/* ]]> */
Jan 112012
 

பொங்கல் பண்டிகைத் துணுக்குகள்:

pongal பொங்கல்

pongal பொங்கல்

1.      பொங்கல் பண்டிகையின்போது கரும்புதான் முக்கிய பொருளாக அங்கம் வகிக்கும். இந்தக் கரும்பில் பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது. கரும்பின் எல்லாப் பகுதியும் இனிப்பைத் தருவதில்லை. நுனிக் கரும்பு லேசான இனிப்புடன் அதிக அளவில் உப்புக் கரிப்பதுபோலிருக்கும். ஆனால், அடிக் கரும்பு, மிகவும் இனிப்பாக இருக்கும். வாழ்க்கையில் மனிதர்கள்  முன்னேற கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பு ஆரம்பத்தில் இனிமையைத் தராது. கஷ்டங்களையே கொடுக்கும். ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போல அதிக வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும். மேலும், கரும்பின் வெளிப்புறம் கரடு முரடாகவும், வளைவுகளும் ,முடிச்சுகளும் நிறைந்து இருக்கும் . வெளிப்புறம் ஒரு கடினமான தோற்றத்தையே வெளிப்படுத்தும். கொஞ்சம் சிரமம் மேற்கொண்டு, உரித்து எடுத்தால்தான்  உட்புறத்தில் இருக்கும்  இனிமையான சாறு கிடைக்கும்.  அதுபோல வாழ்க்கையில் எத்தனை கடுமையான சோதனைகள் இருந்தாலும், அவற்றை கடும் முயற்சியோடு,  அந்த கரடு முரடான பாதையை சலிப்பின்றி  கடந்து சென்றால், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது கரும்பு உணர்த்தும் தத்துவம். ‘ பட்டினத்தார் கையிலுள்ள கரும்பு ‘ உணர்த்துவது  இந்த தத்துவத்தைத்தான்.

2.      பொங்கல் பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு  ஹைலைட்டான விஷயம் இருக்கிறது. அதுதான் ‘ஜல்லிக்கட்டு’. இளம் காளையர் நிஜக் காளைகளை அடக்கும் விளையாட்டு இது. பண்டைக் காலத்தில் இப்படி காளையை அடக்கிய வீரர்களைத்தான் மணக்கவேண்டும் என்று கன்னியர் ஆசைப்படுவார்களாம். இன்றும் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள்.   இந்த ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடத்தப்பட்டாலும், அனங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலகப் புகழ்பெற்று விளங்குகிறது . இதேபோல சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், ‘ மஞ்சு விரட்டு’ என்ற பெயரில் ஜல்லிக் கட்டுகள் நடத்தப்படுகின்றன.

3.      இப்போது பொங்கல் பண்டிகை , தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள். ஆனால், பண்டைக் காலத்தில் இந்த பொங்கல் பண்டிகை 28 நாட்கள் கொண்டாடப்பட்டது. அப்போது அந்த விழாவுக்கு இந்திர விழா என்று பெயர். மழைக்குரிய தெய்வம்தான் இந்திரன். எனவே இந்திரனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் வகைகள் செழிக்கும் என மக்கள் நம்பினர். ஆனால், பிற்காலத்தில், வானிலையை நிர்ணயிப்பவர், சூரியன்தான் என்ற நம்பிக்கை வந்து , தங்கள் கண்முன் காகாட்சி தரும் சூரியக்  கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள்  வயல்களில் விளைச்சலுக்குக் காரணம் சூரியனே என்று நம்பினர்.

4.       பொங்கல் பண்டிகையை மூன்று நாள் பண்டிகை சொல்வதுகூட சரியாகாது. ஏனென்றால் ‘போகி’ பண்டிகையையும் சேர்த்தால்  நாலு நாள் பண்டிகையாக எடுத்துக்கொள்ளலாம். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ ஒரு  தத்துவமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. வேண்டாத பழைய குப்பைகளையும், உபயோகமற்ற பொருட்களையும் களை வீட்டைவிட்டு ,போக்கி விடுவதால்,  வீடு சுத்தமாகிறது.  இந்த    கழிவுகளைப் போக்கும் செயலை  ‘போக்குதல்’  என்று சொன்னார்கள். பிற்பாடு  இந்த நாளை  ‘போக்கி’ என்றார்கள். பின்னாளில் அதுவே ‘போகி’ என்றானது. இந்த போகி பண்டிகை ஒரு உயர்ந்த தத்துவத்தை சொல்லத் தவறவில்லை.  கீழ்த்தரமான இச்சைகளையும் தவறான ஆசைகளையும் மனிதன் , தன்னுடைய ஞானம் என்னும் தீயால் எரித்துவிட வேண்டும். ஞானத்தீயால் உங்கள் மனதை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.  என்பதே இந்த பண்டிகையின் தத்துவமாகும்.

5.       மாட்டுப் பொங்கல் அன்று ‘கணுப்பிடி’ என்ற பண்டிகையும் கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம், சர்க்கரைப் பொங்கலோடு, மாங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் ,தயிர் சாதம் என்று பலவித சாதங்களை பண்ணி , உண்டு  மகிழ்வார்கள். இவற்றை ‘சித்ரான்னம்’  என்று கூறுவார்கள்.

6.       மூன்றாவது நாள்  பண்டிகை  ‘கன்னிப் பொங்கல்’ என்றும்,  ‘கன்று பொங்கல்’ ‘ காணும் பொங்கல்’ என்றும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில், மக்கள் நதிக்கரைக்கும்,  நதி இல்லாத இடங்களில் மக்கள் வயல்வெளிகள் போன்ற  இடங்களுக்கு சென்று மகிழ்வர். கடல் இருக்கும் ஊர்களில்  கடற்கரைக்கும், நண்பர்கள், மற்றும் உறவினர் வீடுகளுக்கும் சென்று மகிழ்வர்.

7.       கொஞ்சநாட்களுக்கு முன்பு, மக்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இப்படி வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம்  1928-ல் முதன்முதலில்  தோன்றியது. பலவிதமாக கண்ணைக் கவரும் வண்ணங்களைக் கொண்டும், நடிகர்-நடிகைகள், மற்றும் அரசியல் தலைவர்கள், சுவாமி படங்கள், இயற்கைக் காட்சிகள் என்று மனதை மயக்கும் வண்ணம் இந்த வாழ்த்து அட்டைகள் ஜொலிக்கும். வாழ்த்து அட்டைகள் அனுப்பாதவர்களையே பார்க்க முடியாது என்னும் நிலை இருந்தது.  ஆனால்  கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கம் மாறிவிட்டது . இந்த எலெக்ட்ரானிக் யுகத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது கிட்டத்தட்ட  நின்று போய்விட்டது என்றே சொல்லலாம் .

8.       புதிதாகத் திருமணமான தம்பதியர், ‘தலைப் பொங்கல்’ என்று இந்தப் பண்டிகையைக்  கொண்டாடுவர். இது ‘தலை தீபாவளியைப் போன்ற சிறப்பு மிக்கது. புதுப்பெண்,  தன் பிறந்த வீட்டிலிருந்து, புகுந்த வீட்டுக்கு ‘பொங்கல் வரிசை’யைக் கொண்டு போவாள். அந்த சீர்வரிசை, பித்தளையிலான பொங்கல் பாத்திரம், குத்து விளக்குகள், சாப்பிடும் தட்டுகள் , கரண்டிகள், 11 படி பச்சரிசி, 9 படி புழுங்கரிசி, கரும்பு, மஞ்சள் குலை, வாழைத் தார், ஒரு மூட்டை நெல் அல்லது அரிசி ஆகியவை பொங்கல்  சீர் வரிசையில் முக்கியமாக இடம் பெறும்.

9.      சூரியனும் மாடுகளும், உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்வதால்,  தைப் பொங்கலும் மாட்டுப் பொங்கலும் இணைந்த  இந்த பொங்கல் விழா, ஒரு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>