டு, இன்றிலிருந்தே அரசியலாளர்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு, அடுத்த ஆட்சியில் செந்தமிழ் நாடாக மாற்றுவோம். இன்றிலிருந்து இலவசங்கள் பற்றி ஏதுமறியாத ஒரே ஒரு பாமரனுக்கேனும் புரிய வைப்போம். ஒன்றுமறியாத மாக்கள் நாம் என எண்ணும் அரசியல்வாதிகளுக்கு, மாக்களல்ல நாங்களெல்லாம் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பேரிகை கொட்டி விளக்கிடுவோம்.

பொழிவுடன்,
ராணி.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>