/* ]]> */
Sep 022013
 

thooppukkaari

தேள்கடி மற்றும் சில வகையான ஜூரங்களுக்கு எங்கள் வீடிருந்த வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவர் துடைப்பத்தால் மந்திரிப்பதை சிறியவளாய் இருந்த போது கண்டிருக்கிறேன் . நோயாளியின் முனகலிலும் வாரியல் அவர் மீது சுளீரென்று வீசும் போது எழும் சப்தத்திலுமாக பல முறை உறக்கத்தில் அதிர்ந்தெழுந்த நினைவு இப்பொழுதும் உண்டு . சமூக ஏற்றத்தாழ்வுகளை , துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வைப் பீடித்திருக்கும் ஏழ்மை , அறியாமை எனும் பிணிகளைக் களைய முற்படும்  இந்தத் தூப்புக்காரியின் வாரியலும் நம் கள்ள உறக்கத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி விதிர்த்தெழுப்பக் கூடிய வலிய ஓர் ஆயுதமே !

//உலகம் முழுவதும் மனிதருடைய பார்வையை அடிப்படையாக மாற்றியதில் நாவல் ஆசிரியர்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றனர்..//

//எழுத்து ஒரு சமூகச் செயல்பாடு; லெளகீகச் செயல்பாடு அல்ல. லெளகீகச் செயல்பாட்டுக்கு எப்போதும் அடிப்படையாக இருப்பது நான் என்ற உணர்வு. படைப்புக்கு அடிப்படையாக இருப்பது நாம் என்ற உணர்வு. பிரபஞ்சத்திலிருந்து, சமூகத்திலிருந்து வேறுபடுத்தித் தன்னில் ஆழ்ந்து கிடப்பதுதான் லெளகீகம். ஊருடன் இணைந்து, உலகத்துடன் இணைந்து பிணைந்து கிடப்பது படைப்பு என்று சொல்லலாம்//

– சுந்தரராமசாமி

சு ரா சிலாகிக்கும் , படைப்புக்கு அடிப்படையாக இருக்கும் ,  நாம் என்ற உணர்வை தூப்புக்காரியில் மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் படைப்பாளி . வாசிக்கிறவனின் மனதைப் பாதிக்காத எந்த படைப்பையும் மெனக்கெட்டு எழுதுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ? ஏகப்பட்ட உழைப்பையும் நேரத்தையும் விழுங்கி விட்டு எவ்வளவையோ எதிர்பார்ப்பையும் கிளர்த்திவிட்டு உண்டாகும் ஒரு படைப்பு பல சமயங்களில் உயிரற்ற பிண்டமாக வந்து விழுவதைப் பார்க்கிறோம் .. அதே சமயம் தோன்றின சுவடே இல்லாத ஒன்று நின்று வாழ்வதையும் ! பின்னதுக்கான சரியான உதாரணம் தூப்புக்காரி போன்ற படைப்புகள் தான் !

தூப்புக்காரி , தகழியின் தோட்டியின் மகன் , பாமாவின் கருக்கு ஆகிய முற்போக்கு நாவல்களின் வரிசையில் இடம் பெறக்கூடிய ஒரு படைப்பு . தோட்டியின் மகனை தமிழில் ஆக்கியது சுந்தரராமசாமி , அதன் மூலம் மலையாளம் எனும் போது தூப்புக்காரி தன்னளவில் தனித்துவமானது என்றாகிறது . பெண்ணியப் பார்வையில் எழுதப்பட்டது என்பது கூடுதல் திடம் சேர்க்கிறது .

ஒரு சமூகச்சிக்கலுக்கு , சீரழிவுக்கு , துயருக்கு மொழி வடிவம் கொடுக்காவிட்டால் , விவாதிக்காவிட்டால் , விமர்சிக்காமல் போய்விட்டால் அதை எப்படி தீர்ப்பது ? அதையும் படைப்பாளி தன்னுடைய தாய்மொழியில் ( அந்தத் துயரை தானே அனுபவித்த ஒருவர் ) தன்னுடைய வட்டார வழக்கிலேயே கூறும் போது அது உண்டாக்கும் அதிர்வு அலாதியானது . மார்த்தாண்டத்தின் , துப்புரவுத்தொழிலாளிகளின் வட்டார வழக்கிலேயே நாவல்  எழுதப்பட்டிருப்பது இயல்பான அழகும் திண்மையும் சேர்க்கிறது கதைக்கு . மேலும் சிக்கலும் சிடுக்குமான நடையும் , மொழியும் பாவிக்க அவசியமற்ற எளிய மக்களின் கதை தானே இது .

மிகச் சிறப்பாக , தான் எழுத முனைந்ததைக் கூற படைப்பாளிக்கு இயன்றிருப்பது அவர் எழுத்தின் இயல்பான எளிமையாலும் , வலிந்து செய்யாத கதை சொல்லலாலும் தான் . இங்கு தான் .. முரட்டுத்தனமான மொழி , வாசகனை அச்சுறுத்தும் பாவனை நடை மற்றும் தன்னுடைய மேதாவித்தனத்தை படைப்பெங்கும் அள்ளித்தெளித்தபடி செல்லும் எழுத்தாளர்களின் படைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார் மலர்வதி . உரக்குவியலின் ஊட்டத்தில் தளதளவென்று வளர்ந்திருக்கும் தொட்டிச்செடிகளின் மத்தியில் மழை நீரை உண்டு வளர்ந்த  காட்டுச்செடி , சமூக அக்கறை மற்றும் அசல் சிந்தனை எனும் நறுமணம் வீசும் மலர்களைப் பூத்திருக்கிறது !

மலர்வதியின் எழுத்தில் இருக்கும் எளிமை தான் இந்த நாவலின் உயிர் . தன்னுடைய தனித்துவம் இந்த ஃப்ரெஷ்னஸ் , அசல் தன்மை தான் என்பதை அடையாளம் கண்டு அவர் அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் .

கதையில் , மலத்தையும் , பெண்களின் மாதாந்திரத் தீட்டுத்துணிகளையும் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியாளர்களின் நிலை பேசப்பட்டிருக்கும் விதம் பதைபதைக்க வைக்கிறது . ஜீரணித்துக்கொள்ள இயலாத அளவில் , அப்பட்டமாக ,  இத்தொழிலாளர்களின் பணியில் உண்டாகும் வலி , வேதனைகளை கதையின் ஓட்டத்தினோடே சொல்லிச் செல்லும் மலர்வதி அவர்களுக்கு இத்தனை துயரத்தைக் கொடுக்கும் தொழில் அவர்களுடைய அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வசதியைக் கூடத் தருவதில்லை எனும் உண்மையை , மேலும் தலைமுறையாக அதே தொழிலை செய்தாக வேண்டிய கட்டாயத்தை இவை எல்லாவற்றையும் அவர்களின் மேல் சுமத்தும் சமூகத்தை சரியாகச் சாடியிருக்கிறார் .

கனகம் எனும் ( தூப்புக்காரி ) விதவைத்துப்புரவுப் பணியாளரின் மகள் பூவரசி தான் கதையின் நாயகி .  நாடார் இனத்தைச் சார்ந்தவளாக இருந்தும் பிழைக்க வேறு வழியில்லாமல் துப்புரவுப் பணியில் தன்னை வருத்திக்கொண்டு மகளை வளர்த்து ஆளாக்கும் கனகம் , தன்னிலை அறிந்திருந்தும் தங்களை விடவும் பொருளாதாரத்திலும் சமூகப்படிகளிலும் உயர்ந்திருக்கும் மனோவிடம் காதல் வயப்படும் பூவரசி , பூவரசியை நேசித்து வந்து ,மனோவால் அவள் கர்ப்பிணியாகி கைவிடப்பட்டு தாயையும் இழந்து நிற்கும் நிலையிலும் அவளை ஏற்றுக்கொள்ளும் துப்புரவுப்பணி செய்யும் மாரி – இப்படி ஒரு சிலரை மட்டுமே  சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதை .
தன்னுடைய கதாபாத்திரங்களின் கையில் கொடுத்த ஒளிப்பந்தத்தைக் கொண்டு இருண்ட அவர்களின் உலகை சமூகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் தன் குறிக்கோளில் சீரான வெற்றி அடைந்திருக்கிறார் மலர்வதி!

சாதாரணமான மொழி , ஆரம்பம் , நடுநிலைச் சிக்கல் , முடிவு என்ற வழக்கமான பாணியிலான வடிவம் , பிரமாதமான உத்திகள் ஏதுமற்ற கூறுமுறை -  இவற்றையெல்லாம் பலவீனம் என்று சொல்ல விடாமற் செய்யும் , உயிர்த்துடிப்போடு கூடிய கதை சொல்லும் பாங்குஅசத்துக்கிறது . காயம்பட்ட குயிலின் குரலாக கதையின் ஊடே வரும் பூவரசியின் சமூக வாழ்வு மற்றும் காதல் வாழ்வின் வலியை வெளிப்படுத்தும் கவித்துவமிக்க எளிய வரிகள் வாசகனின் சமநிலையை மனஅமைதியை வெகுவாகக் குலையச் செய்கின்றன .

முதல் அத்தியாயத்தை மனோவின் பார்வையில் எழுதியிருப்பதையும் , மாரி விபத்தில் இறந்து போவதையும் ( துயர காவியமாக சொல்ல முனைவது போன்ற தோற்றம் உண்டாக்கி ) குழந்தையை தத்துக் கொடுக்க முடிவு செய்து விட்டு இறுதி நிமிடங்களில் மறுப்பது என்று முடிவை நாடகத்தனத்தோடு செய்திருப்பதையும் குறைகளாகச் சொல்லலாம் .

பெண்ணியப் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் நாவல் என்பதும் தூப்புக்காரியின் முக்கியமான சிறப்பம்சம் எனும் போது துவக்கத்திலிருந்து இறுதி வரையிலுமே பூவரசியின் பார்வையிலேயே எழுதப்பட்டிருந்தால் கதைக்கு இன்னமும் திண்மை கிடைத்திருக்கும் . தவிரவும் மனோவின் கதாபாத்திரப் படைப்பில் அவ்வளவு தெளிவில்லை . பலவருடங்களாக பார்வையால் காதலை வளர்த்து , கிடைத்த சந்தர்ப்பத்தில அவளுடன் படுக்கை வரை போய் , கர்ப்பிணியாய் நிராதரவாய் நிற்கும் அவளை அப்படியே விட்டுச் செல்லும் அவனை ஏதோ கையாலாகாத அப்பாவி மட்டுமே என்பது போல சித்தரித்திருப்பது வாசக மனதில் ஒட்டுவதில்லை . கதையை அவனுடைய பார்வையில் துவங்கி அவனுக்கு கதாநாயகன் அந்தஸ்த்து வழங்கியிருப்பதும் கூட !
மேலும் துப்புரவுப் பணியாளர்கள் இன்ன குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள் என்றும் கதாநாயகி நாடார் இனத்தைச் சார்ந்தவள் என்பதுமான சாதிக்குறிப்புகள் அழுத்தமாய் இடப்பட்டிருப்பதன் அரசியலும் குழப்புகிறது !

பல்லவிக்குப் பிறகு வசமாகச் சுருதி சேர்ந்த சோக கீதமாக இசைக்கப்படும் கதையில் கனகம் சர்வசாதாரணமாக தன் மகள் பூவரசியை தான் செய்து வந்த தூப்புத்தொழிலுக்கே அனுப்பும் இடமும் மாரி இறந்து போவதாக அறியப்படுவதும் சற்றே தாளம் தப்பிப் போன தொய்வான சரணங்கள் !

அதே சமயம் நாவலின் போக்கு மற்றும் முடிவைப் பொறுத்தவரை எழுத்தாளர் நிறுவ நினைத்த செய்தியை வேறெந்த மாதிரியாக கதையை முடித்திருந்தாலும் இத்தனை ஸ்திரமாக நிறுவி இருக்க முடியுமா என்றால் முடியாது தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

பூவரசி , கனகம் மற்றும் மாரியின் பாத்திரப்படைப்புகளில் இருக்கும் முழுமையும் , அவர்கள் வாழ்வை விவரித்திருப்பதில் உள்ள நம்பகத்தன்மையும் , வாசகனின் உள்ளத்தில் கடுமையான குற்ற உணர்வை உண்டாக்கி , குவிமையச்சிதறலோ திசை திரும்பலோ இல்லாமல் கதை நூல் பிடித்தார் போல சிக்கலற்றுப் பயணிப்பதையும் பாராட்டியே ஆக வேண்டும் .

நாசூக்கையோ நாகரிகமான சொற்களையோ கதை அனுமதிக்காத இடங்களில் மலர்வதி பிரயோகித்திருக்கும் வார்த்தைகள் அவருடைய மனநிலையின் தீவிரத்தை , பேச வந்த சமூக அவலத்தின் சித்திரத்தை உள்ளபடிக்கே பிரதிபலிக்கின்றன .

மாரியின் பாத்திரம் தன்னளவில் இரண்டு முக்கிய செயல்பாடுகளை ஏற்றிருக்கிறது . தன் சமூகத்தின் துயரத்தை வெளிப்படுத்துவதுடன் புரட்சிகரமான எண்ணங்களையும் விதைக்கும் பணி .

//தாயோளி மக்கா .. இம்புடு நேரம் இவனுகளுக்கு பீ மோள கழுவித்தானே நாத்தமாய் போனேன் . இப்பப்பொய் மூக்கப்பொத்துறாங்க//

//இந்த ஒலகத்துல சுத்தப்படுத்துற ஒயந்த தொழில செய்யுறேண்ணு பெருமப்பட தெரியணும் //

எனும் இந்த வசனங்கள் கதையின் அடிநாதத்தைப் பேசுபவை . அவன் ஏன் இறந்தான் ,  பூவரசியோடு வாழ்ந்திருக்கலாமே என்ற வேதனையை நம்மில் உண்டாக்கும் வலுவான பாத்திரம் .

பூவரசியின் துயர வாழ்வு ( தாயின் இறப்பு , உயிராக நேசித்தவனின் பிரிவு , சேர்ந்து வாழ முன் வந்த மாரியின் மரணம் , தனியாக வளர்க்க நேர்ந்து போன தன் குழந்தைக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர இயலாமல் போகுமோ எனும் அவள் கலக்கம்)  , துப்புரவுத்தொழிலாளர்களின் வாழ்வவலம் எனும் இரு பக்கங்கள் கூர் தீட்டின கத்தியை வாசகனின் உணர்வு பதறப்பதற சீராகச் செருகி புரையோடிப் போன சமூகப் புண்களை நீக்கி சொஸ்தம் செய்ய முயல்கிறார் மலர்வதி . புரிதலின் அடையாளமாய் வாசகனின் கண்களில் இருந்து சிந்தும் சில துளிக் கண்ணீர் தான் அவருக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருதையும் விடவும் மேலான அங்கீகாரமாய் இருக்கும்.

// எல்லாரும் படிக்கணும் , எல்லாரும் வேலப்பாக்கணும் , அவரவர் கொட்டுற அழுக்க அவரவர் எறங்கி வந்து தொடைக்கிற ஒரு காலம் வரும் //

எனும் மாரியின் .. பூவரசியின் கனவு மெய்ப்பட வேண்டும் ..மேலும் பல இலட்சியப் படைப்புகளை உண்டாக்கும் திறனும் ஊக்கமும் இன்னமும் நிறைய விருதுகளும் மலர்வதிக்கு வாய்க்க வேண்டும் .

வாழ்த்துக்களுடன்

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>