
அஜித்தின் 50 வது படம் என்பதை குறிக்கும் விதத்தில் “தல” 50 என்ற லேபிளை தாங்கி வந்திருக்கும் படம் “மங்காத்தா”..அஜித்தின் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும் விதத்தில் ஜனரஞ்சகமாக இருக்கிறது படம்….கிளௌட் நைனிடம் இருந்து கடைசி நேரத்தில் சன் பிச்சர்ஸ் படத்தை வாங்கியிருப்பது வியாபாரத்திற்கு உதவும்…
கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கதை என்பதால் படம் மும்பையில் நடக்கிறது..பெட்டிங் பணம் 500 கோடியை சூதாட்ட டான் செட்டியாரிடம் ( ஜெயப்ரகாஷ்) இருந்து கொள்ளையடிக்க நினைக்கும் நான்கு பேர் ( வைபவ்,பிரேம்,கணேஷ்,பகத் ) , இவர்களுடன் இதே எண்ணத்துடன் ஐந்தாவதாக கூட்டு சேரும் சஸ்பென்ட் செய்யப்பட காவல்துறை அதிகாரி வினாயக் ( அஜித் )..இவர் செட்டியாரின் மகள் அஞ்சனாவின் (த்ரிஷா) காதலன் கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிப்பதற்காக நியமிக்கப்படும் சிறப்பு துணை ஆணையர் ப்ரித்வி ( அர்ஜுன் ) இவர்களுக்கிடையே நடக்கும் விறு விறு ஆட்டமே “மங்காத்தா”…
கதை சில ஆங்கில படங்களையும் , தமிழில் சரியாக ஓடாமல் போன “சிந்தனை செய்” படத்தையும் நினைவு படுத்தினாலும் , அஜித் – அர்ஜுன் நடிப்பு ,ஒன்ற செய்யும் திரைக்கதை ,”நச்” என்ற கிளைமாக்ஸ் , நளினமான பிரசெண்டேசன் இவற்றின் மூலம் மற்றதிலிருந்து மாறுபடுகிறது “மங்காத்தா”…
தன் 50 படத்தை வழக்கமான ஹீரோயிச படமாகவோ , சுற்றியிருப்பவர்கள் ஹீரோ புகழ் பாடும் தனியாவர்தனமாகவோ இல்லாமல் , எல்லா நடிகர்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் , “நெகடிவ்” கேரக்டர் வினாயக்காகவும் வருவதால் சற்று “தல” தூக்கி நிற்கிறார் அஜித்
அஜித் 40 வயது காரராக நரைத்த தலையுடன் வந்தாலும் அழகாக இருக்கிறார்..இவர் தோற்றத்தால் மற்றவர்கள் இவரை “அண்ணே” என்றோ “தல” என்றோ அழைப்பது தனியாக தெரியவில்லை…பைக் சேசிங் சீனில் நம் கண் முன் நிற்பது “அசல்” நாயகன் அஜித்..
த்ரிஷாவிற்கு பயந்து லக்ஷ்மி ராயை வீட்டை விட்டு அனுப்பும் இடத்திலும் , குடி போதையில் பேசிக்கொண்டே பிரேம்ஜியிடம் இருந்து உண்மையை கறக்கும் இடத்திலும் , குத்தாட்டத்திற்கு நடுவே “மப்பு ஏறினாலே இசைஞானி பாட்டு தான் ” என சொல்லும் இடத்திலும் , அர்ஜுனின் மனைவியை கடத்தி வைத்துக் கொண்டு “ஆக்ஷன் கிங்” என்று அர்ஜுனை கிண்டல் செய்யும் இடத்திலும் என படம் முழுவதும் அசத்தியிருக்கிறார் அஜித்…
நெகடிவ் கேரெக்டரில் “இமேஜ்” பார்க்காமல் நடித்திருந்தாலும் பணத்திற்காக த்ரிஷாவை காதலித்து கழட்டி விடுவது, எந்நேரமும் சிகரெட் , குடி,குட்டியென இருப்பது , வைபைவிடம் ” இவ இல்லேனா என்னடா பணம் இருந்தா ஆயிரம் பொண்டாட்டி ” என கத்துவது , லக்ஷ்மி ராயை கொன்று விட்டு “தே..” என திட்டுவது இவையெல்லாம் கேரெக்டருக்கு பலம் சேர்த்தாலும் பெண்களிடையே அஜித்தின் “இமேஜ்” சறுக்குவதற்கும் வாய்ப்பாக இருக்கலாம்..
அழகாய் இருக்கிறார் என்பதற்காக “பில்லா”வில் கூலிங் க்ளாசை அடிக்கடி கழட்ட விட்டதைப் போல் இதில் சும்மா , சும்மா சிகரெட் ஊத விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்…”பில்லா” வை தொடர்ந்து ‘அசல்”,”மங்காத்தா” அடுத்து “பில்லா 2 ” இப்படி எல்லா படங்களுமே அஜித்தை வெறும் ஹை கிளாஸ் டானாக மட்டும் காட்டிக் கொண்டிருக்குமோ என்ற பயமும் நமக்கு ஏற்படாமல் இல்லை…
சண்டைக்காசிகளையும் தாண்டி குறைவான சீன்களில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார் “ஆக்ஷன் கிங்” அர்ஜுன்..தன் மனைவி கடப்பட்டது தெரிந்ததும் இவர் காட்டும் முக பாவம் அனுபவம்..
கொள்ளையடிக்க முயற்சி செய்யும் நான்கு பேரும் நன்றாக நடித்திருந்தாலும் கவனிக்க வைப்பவர்கள் வைபவும் , பிரேம்ஜியும்…”சரோஜா”. “ஈசன்” இப்போது “மங்காத்தா” என நல்ல வாய்ப்புகள் வைபவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.. .”என் அண்ணன் படங்கள் தவிர வேறு படங்களில் காமெடியாக நடிக்க மாட்டேன்’ என்று பிரேம்ஜி சொன்னது ஏனென்று இந்த படம் பார்த்த பிறகு புரிகிறது.. “என்ன வாழ்க்கைடா இது” இப்படி சாகும் போது கூட சிம்பு பாணியில் பேசி சிரிக்க வைக்கிறார்..
ஜெய பிரகாஷ், சுப்பு , அரவிந்த் அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள் .. த்ரிஷா,அஞ்சலி,லக்ஷ்மி ராய் மூவரில் ராய் மட்டும் தன் திறமையை “காட்டி” நடிப்பதற்கு வந்த வாய்ப்பை நன்றாக ராய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்…பட முடிவில் டைட்டில் கார்டு போடும் போது த்ரிஷாவின் பெயரை கடைசியில் போடுவது ஏனோ ?..
ஒளிப்பதிவும் , இசையும் அருமை…”உன் மேடை” கிறங்க வைத்தால் “மச்சி” பாடல் ஆட வைக்கிறது… சில இடங்களில் வார்த்தைகளை மீறி வரும் பின்னணி இசையை தவிர்த்திருக்கலாம்..
.”கோவா” வில் சறுக்கியதை “மங்காத்தா” வில் சரிகட்டி விட்டார் வெங்கட் பிரபு…இவருடைய வழக்கமான நடிகர்கள் கூட்டணியுடன் அஜித்,அர்ஜுன் இவர்களையும் இணைத்து தெளிவான கதை பண்ணியிருப்பதை பாராட்டலாம்..குறிப்பாக நான்கு பேரையும் எப்படி கொல்லலாம் என்று அஜித் ரீவைண்ட் செய்து பார்க்கும் காட்சி வெங்கட் “டச்”…
அடுத்தடுத்து கேரெக்டர்களை அறிமுகப்படுத்துவதால் கொஞ்சம் தடுமாறும் முதல் பாதி , காவல் துறை அதிகாரி “சுப்பு” வின் தற்கொலை நாடகம் , 500 கோடி பெட்டிங் பணத்தை பலத்த பாதுகாப்பில்லாமல் எடுத்து செல்லும் லாஜிக் சொதப்பல் , ஜேம்ஸ் பாண்ட் படம் போல தொடர்ந்து வரும் துப்பாக்கி சண்டைகள் இப்படி சில குறைகள் இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் விறுவிறு மங்காத்தா – “தல” ஆட்டம் ..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments