/* ]]> */
Sep 112013
 

முதியோர் கதை : 2:
கணேசன் ஓய்வெடுக்கப் போகிறார்:

OLDMAN

” இன்னக்கி புது மேனேஜர் வறார். டிஃபன் ரெடியாப்பா” கணேசனின் மகன் குமாரின் குரல் இது. மகனுக்கு வயது 50ஐ நெருங்கும். இவருக்கே 75ஐத் தாண்டுதே!. இந்த வயதிலும் பரபரவென்று வேலைகளை முடித்துவிடுவார். வேறு வழி கிடையாது. மருமகள் காலாட்டிக்கொண்டு இவரை வேலை வாங்கும் மகராசி.
கணேசனின் மனைவி, குமார் பிறந்தவுடனேயே இறந்துவிட்டாள். அதன்பிறகு மறுமணம் பற்றி சிந்திக்காமலேயே கணேசன் அலுவலகமும் போய்க்கொண்டு குமாரையும் கவனித்துக்கொண்டார். வேறு யாராவது குமாரை சரியாகக் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை கணேசனுக்கு அறவே இல்லை. எனவே காலம் இப்படியே ஓடிப்போனது. வயது வந்ததும் ,குமாருக்கு திருமணமும் செய்து வைத்தார். வீட்டுக்கு வந்த மருமகளோ கணவனைத் தன்னுடைய பிறந்த வீட்டுக்குக் கூட்டிப் போக பிரயாசைப்பட்டாள். என்னதான் காதல் திருமணம் என்றாலும், மனைவியின் இந்த மாதிரியான சுயநலத்துக்கு குமார் செவி சாய்க்கவில்லை. நெருங்கிய உறவினர் யாருமற்ற கணேசனுக்கு கேட்க யாருமில்லை என்றுதானே இப்படியொரு திட்டம் போட்டாள், மருமகள். ஆனால், எதற்கும் அதிகம் பேசாத குமார், அப்பாவை விட்டுப் பிரிந்து வர மட்டும் தயாரில்லை என்பதால், மருமகள் ரேகாவுக்கு வேறு வழியில்லாமல் இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதாகி விட்டது. ” கணேசா, மருமக வந்துட்டா. இனி நீ உட்கார்ந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம் என்று அத்தை சொன்னது கதையாகிப் போனது.
ஆனால், புகுந்த வீட்டு நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டாள், மருமகள். இத்தனை காலமாக சமையல், வீட்டு வேலை, குமாரை பள்ளிக்குக் கொண்டு விடுதல் என்று உழைத்து, உழைத்து காலம் தள்ளிய கணேசன், இந்த வயதிலும் அதே விதமாக ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாள், ரேகா. தனக்கு சமையல், வீட்டு வேலைபற்றியெல்லாம தெரியாது என்று சொல்லி, உட்கார்ந்த இடத்துக்கு மாமனாரை காஃபி கொண்டு வந்து தரவைத்தாள். ” 75 வயது தெரியாமல் எப்படி ப்ரிஸ்காக இருக்கிறீர்கள்!” என்று புகழ்வதுபோல் நடித்தே , எந்த வீட்டு வேலையிலும் ஈடுபடமாட்டாள் ‘ அப்பாவை விட்டுப் போகாமல் இருப்பதே போதும்’ என்று எதற்கெடுத்தாலும் பணிந்து போகும் குமாரும், வாய் பேச வழியற்ற அப்பாவி கணேசனும் தணிந்து போகும் வரை ரேகா காட்டில் மழைதான் பெய்தது.
பேரன் அருணுக்கும் திருமண வயது வந்துவிட்டது. ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கும் அவனுக்கு ஒரு நல்ல சம்பந்தமும் வாய்க்கும் நிலைமையில் உள்ளது. அதுவும் பெரிய இடத்து சம்பந்தம். பெண் வீட்டுக்காரர்கள் வருவதும் போவதுமாக இருக்கும் இந்த நேரத்திலும் கூட அப்படி இபப்டி அசைய மாட்டாள், ரேகா. இந்த லட்சணத்தில் மகன் கல்யாணம் நிச்சயமானதற்காக அதுவும் பெரிய இடம் என்பதற்காக ட்ரீட் கேட்கும் தோழிகளையும் வீட்டுக்கு வரவழைத்து விருந்து கொடுப்பாள், ரேகா. அன்றும் அப்படித்தான். எங்கோ புறப்பட ஆயத்தமானவள் ” மாமா, இன்னைக்கி என் ஃப்ரண்ட்ஸ் 4 பேர் வராங்க. இங்கதான் சாப்பிடுவாங்க. விருந்து கொஞ்சம் கௌரவமா இருக்கணும்” என்றாள் அமர்த்தலாக. ” அதுக்கென்னம்மா? ஜமாய்ச்சுடலாம்” என்பார் கணேசன். ஆனால், அன்று என்னவோ, அந்தக் குரல் வரவில்லை. ஒரு சமயம் துணுக்குற்ற ரேகா, அதை அலட்சியப்படுத்திவிட்டு புறபப்ட்டுப் போய்விட்டாள். மதியம் 1 மணி சுமாருக்கு தோழிகளுடன் திரும்பி வந்தவள், ஹாலில் இருந்தபடியே கிச்சன் பக்கம் திரும்பி ஒரு குரல் கொடுத்துப் பார்த்தாள். ஆனால், கணேசனிடமிருந்து பதில் வரவில்லை. எழுந்துபோய்ப் பார்த்தவளுக்கு அங்கு கணேசன் இல்லாதது எரிச்சலை மூட்டியது. ” வரவர இந்த்க் கிழம் ரொம்பத்தான் திமிர் காட்டுது” என்று முணுமுணுத்தாள். கிச்சனில் சாப்பாடு ரெடியாக இருக்கவே மாமனாரைத் தேடுவதை விட்டுவிட்டு சாப்பாட்டை டைனிங் டேபிள் மீது பரப்பி, தோழிகளை அன்புடன் உபசரித்துவிட்டு, தானும் சாப்பிட்டபின் அப்படியே களைப்படைந்து தன்னுடைய அறைக்குச் சென்று உறங்கிப் போனாள். மாலை , இருட்டிப் போஉ விட்டது. மணி 6க்குமேல் இருக்கும்போலிருக்குதே. எங்கே யாரையும் காணோம் எழுந்து ஹாலுக்கு வந்தாள்” இத்தனை நேரமாகியும் இன்னும் காஃபி ரெடியாகலையா?. ” என்று கோபத்துடன் சுற்றிலும் தேடினாள், அந்த வாயில்லாப் பூச்சியை. .
“அப்பா, மெதுவா, மெதுவா” என்றபடி, அப்பாவைப் படுக்கவைத்தார், குமார்.” ரேகா, அப்பாவுக்கு நல்ல ஜுரம். நீ தெரியாமல் தூங்கிகொண்டிருந்தாய். நான் டாக்டரிடம் அழைத்துப் போய் ஊசி, மருந்தெல்லாம் போட்டு அழைத்து வந்திருக்கிறேன். டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். நீ கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து அப்பாவைக் கவனிச்சுக்கோ” என்று சொன்ன குமார்” அப்பாவுக்கு வயசாதாகுதே, எதுவும் ஆகாமல் இருக்கணும்” என்று உருகிப்போன மகனையும், வீம்பாகப் படுத்துவிட்ட கணேசனையும் முறைப்பாகப் பார்த்த ரேகா, இரவுச் சாப்பாட்டை ஹோட்டலிலிருந்து வரவழைத்துவிட்டு, பொழுது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே, தன் தாய் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனாள்.
ஒரு வாரம் கழித்துத்தான் திரும்பி வந்தாள். அவள் திரும்பி வரவும், வீட்டில் அருண் கல்யாண வேலைகள் களை கட்ட ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. பணக்கார சம்பந்தம்! சம்பந்தி 4,5 ஃபேக்டரிகளுக்கு சொந்தக்காரர். அருணின் படிப்புக்கும் அவனுடைய திறமைக்கும் கிடைத்த நல்ல சம்பந்தம் இது. அவன் வேலை பார்க்கும் கம்பெனி ஓனரே தன் பெண்ணைத் தருகிறார். குடும்பத்தில் ஒரே குதூகலம்தான். வயதுக்கு மீறிய சுறுசுறுப்போடு வளைய வந்து கொண்டிருந்தார், கணேசன். பேரனின் திருமண சந்தோஷத்தில் பூரித்துப் போய், வேலைகளை இழுத்துப் போட்டு ஆடிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக கல்யாணமும் முடிந்து, ஆர்ப்பாட்டங்களும் கலாட்டாக்களும் ஓய்ந்து போய், பொண்ணு மாப்பிள்ளையும் அழைப்பு, மறு அழைப்பெல்லாம் முடித்து வீடு வந்து விட்டார்கள்.
காலையில் படுக்கையிலிருந்து எழும்போதே ‘ புதுப் பெண்ணை தன் ஃபில்டர் காஃபியால் ஒரு அசத்து அசத்தவேண்டும்’ என்ற எண்ணத்தோடு எழுந்து வேக வேகமாக அடுப்படியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். என்னதான் மனதில் எண்ண ஓட்டம் வேகமெடுத்தாலும், உடம்பு ஒத்துழைக்க மறுத்து வயதை ஞாபகப்படுதுகிறது. கிச்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தவர் அவரை நோக்கி வந்த ஸ்மெல்லை முகர்ந்தபடி, ” என்ன இது?, காஃபி ஸ்மெல்லா?” என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டார். ” தாத்தா, அப்படியே இருங்க . காஃபி எடுத்துவரேன்.” என்றபடியே அடுப்படியிலிருந்து ஓடிவந்த ரோஷு என்ற அந்த்ப் புதுப்பெண் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, சோஃபாவில் உட்கார வைத்தாள். ” இந்தாங்க தாத்தா, காஃபி சாப்பிடுங்க” என்றபடி காஃபியை அவர் கையில் தந்துவிட்டு ,அவர் அருகில் அமர்ந்து புன்னகைத்தாள் புது மருமகள் ரோஷு. எதையும் நம்ப முடியாதவரானார், கணேசன். “உனக்கு காஃபி போடத் தெரியுமாம்மா?” என்று கேட்டார், கணேசன். ” சமையல் எல்லாமே தெரியும் தாத்தா. அம்மா எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஏதாவது தெரியலேன்னாலும் நீங்க சொல்லித் தருவீங்கல்ல?” என்றாள், ரோஷு. அதிசயித்துப் போனவர் அவளையே வியப்போடு பார்த்தபடி அமர்ந்துபோனார். காஃபியை அவர் வாயில் வைத்து குடிக்க வைத்தாள், அவள். ” அருண் எல்லாம் சொன்னார். தாத்தாவை கவனிச்சுக்கோன்னார். இனிமே நீங்க கோவிலுக்குப் போங்க உங்களுக்குப் பிடித்தபடி இருங்க. வாக்கிங்கெல்லாம் போங்க நானும் உங்ககூட வரேன்” என்றாள் ரோஷு. அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத கணேசனுக்கு ரோஷு ஒரு தேவதைபோலத் தெரிந்தாள், ரோஷு.
இன்று முதல் கணேசன் ரெஸ்ட் எடுக்கப் போறார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>