/* ]]> */
Oct 072010
 

ரூமுக்குள் அம்ர்ந்து, பெட்டியில் தனது துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் மருமகள் சுகந்தி. கண்களில் நீர் முட்டிக் கொண்டு இருந்தது அவளுக்கு. இனி இந்த வீட்டுக்குள் வர எத்தனைக் காலம் ஆகுமோ.

ரூமுக்கு வெளியில் மாமனார் சீத்தாராமன் கத்தும் சப்தம் இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தது.

“உனக்கு எல்லாம் எதாவது அறிவு இருக்கா? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நான் ஒரு மனுஷன் கத்திக்கிட்டு இருக்கேன். எனக்கு என்னனு ரூமுக்குள்ள போய் உக்காந்து இருக்கயே.”

சுகந்தி மெதுவாக தலையை நீட்டி பார்த்தாள். மாமனார் கோபம் அடங்கியது போல் தெரியவில்லை. இன்னும் பாக்கி இருந்தது.

“உன்னை சொல்லி குத்தம் இல்லை. உன் வளர்ப்பு அப்படி. உனக்கு போடுறேன்னு சொன்ன நகையில் 5 சவரன் குறைச்சுட்டு, அப்புறமா தரேன்னுட்டு, இன்னைக்கு வரைக்கும் பொறுப்பு இல்லாம, அதை தராதவருதான உன் அப்பா. அவரு பொண்ணு உனக்கு மட்டும் பொறுப்பு இருக்குமா என்ன?”

சீத்தாராமன் வார்த்தை சூடு பிடித்தது. எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட வராதது, அவருக்கு இன்னும் கோபத்தை மூட்டியது. சுகந்திக்கு இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. வேகமாக வெளியில் வந்தாள். மாமியார் அம்புஜம், தனக்கு எதுவும் சம்பந்தம் இல்லை என்பது போல், எதிர் ரூமில் அமர்ந்து “ஆனந்த விகடன்” வாசித்துக் கொண்டு இருந்தார்.

“மாமா. போதும் நிறுத்துங்க. இப்ப என்ன நடந்துடுச்சுன்னு அத்தைய திட்டுறீங்க?”

“இல்லமா. இந்த தீபாவளிக்கு 3000 ரூபாய்க்கு பட்டு புடைவை எடுத்தா போதும்னு சொல்லி இருந்தேன் அவக்கிட்ட. ஆனா அவ, அடுத்த வீட்டு மாமி கூட கடைக்கு போய் 5000 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்திருக்கா. ஒரு வாரமா எங்கிட்ட கூட சொல்லல. இப்போ பீரோவ திறந்தப்ப எத்தோசையாப் பார்த்துட்டுக் கேட்டா, மாமிக்கிட்ட கடன் வாங்கினேன். அடுத்த மாசம் கொடுத்தா போதும்ன்னு கூலா பதில் சொல்லுறா” சீத்தாராமன், அம்புஜத்தை முறைத்துக் கொண்டே மருமகளிடம் குமுறினார்.

“சரி விடுங்க மாமா. இது ஒரு பெரிய விசயமா? எனக்கு நாளைக்கு ஒரு மாசம் லீவு முடிந்து, திரும்பி துபாய் போற கவலைல அழுகை வரும் போல இருக்கு. நீங்க ரெண்டு பேரும் என்னனா, சின்ன பசங்க போல சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க”.

சண்டையை முடித்து வைத்துவிட்டு, மீண்டும் தன் துணிமணிகளை எடுத்து வைக்க போய்விட்டாள் சுகந்தி. பாவம் சீத்தாராமன், அடுத்த மாசத்துக்கு ஆப்பு வைத்த அருமை மனைவியை முறைத்தபடி டிவி பார்க்க துவங்கினார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>