/* ]]> */
Oct 252011
 

பழமொழிகளில் கீழே மேலே

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பழமொழி

பழமொழி

   ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் எதிர்ச்சொல்லும், எதிர்வினையும் உண்டு. அச்சொற்கள் குறிக்கின்ற பொருள்கள் வெவ்வேறானவை. அவை நுட்பமான செய்திகளை நமக்கு அறியத் தருகின்றன எனலாம். கீழே, மேலே என்ற இரு சொற்கள் எதிரும் புதிரும் நிறைந்த சொற்களாகும். இச்சொற்கள் வெவ்வேறு இடத்தில் நின்று வெவ்வேறு புதிய பொருள்களைத் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நமது முன்னோர்கள் இச்சொற்களைப் பழமொழிகளில் பயன்படுத்தி பல உள்ளார்ந்த செய்திகளை விளக்கியுள்ளனர்.

விழுதல்

     சிலர் எதையும் பெருமையாகப் பேசிக் கொண்டே இருப்பர். ஒரு செயலிலோ அல்லது நிகழ்விலோ தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டால் அதனை அவர்கள் ஒரு போதும் தோல்வி என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அது சரி என்றே வாதிப்பர். அல்லது அதற்கு வேறொரு காரணத்தைக் கூறிச் சமாளிப்பர். இவர்கள் தங்களின் தோல்வி தோல்வியல்ல என்று கூறுவர். இத்தகையோரின் மனவியல்பை,

     ‘‘கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்ற கதைதான்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. ஒருவர் கீழே விழுந்தால் முகத்தில் மண் ஒட்டும். ஆனால் அவ்வாறு கீழே விழுந்தாலும் முகத்தில் தான் மண் ஒட்டியது மீசையில் இல்லை என்று கூறுவார். தாங்கள் செய்த செயலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அது தங்களுக்குச் சாதகமாகவே முடிந்தது என்று சிலர் கூறிக் கொள்வர். அது தோல்வியை ஒப்புக் கொள் முயொதவர்களின் மனநிலையாகும். இத்தகையோர் நம்மிடையே இருப்பதை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகின்றது.

வீண் வேலை

     நாம் எந்த வேலையைச் செய்கிறோமோ அந்த வேலையினை மட்மே செய்தல் வேண்டும். செய்யும் வேலையை விட்டுவிட்டுத் தேவையற்றவைகளில் கவனத்தைச் செலுத்துதல் கூடாது. ஏனெனில் அவற்றால் வீணான வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் நமது வேலையும் பாதிக்கும். இதனை,

     ‘‘கீழே கிடக்கிற கல்லத் தூக்கிக் கால் மேலே

     போட்டுக்கிட்டு குத்துதே கொடையுதேன்னு சொன்னானாம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. வழியில் செல்பவர் அவரது வேலையைப் பார்த்துக் கொண்டு செல்ல வேண்டும். அதை விடுத்து தேவையில்லாத விடயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. கீழே கிடக்கின்ற கல்லைக் காலில் எடுத்துப் போட்டுக்(கல் – பிரச்சனை) கொண்டால் அவ்வாறு போட்டுக் கொள்பவருக்கே அது வலியையும், துன்பத்தையும் தரும். தேவையற்ற நமக்குத் தொடர்பில்லாத பிரச்சனைகளில் நாம் மூக்கை நுழைத்தால் அதனால் நமக்குத் துன்பமே ஏற்படும். அதனால் பிரச்சனைகளை நாம் வலியச் சென்று வரவழைத்துக் கொள்ளக் கூடாது என்ற அரிய வாழ்வியல் கருத்தினை இப்பழமொழி வலியுறுத்துகிறது.

கிடைப்பது கிடைக்கும்

     நாம் எவ்வளவுதான் பாடுபட்டு உழைத்தாலும் ்அல்லது ஆசைப்பட்டாலும் நமக்கு இறைவனால் விதிக்கப்பட்டதே கிடைக்கும். அவ்வாறு கிடைக்கவில்லையெனில் நாம் அதற்காகக் கவலைப்படுதல் கூடாது. நாம் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறரைக் குறைகூறவும் கூடாது. இக்கருத்தினை,

     ‘‘எண்ணெயைத் தடவிக் கொண்டு எவ்வளவுதான்

     கீழே புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

     எண்ணெய் தடவினால் அதில் தூசி, மண் உள்ளிட்டவை எளிதில் ஒட்டிக் கொள்ளம். அதைத் தடவிக் கொண்டு கீழே புரண்டால் எவ்வளவு ஒட்டுமோ அவ்வளவே ஒட்டும். அதுபோல் நாம் எவ்வளவுதான் முயன்று ஒரு வேலையைச் செய்து லாபம் ஈட்ட நினைத்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும். நாம் பாடுபட்டோ குறைவாகத்தானே கிடைத்திருக்கிறது என்று நாம் வருந்தாது தொடர்ந்து நமது பணியைச் செய்துகொண்டே இருத்தல் வேண்டும். எதனையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனபக்குவம் வேண்டும் என்ற உளவியல் கருத்தினை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டிருப்பது நோக்கத்தக்கது.

தொண்டைக்குக் கீழே நரகம்

     சொர்க்கம் நரகம் எங்கே இருக்கிறது? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவை நமது உடலிலேயே இருக்கிறது. நல்ல உணவுப் பொருளை உண்டால் இன்பம் கிடைக்கும்-அது சொர்க்கம். அது உண்டு முடித்த பின்னர் உடம்பின் வேறுபாகத்திற்குச் சென்றவுடன் அது கழிவாக மாறுகின்றது. அது நரகம்-நரகல் என்பதே நரகம் என்று பேச்சு வழக்கில் வழங்கப்பட்டு வருவகிறது. நரகல் என்பது மனிதக் கழிவைக் குறிக்கும்.

     சிலர் உண்ணும்போதோ அல்லது எதையாவது  தின்று கொண்டிருக்கும்போதோ யாராவது தங்களது வீட்டிற்கு வந்துவிட்டால் தாங்கள் உண்டவற்றைத் திடீரென்று மறைத்து வைத்துவிட்டு வந்தவரிடம் பேச்சுக் கொடுத்து அவரை விரைவில் வீட்டை விட்டுப் போகச் செய்ய முயற்சிப்பர். மேலும் சிலர் விருந்துகளில் உணவு பரிமாறும்போது சரியாகப் பரிமாறாது ஆள்பார்த்து ஆள் பரிமாறுவர். இன்னும் சிலரோ நல்ல உணவுப் பொருள்களாயின் அதனைப் பரிமாறாது மறைத்து வைப்பர். இவர்களின் இத்தகைய செயலை,

     ‘‘தொண்டைக்குக் கீழே போனால் நரகம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

     சொர்க்கம் என்பது இன்பம். இனிமையானது. உணவுப் பொருளை உண்ணும்போது நாம் அதன் இனிமையால் இன்பம் அமைகிறோம். அது கண நேர இன்பமே ஆகும். அது நீடித்து இராது. தொண்டை-மிடறைவிட்டுக் கீழே இரங்கி வந்துவிட்டால் அதன் இனிமை ஒன்றுமில்லை. அது கழிவாகவே பின்னர் மாறிவிடும். அதாவது(நரகல்-மலம்-மனிதக்கழிவு) பிறர் அருவருக்கும் தன்மை உடைய ஒன்றாக மாறிவிடும். அதனால்தான் நமது முன்னோர்கள் நாம் உண்ணும்போது பிறர் வர நேரிட்டாலோ அல்லது விருந்தின் போது பிறருக்கு உணவினைப் பரிமாறும் போதோ உணவினைப் பிறர் அறியாது மறைத்து வைத்தல் கூடாது. அது இழிவானதாகும். பிறருக்கம் கொடுத்து தாமும் உண்டு மகிழ வேண்டும். அத்தகைய மனநிலை உடையவர்களாக மக்கள் வாழ வேண்டும் என்ற அரிய பண்பாட்டு நெறியை இப்பழமொழி நன்கு எடுத்துரைக்கின்றது.

மேலே-கீழே

     மேலே எறிந்த பொருள் எப்படியாகிலும் கீழே வந்து விழுந்துவிடும். இது நியூட்டனின் புவியீர்ப்பு விசைவிதியாகும். அதுபோல் ஒரு செயல் நடக்க வேண்டுமென்றிருந்தால் அது நடந்தே தீரும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதனை,

     ‘‘மேலே எறிஞ்ச கல்லு கீழே வந்துதானே ஆகணும்’’

     வானத்து மேலே எறிஞ்ச கல்லு அப்படியே நிற்காது’’

என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.

சுவரின் மேல்

     நாம் செய்யும் செயல் நமக்கே திரும்பவும் வரும். ஒருவருக்குச் செய்யும் தீமையானது திரும்பவும் செய்தவரையே அடையு. இது இயற்கை நியதியாகும். நன்மையும் அது போன்றதே ஆகும். நாம் செய்யும் எச்செயலாயினும் அது மீளவும் நம்மை வந்து சேரும் என்பதை,

     ‘‘சுவத்து மேல விட்டெறிஞ்ச பந்து திரும்ப வந்து தானே ஆகும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

     ஒருவர் மற்றொருவருக்குத் தீங்கு செய்யக் கருதும்போது அது திரும்பவும் தம்மை வந்து தாக்கும் என உணர்ந்து தீங்கினைச் செய்யாமலிருத்தல் வேண்டும். சுவரில் அடித்த பந்து மீண்டும் திரும்புவது போல செய்த வினைகள் மீள நம்மிடமே வரும் என்ற நன்னெறியை இப்பழமொழி தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.

சாக்கடை மேல் கல்

     தீயவருடன் தொடர்பு கொள்ளுதல் கூடாது. அவருடன் நட்புக் கொள்வதோ, அவரைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவருகிறேன் என்று முயல்வதும் கேடுவிளைவிக்கும் செயலாகும். இத்தகு செயல்களில் ஈடுபடுபவரையும் சமுதாயம் தீயவர் என்றே கருதும். தீயவரை விலக்கி நாம் நல்வழியில் வாழ வேண்டும். இத்தகைய நெறியை,

     ‘‘சாக்கடை(சகதியில-சேற்றில) யில கல்ல விட்டெறிஞ்சா

நம்ம மேலதான் தெறிக்கும்’’

(சகதி –சேறு சாக்கடை-கழிவு நீர்)

சேற்றுக்கருகில் நின்று கொண்டு அதன் மீது கல்லெறிந்தால் அது கல்லெறிந்தவர் மீது சேறு தெறித்து விழும். அது போன்றே தீயவரை நல்வழிப்படுத்த அவரை இடித்துரைத்தால் அதனை அவர் ஏற்றுக் கொள்ளாது தனக்கு அறிவுரை கூறியவருக்கே கெடுதல் செய்வார். அதனால் தீயவரைத் திருத்த முற்படுவதையோ, அவருடன் நட்புக் கொள்வதையோ ஒருவர் தவிர்த்தல் வேண்டும் என்ற அரிய கருத்தை இப்பழமொழி உள்ளடக்கி இருப்பது நோக்கத்தக்கது.

முள் மேல்

     வாழ்வில் சிக்கல்கள் என்பது இயல்பு. ஆனால் அதிலிருந்து எவ்வித பாதிப்பும் இன்றி மனிதன் மீள வேண்டும. திறமையுடன் செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். மனிதன் திறமையாகச் செயல்பட்டால் எத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டுவிடலாம். ஆனால் அவரசப்பட்டால் பாதகமாக முடியும். இதனை மனிதன் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதனை,

     ‘‘முள்ளு மேலே சீலை விழுந்திருச்சின்னா

பாத்துத்தான் எடுக்கணும்’’

என்ற பழமொழி உணர்த்துகிறது.

     சேலை மெல்லியது. முள் கூர்மையானது. வேகமாக இழுத்து எடுத்தால் சேலை கிழிந்துவிடும். அதனால் பார்த்து மெதுவாக எடுத்தல் வேண்டும்.  இங்கு சேலை-முள் என்பன குறியீடுகளாகும். பெண்ணானவள் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் அவளை அதிலிருந்து எவ்விதப் பாதிப்புமின்றி மீட்க வேண்டும் என்ற கருத்தை இப்பழமொழி உணர்த்துவது நோக்கத்தக்கது.

     சேலை என்பது பெண்ணையும், முள் என்பது அவள் சிக்கிக் கொண்ட பிரச்சனையையும் குறித்து நிற்கிறது. பெண்களின் பிரச்சனைகளைக் கையாளும் முறையை இப்பழமொழி எடுத்துரைப்பது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.

நாக்கு மேல்

     சிலர் யாராக இருந்தாலும் அவரைப் பற்றித் தவறாகப் பேசுவார். அது தவறு. ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்த பின்னர் பேசுவது சரி. ஆனால் ஒன்றும் தெரியாது அவரைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் கூறிப் பிறரை இழிவுபடுத்துவர். அவ்வாறு செய்வது கீழ்த்தரமான செயலாகும்.இதனை,

     ‘‘நாக்கு மேலே பல்லுப் போட்டுப் பேசக் கூடாது’’

என்ற பழமொழி விளக்குகிறது.

     நாக்கின் மேல் பல்லைப் போட்டால் பல்லால் நாக்குக் கடிபட்டு இரத்தம் வரும். அது போன்று ஒருவரைப் பற்றி அறியாது அவரைப் பற்றி அவதூறாகப் பேசினால் உண்மை தெரியவரும்போது அவதூறு கிளப்பியவர் துன்புற நேரும் என்பதை இப்பழமொழி எடுத்துரைத்து ஒருவரைப் பற்றி அவதூறு பேசுவதையாராக இருந்தாலும் கைவிடுதல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழி மொழிகிறது.

     கீழே மேலே என்ற சொற்கள் எவ்வாறு மனிதன் வாழ வேண்டும் என்ற உயரிய பண்பட்ட நெறியை நமக்கு எடுத்துரைத்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டுகிறது எனலாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>