/* ]]> */
Jan 282011
 

மனித உடலில் உள்ள முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள்..

வணக்கம் டாக்டர்..மூன்றாம் கோணம் வலைப் பத்திரிக்கைக்காக உங்களை நேர் காணுவதில் மகிழ்ச்சி..உங்களைப் பற்றி சொல்லுங்களேன்..

டாக்டர்; வணக்கம் சிஸ்டர்;நான் கணபதிபுரம் என்ற புதுக்கோட்டை கிராமத்தில் 14.4. 1981 இல் பிறந்தேன். பெற்றோர்; திரு. செல்லையா, திருமதி.
தனலக்ஷ்மி. என் மனைவி திருமதி.ருக்மணி அவர்கள், ஒரு பெண் குழந்தை, பெயர் கீர்த்தனா. டாக்டர் திரு நித்தியானந்தா….
கேள்வி;உங்களுடைய குவாலிஃபிகேஷன் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

டாக்டர்;நான் prof.Dr.C.நித்தியானந்தம்,
M.D.(Acu),D.M.T.,H.H.A.,பதிவுஎண்:013132/04IBAM,A-1423 JSS.

கேள்வி:அக்குபஞ்சர் மருத்துவ முறை பற்றி ஒரே வரியில் எப்படி சொல்வீர்கள்?

பதில்: அக்குபஞ்சர் மருத்துவ முறையை, எனர்ஜி ட்ரீட்மெண்ட் ,உயிர் மருத்துவம் அல்லது இயற்கை மருத்துவம் எனலாம்.

கேள்வி: இயற்கை மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

பதில்: ஊட்டி, கூடலூரில் வசித்து வந்த என் தாய்மாமன் திரு.V.K.ரத்தினம் அவர்களிடம் தான் நான் வளர்ந்தேன். மாமா, ஆயுர்வேத மருத்துவராக இருந்தார். அவரிடம் வளர்ந்ததில், இயற்கை மருத்துவத்தின் பேரில் நாட்டம் உண்டானது.

கேள்வி: அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்?

பதில்:உயிர் மருத்துவமான அக்குபஞ்சரைப் பொருத்த வரையில், உயிர் சக்தி பாதிப்படைவதும், உயிர் சக்தி குறைபாடும் தான் நோய்களுக்குக் காரணம். மற்ற மருத்துவ முறைகள் நோய்களை இலக்காக வைத்து செய்யப்படுபவை. இயற்கை முறையான அக்குபிரஷர் மற்றும் அக்குபஞ்சரில், உயிர் சக்தியை boost அதாவது தூண்டுவதின் மூலமும்,சக்தி ஓட்டப்பாதைகளில் உண்டான அடைப்புகளை அக்குபஞ்சர் ஊசிகளை செலுத்தி ,நீக்குவதன் மூலமும், உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, உடலானது, தன்னைத் தானாகவே சரி செய்து


கொள்ள உதவுகிறோம்.
போகர் என்ற சித்தர் தாம் வர்மக் கலையை உலகுக்கு அளித்தவர். வர்மக்கலையே பின்னாட்களில், அக்குபிரஷர், அக்குபஞ்சர் என்று வளர்ச்சி அடைந்தது. எனவே சீனா தான் அக்குபஞ்சரை உலகுக்கு அளித்த நாடு என்று பேசப்படும் கூற்று தவறானது. அக்குபஞ்சரின் தாயகம் இந்தியா, குறிப்பாக, தமிழகம். அதனை வளர்த்ததும், வெகுவாக பின்பற்றுவதும் சீனா.

ஒரு WHO ஆய்வின் படி உலகில், சீனாவின் ஜனத்தொகை அதிகமாய் இருப்பதற்கு, முக்கியமான ஒரு காரணம் ,குறைந்த இறப்பு விகிதம். இறப்பு விகிதம் குறைவாக உள்ளதற்குக் காரணம்..அவர்களின் பாரம்பரிய முறையிலான வாழ்க்கை மற்றும் வைத்திய முறைகள். அவர்கள் அக்குபஞ்சர் முறையைத்தான் மருத்துவமுறையாக அதிகமாகக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு சீன கிராமத்திலும் ,100 வயதைத் தாண்டியவர்கள் 100 பேராவது உள்ளனராம்!!!

மேலும் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் முறையில் நமக்கு நாமே சுயமாக சிகிச்சை செய்து கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு முதல் உதவியிலிருந்து, உயிர் காக்கும் சிகிச்சை வரை எளிமையாக செய்யலாம்! பயிற்சியும், சிறிது சாதுர்யமும் மட்டும் போதும். மேலும் அக்குபிரஷர் முறையிலான வைத்தியத்தை நாங்கள் வெறுங்கை வைத்தியம் என்றே கூறுவோம். வேறு மருந்துகளோ , சாதனங்களோ தேவையே இல்லை.

சரியான பயிற்சி மட்டுமே போதும்.

கேள்வி: உயிர் காக்கும் சிகிச்சையா?அது எப்படி டாக்டர்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்கள்?

பதில்: ஒரு முறை நண்பர் குடும்பத்துடன் பிரான் மலை என்ற இஸ்லாமிய புனிதத் தலத்துக்குச் சென்றிருந்தேன். மலையில் ஏறி வழிபாடு முடித்து இறங்கி வரும் சமயம், 9 வயது பெண் குழந்தை ஒன்று, பையில் பேரீட்சம் பழங்களுடன் வந்து கொண்டிருந்தது. குரங்கு ஒன்று குழந்தையின் கையில் இருந்த பையைப் பிடுங்க, குழந்தை போராடியதில் மலையில் இருந்து உருண்டு விட்டது. சினிமாக்களில் வருவது போல் ஓடிச் சென்று மலையின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை நான் பிடிக்க,நண்பர்கள் என்னை இழுத்து ஒருவாராக குழந்தையும் நானும் தப்பினோம். தலையில் பலத்த காயங்களுடன் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. மலையில் இருந்து பல கிலோ மீட்டர்கள் கீழே இறங்க வேண்டிய நிலை. அயரவில்லை நான்! நம்பிக்கை இழக்காமல் முதல் உதவி செய்து,குழந்தையின் உடலில் உள்ள உயிர் காக்கும் புள்ளிகளைத் தூண்டியபடியே, அக்குபிரஷர் செய்தவாறே, மலையில் இருந்து இறங்கி விட்டோம். குழந்தையின் ரத்தப் போக்கைக் கட்டுப் படுத்தி விட்டதால், உயிர் பிழைத்தது. பிறகு மருத்துவமனையில் சேர்த்து தையல்கள் இட்டனர். மருத்துவமனையில் டாக்டர்களும் அசந்து போயினர் அத்தனை உயரத்தில் இருந்து எப்படி இத்தனை காயங்களுடன் குழந்தையை உயிரோடு கொண்டு வந்தீர்கள் என்று! உயிர் சிகிச்சை வைத்தியத்தின்
சிறப்பு இது தான்.

கேள்வி: ஆச்சர்யமாகத்தான் உள்ளது டாக்டர்! ஆனால் தாங்கள் கூறியதில் இருந்தே தெரிகிறதே, அவசர அறுவை சிகிச்சைக்கு அலோபதி மருத்துவர்களைத்தானே நாட வேண்டியுள்ளது?

பதில்: அது தான் இல்லை!!! அறுவை சிகிச்சை, வலி தெரியாமல், நாங்களே செய்ய முடியும்!!! மயக்க மருந்து இல்லாமலேயே, வலி தெரியாமல் அறுவை செய்ய வழி முறைகள் எங்கள் மருத்துவத்திலேயே உண்டு! நம் நாட்டில் அதற்கு அனுமதி கிடையாது அவ்வளவே! எதிர் காலங்களில் தேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர்கள் வெளிநாடுகளில் செய்வது போல் நம் நாட்டிலும் அறுவை சிகிச்சைகள் செய்யும் நாளும் வரத்தான் போகிறது!!! குழந்தைப் பேறு, சுகப் பிரசவமாகவும், வலி இல்லாமலும் நிகழ அமெரிக்கா முதலான நாடுகளில் அக்குபஞ்சர் நிபுணர்களை நாடத்தொடங்கி விட்டார்கள் மக்கள். விரைவில் நம் நாட்டிலும் இவ்வாறான மாற்றங்கள் வரும்.

கேள்வி: எம்மாதிரியான நோய்கள் மக்களை அச்சுறுத்துகின்றன டாக்டர்?

பதில்:பக்கவாதம், மைக்ரைன், பெண்களின் மாதவிலக்குக் கோளாறுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்றவையே தற்பொழுது மக்களை பெரிதும் அச்சுறுத்தும் நோய்கள். விஷயம் என்னவென்றால், நம்பிக்கையோடு இயற்கை மருத்துவம் செய்து கொண்டால், இந்நோய்களை வேரோடு களையலாம், எவ்விதமான பக்க விளைவுகளும் இல்லாமல், சுலபமாகவும் கூட. அலைக்கழிக்கும் பரிசோதனைகளோ, அள்ளி விழுங்க மாத்திரைகளோ இல்லாமலே இதெல்லாமே சாத்தியம்!!!

கேள்வி:இப்பொழுது நோய்கள் அதிகமாக மலிந்து விட்டனவே இது
பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்:வருமுன் காத்தல் என்ற முன்னெச்சரிக்கை உணர்வே இல்லாமல் போனதும், பாரம்பரியப் பழக்க வழக்கங்களை மக்கள் மறந்து போனதும், தவறான உணவு முறைகளும், நோயாளியை ஒரு பொருளாக மட்டும் பார்த்து, அவருடைய குடும்ப சூழல், மனோ நிலை, சுபாவம்,எதையுமே கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் தவறான மருத்துவ முறைகளுமே நோய்கள் மலிந்தமைக்குக் காரணம்.

“நோய் என்பது பொய்!
நோயாளி என்பவன் நடிகன்,
மருத்துவன் என்பவன் வித்தைக்காரன்,
மருத்துவம் என்பது கூத்து “

என்று இயற்கை மருத்துவர்கள் நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. ஆய்ந்து பார்த்தால் இது அத்தனையும் உண்மை என்று புரியும். இயற்கையாய் ஏற்ப்பட்ட வியாதிகள் இயற்கையாய் சரியாகும் என்ற நம்பிக்கை வேண்டும். உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ள அவகாசம் அளிக்க வேண்டும்! அதற்கு இயற்கையான முறையில் நாம் உதவ வேண்டும்! அவ்வளவே!
பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வரைபடம்

கேள்வி:இனி வருங்காலத்துக்கான உங்கள் குறிக்கோள்?

பதில்: எங்கள் தலைவர் மறைதிரு. அப்துல்லா சேகு அவர்களின் இலட்சியமான 1.2030 இல்..நோயில்லா, மருந்தில்லா உலகம் படைப்போம்! 2. வீட்டுக்கு ஒருவராவது அக்குபஞ்சர் போன்ற இயற்கை மருத்துவத்தில் தேற எங்களால் இயன்றதைச் செய்தல் 3. வளர்ந்துவிட்ட பல நாடுகளிளும் உள்ளது போல பள்ளி, கல்லூரிகளில் அக்குபஞ்சர் படிப்பைப் பாடத்திட்டங்களில் சேர்க்க பாடுபடுவது இவையே எம் லட்சியம்.

கேள்வி: இயற்கை மருத்துவ முறைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக ! சில வருடங்களுக்கு முன்பிருந்த நிலை வேறு. ஆனால் இப்பொழுது இயற்கை முறையிலான வைத்திய முறைகளை அதிகம் நாடுகிறார்கள் மக்கள். மற்ற மருத்துவ முறைகளில் இருக்கும் பக்க விளைவுகளும், கால வரையற்ற சிகிச்சையுமே இதற்குக் காரணம்.

கேள்வி: மிருகங்களுக்கும் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் செய்யப்படுவதாகக் கூறினீர்களே?

பதில்: ஆமாம் …விலங்குகள் மட்டும் அல்ல தாவரங்களுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை செய்வதுண்டு! அக்குபஞ்சரினால் விலங்குகளின் நோய்கள் நீங்கும், தாவரங்களிடம் நாம் எதிர்பார்க்கும் பலன்களான அதிகமான, மற்றும் சுவையான மகசூல் பெற முடியும்!

கேள்வி: தாங்கள் எழுதியுள்ள நூல் பற்றி…

பதில்: “ஆரோக்கியத்தின் ரகசியம்”..என்பதே நான் எழுதியுள்ள நூலின் தலைப்பு. இதில் ரகசியம் ஏதுமில்லை! முறையான வாழ்க்கையும், அமைதியான மன நிலையுமே ஆரோக்கியத்திற்கு அவசியம்.

கேள்வி: தற்பொழுது தாங்கள் அக்குபஞ்சர் வகுப்புகள் நடத்துகிறீர்கள் அல்லவா?

பதில்: ஆம்..”.இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம் மற்றும் அட்டாமா” இணைந்து வழங்கும் மருத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் வகுப்புகள் எடுக்கிறேன். பயிற்சிகளுக்கான சான்றிதழ் IGNOU பல்கலைக்கழகம் நேரடியாக வழங்குகிறது.

மிக்க நன்றி டாக்டர்..விரைவில் எங்கள் மூன்றாம் கோணத்தில் ஆரோக்கியம் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும்….
…..கட்டாயம் சிஸ்டர்…மிக்க நன்றி….வணக்கம்…

நேர்கண்டவர்….ஷஹி....(மீள் பதிவு)

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>