மூ க் கு த் தி
[சிறுகதைத்தொடர் - பகுதி 3 of 7 ]
By வை.கோபாலகிருஷ்ணன்
“செயின், சங்கிலி, கிஃப்ட் அயிட்டம் பார்க்கப்போகிறவர்கள் எல்லாம் வெளியே வாங்க” என்றார், லிஃப்ட் ஆபரேட்டர், முதல்மாடி வரும்போது.
லிஃப்டில் இருந்த பெண்கள் அவரவர் கழுத்தில் இருந்த செயின் சங்கிலி பத்திரமாக உள்ளதா என்று தடவிப்பார்த்துக்கொண்டனர்.
“நெக்லஸ் பார்க்க யாராவது இருந்தா தயவுசெய்து வெளியே வாங்க” என்றார் இரண்டாவதுமாடி வரும்போது.
“தங்க வளையல், ப்ரேஸ்லெட்டுகள்” என்றார் மூன்றாவது மாடியில் லிஃப்ட் கதவைத்திறக்கும்போது.
“தோடு முக்குத்தி” என்றார் நான்காவது மாடியில். ஒவ்வொரு மாடி வரும்போதும் லிஃப்டில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். நான்காவது மாடியில் நான் லிஃப்டை விட்டு வெளியே வந்த பிறகும், சிலர் ஐந்தாவது மாடிக்குச்செல்ல லிஃப்டினுள் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் ஏதாவது வெள்ளிச்சாமான்கள் பார்க்கவோ அல்லது வாங்கவோ செல்பவர்களாக இருக்கலாம் என்று தோன்றியது, எனக்கு.
நாலாவது மாடியில் இருந்த விற்பனைப்பிரிவுக்குள் நுழைத்தேன், நான். அங்கும் ஒரே கூட்டம். ஒருபுறம் காதுத்தோடுகள். மறுபுறம் மூக்குத்தி வகையறாக்கள்.
உட்கார இடமில்லாமல் ஒருவர் முதுகை ஒருவர் பார்த்த வண்ணம், உட்கார்ந்து சிலரும், நின்றுகொண்டே பலரும் ஏதேதோ நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
குறுக்கும் நெடுக்கும் ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களும், ஒருசில கைக்குழந்தைகளும் வேறு ஆங்காங்கே தென்பட்டனர்.
பொறுமையிழந்த நானும் முண்டியடித்தபடி மூக்குத்தி இருக்குமிடம் நெருங்கி, அப்போதுதான் காலியான ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றில், மஞ்சள் பையையும், மடக்கிய குடையையும் பத்திரமாகப்பிடித்தபடி, அமர்ந்து கொண்டேன்.
“பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” சிறுசுகள் (வயதுப்பெண்கள்) கூட்டத்திற்கு நெடுநேரமாக மூக்குத்திகளைக் காட்டிக்கொண்டிருந்த ஒருவன், மற்றொருவனிடம் சொன்னான்.
சுமார் ஐம்பது மூக்குத்திகள் பதித்த பலகையொன்று, அந்த கண்ணாடி மேஜை மீது ஒரு துணிவிரிக்கப்பட்டு, அதன் மேல் வைக்கப்பட்டு, என் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஒத்தைக்கல்லு, மூணுகல்லு, அஞ்சுகல்லு, ஆறுகல்லு, எட்டுக்கல்லு, முழுவதும் வெள்ளைக்கல்லு, மேலே ஒன்று மட்டும் சிவப்புக்கல்லு, என பலவகைகள் இருந்தன.
அவற்றில் ஒன்றிரண்டை கையில் எடுத்துப்பார்த்தேன். மிகவும் லேஸானதாக வெயிட் இல்லாமல், காற்றில் பறந்து விடும்போல இருந்தன.
“இரண்டு கிராமுக்கு மேல், நல்ல வெயிட் உள்ளதாக, உறுதியாக உள்ளதாகக் காண்பிப்பா” என்றேன்.
“இப்போதெல்லாம் யாருங்க வெயிட் உள்ள மூக்குத்தியாக விரும்புறாங்க? மூக்குக்கும் மூக்கோட்டைக்கும் சிரமம் இல்லாமல், மூக்குத்தி போட்டுள்ளோமா இல்லையா என்றே தெரியாதபடி, வெயிட் இல்லாமல் இருக்கணும்னு தான் சொல்றாங்க;
சில நவநாகரீகப்பெண்மணிகள், மூக்கில் ஓட்டையே போடாமலும், மூக்குத்தியே அணியாமலும் இருந்து விடுகிறார்கள்;
அப்படியே மூக்குத்தி போட்டாலும், ஒரே ஒரு சிறியகல் வைத்தது போதும் என்கிறார்கள்;
’எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு’ சொன்னதெல்லாம் அந்தக்காலம் ஐயா” என்றான்.
தொடரும்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments