/* ]]> */
Mar 092014
 

therivai

 கவிஞர் பத்மஜா நாராயணன் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார் . ஆங்கிலம் , ஃப்ரென்ச் , தமிழ் என்று பன்மொழிப் புலமையும் , எழுத்து , நடிப்பு போல பன்திறமைகளும் கொண்டவர் . மொழிபெயர்ப்புத் தளத்திலும் சிறப்பாகப் பங்காற்றி வருகிறார் .
கதவு , கொம்பு , வெயில்நதி , பூவரசி , வலசை ஆகிய சிறுபத்திரிக்கைகளிலும் , மலைகள்.காம் , அதீதம் .காம் , பண்புடன். காம் , கீற்று.காம் ஆகிய மின்னதழ்களிலும் இவருடைய படைப்புகள் பிரசுரமாகி உள்ளன .
மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் (2012 ) , தெரிவை ( 2014 ) என்று இவருடைய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன . இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ,  கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 2012 வருடத்துக்கான முதல் பரிசை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதிவிடுவதைக் காட்டிலும் ஒரு முழு கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்து விடுவது மிக எளிதான ஒன்று என்பது தான் விமர்சனங்கள் எழுதும் போது எனக்கு எப்போதும் தோன்றுவது .

சில மாதங்களுக்கு முன்பு , இணையத்தில் அவர் முன்னர் பகிர்ந்திருந்த ..

சிறிது மூடியிருந்த / கதவின் இடையில் / தெரிந்த / உன் பாதங்களுக்கேற்ற / முகத்தை / நான் மனதில் / வரைந்துவிட்டேன். / வரைந்த அது / சிதையப் போகிறது / தயவு செய்து / என் கண்படாமல் போ நீ ..

என்ற , எளிய ஆனால் சொற்கச்சிதமும் , வெளிப்பாட்டில் அறிவுக்கூர்மையும் தெரிந்த இந்தக் கவிதை தான் எனக்கு பத்மஜாவின் முதல் தொகுப்பான “மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்தை” அறிமுகம் செய்து வைத்தது . கவிதைகளின் எண்ணிக்கையைப் பார்க்க தெரிவை முன்னதை விடவும் சிறியது என்றாலும் விசாலப்பட்டிருக்கும் கவிஞரின் கவித்தளத்தை பறைசாற்றும் விதத்தில் இரண்டாம் தொகுப்பு அமைந்துவிட்டிருக்கிறது .
நவராத்திரியின் போது கொலு வீற்றிருக்கும் தெய்வத்திருவுருவங்களை ரசிக்க விடாமல் , தம் பால் கவனம் ஈர்க்கும் ரங்கோலிகளைப் போல அல்லாமல் பொம்மைகளைத் தாங்கிப் பிடிக்கும் படிகளாக ட்ராட்ஸ்கி மருதுவின் கோட்டோவியங்கள் கவிதைகளோடு இயைந்து அருமை சேர்க்கின்றன .

கவிதையின் இந்தச்சொல்லுக்கான அர்த்தம் என்னவாக இருக்கக் கூடும் என்று வாசகனை பீதி அடைய வைக்கும் கரடுமுரடான வார்த்தைகளோ , அர்த்தமும் தொடர்புமற்ற படிமப்பிரயோகங்களோ இல்லாத , எளிய , இயல்பான மொழி , உண்மையை நேர்மையுடன் வெளிப்படுத்தும் தன்மை , வெகுகாலமாகப் பலராலும் பாவிக்கப்படும் வடிவத்தைச் சுவீகரித்துக்கொண்டு விடாமல் தனக்கேயான ஒரு தனி மொழி என்று நல்ல கவிதைகளை எழுதித் தொகுத்திருக்கிறார் பத்மஜா . மிக எளிய , இனிமையான ஒரு கவிதையைப் பற்றிச்சொல்லி துவங்குகிறேன் ..
“நாய்க்கனவு” என்ற ஒரு கவிதை

/ ….
குழந்தையென / ஊஞ்சலாட்டி தூங்கியபின் / அதன் முகம் பார்த்து / வினாவொன்று எழும் / என்றாவது / எப்பொழுதாவது / அதன் கனவில் / நான் வருவேனா ?

இதைப் படித்ததும் .. பசிக்கு அருந்தியபின்னும் , ஆசையில் , மிதமிஞ்சிப் பாலருந்தி விட்டு வாயிலெடுக்கும் குழந்தையின் மீது தாய்க்குப் போல கவிஞரின் மீது இரக்கம் சுரக்கிறது வாசகனுக்கு .. சுயஇரக்கம் , பச்சாதாபம் என்று தோன்ற விடாமல் இயல்பான ஒரு நெகிழ்வை உண்டாக்கி செல்லும் முடிவு .. இன்றைய எந்திரச்சூழலில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அன்புக்கான ஏக்கம் எத்தனை அழகான கவிதையாகி இருக்கிறது !

குத்தும் தனிமையின் வலி பேசும் கவிதைகள் பலவும் தொகுப்பில் உண்டு என்றாலும் ,

எல்லாப் பறவைகளும் / பறந்து சென்று விட்டன / ஒரே ஒரு மேகம் மட்டும்/ மெதுவாய் மிதந்தபடி / நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில் / ஏனோ அலுப்பே இல்லை / மலையும் நானும் மட்டும்

எனும் இந்த சிறு கவிதை எனக்கு மிகப் பிரியமான ஒன்றாக இருக்கிறது ..

//கவிதையை வாசிக்கையில், கவிஞர் சொல்ல வருவது இதுவல்ல; வேறேதோ என்று வாசிக்கிறவருக்குத் தோன்றக் கூடாது . மாறாக, இதைக் கவிஞர் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லி இருக்கிறார் என்று முதலில் தோன்ற வேண்டும்; பிறகுதான், இதுமட்டும் அல்ல போல் இருக்கிறதே; கவிஞர் சொல்ல வந்தது வேறொன்றும் போலவே என்றும் ஒரு தோற்றம் தர வேண்டும். அதாவது, verbal level meaning should be the first priority; rest are all secondary and tentative. //
என்பார் கவிஞர் ராஜசுந்தரராஜன் .. எத்தனை அழகாக இந்த விளக்கத்துக்குப் பொருந்தி வருகிறது இந்தக் கவிதை ! காட்சிரூபமாக விரியும் வரிகளின் இடையில் ஒளிந்து கொண்டிருக்கும் கொடிய தனிமை , கவிதை முடிந்ததும் தன் ரீங்காரத்தை நம்முள் அதிரச்செய்யும் இந்த subtlety தான் கவிதைக்கு எத்தனை சிறப்புச் சேர்க்கிறது !

மனதில் பதிந்த , பாதித்த , ஏதோ ஒரு சம்பவம் , ஒரு காட்சி .. கிளர்த்திவிடும் எதிர்வினைகளே ஒரு கவிதையின் வடிவில் பெரும் பங்கு வகிக்கின்றன . சொல்லும் பொருளுமாகச் சேர்ந்து நனவிலியின் இயக்கம் சித்திரங்களாக வெளிப்பட்டு வரிகளாக உருக்கொள்கின்றன . கவிஞர் சொல்ல வருவது என்ன என்பதைத் தாண்டி வாசகனின் மனதில் அதிர்ச்சி தரத்தக்கதாக , வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தக் கூடியதாக , தர்க்கரீதியான பொருளைத் தேடத் தோன்றாமலும் செய்ய ஒரு நல்ல கவிதையால் முடியும் . கவிதையின் சொல்லையும் பொருளையும் பொருள் தொடர்புகளையும் சரியான ஒரு கட்டமைப்பில் கவிஞன் அமைக்கும் போது இம்மாதிரியான கவிதைகள் சாத்தியப்படுகின்றன . இதற்கு நல்ல மொழியறிவும் ஆழ்மன பிம்பங்களை சொற்களாக கவித்துவமாக வெளிப்படுத்தும் திறனும் அத்தியாவசியமாகிறது ..

“என்னிடம் உள்ள விடைகளுக்கெல்லாம்” எனத் துவங்கும் கவிதையின் சில வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்

…..இங்கிருந்து காணும் போது / இரண்டாவது வானம் தெரிகிறது / நாளை மலரப் போகும் பூவின் / மணம் இதோ என் கைகளில்
…. / தேர் ஏறி ஊர்வலம் வர நடந்து வருகிறது சிவம் /

அதே போல்

“கோபம் திரும்பத் திரும்ப வருவது போல” எனத் துவங்கும் ஒரு கவிதையின் வரிகள்

…./ ஓர் உறைந்த ரத்தத்துளி போல் / நான் அணியும் ஒரு மாயத்தோற்றமும் / என்னிடமுண்டு / அதை என் இடது கையில் ஒளித்து வைத்திருக்கிறேன் / உன்னையும் உன் சிசுவையும் / அதன் பாலூறிய கண்ணில் பொதிந்திருந்தேன் / என் உதடமர்ந்த ஒரு கிழத் தவளையை / நான் வெட்டி வீசும் போது / உன்னை முத்தமிடுகிறேன் …//

இன்னதைத் தான் கவிஞர் சொல்ல முற்படுகிறார் , இந்தப் படிமம் இதைத்தான் குறிக்கிறது என்ற நிச்சமின்மைகளின் ஊடே வாசகனின் நனவிலியில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற பிம்பங்களை , உணர்ச்சிகளைக் கிளர்த்தும் வரிகள் இவை .
“வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்” , “அடகுக்கடை” போன்ற பட்டியல் கவிதைகளைப் பார்க்கும் போது “என்னிடம் உள்ள ..”. , “கோபம் .. ” போன்ற கவிதைகள் கவிஞரின் மீது மிகுந்த நம்பிக்கையை , எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன .

சிறிய ஊடல்கள் முதல் பெரிய மனத்தாபங்கள் வரை , சின்னஞ்சிறிய பிரச்சினைகளிலிருந்து தீர்க்க இயலாத துன்பங்கள் வரையிலும் கூட .. நம்பிக்கை ஏற்படுத்தும் , வாழ்வை இனியதாக்கும் , வாழத்தகுந்தது தான் என்ற நம்பிக்கையைத் தரும் ” வசந்தம் ” காதல் தானே .

…. மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை / மலர்ந்து விரிந்தது ஒரு நீலப் பூ / ….. உயிர்க்கும் செடியினை வெடித்துக் கிளப்பியது / நீள் மழை புணரும் பொறை பூமி / வந்தது வசந்தம் . /

என்ற இவை தொகுப்பின் காதல் கவிதைகளில் மிக உயிர்ப்பான வரிகள் !

“முத்தமலை” , “மரங்கீழ் மிழற்றல்” , “முத்தம் சரணம் கச்சாமி” ஆகிய தாபத்தைப் பேசும் கவிதைகளில் ஒரு கெஞ்சும் தொனியைக் காண்பதாக அம்பை தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் . அது கொஞ்சும் தொனியாகத் தான் எனக்குத் தெரிகிறது ..சிருங்காரத்தில் கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் இடையிலான வேறுபாடு மிகச்சிறியது என்றாலும் முக்கியமானது அல்லவா ?
சர்வசுதந்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆண் கவிஞர்களுக்கு இடையில் முத்தக் கவிதைகள் எழுதவும் அந்த மட்டுக்கு முடித்துக் கொள்ளவும் மட்டும் தான் பத்மஜா போன்றோரின் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பால்உணர்வுகளை , வேட்கைகளை , கட்டற்று , தங்கள் கவிதைகளில் பிரகடனப்படுத்தும் பெண் கவிஞர்களைக் கெட்ட வார்த்தைக் கவிஞர்கள் என்று என்னிடமே விமர்சித்த ( ஆண் ) கவிஞர்களை என்ன செய்வது ?

தமிழ்க்கலாச்சார வாழ்வின் உள்ளார்ந்த அலைக்கழிவுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற , அல்லது .. தன் மொழியின் துணையுடன் எதிர்கொள்ளத் துணியும் பெண்களை தன் கவிதைகளில் பிரநிதித்துவப்படுத்தியிருக்கி
றார் பத்மஜா நாராயணனன் என்று தான் சொல்ல வேண்டும் . வகுக்கப்பட்டிருக்கும் நியதிகளுக்குக் கட்டுப்பட்டு தன் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டிருக்கிறாரோ பத்மஜா என்ற கேள்வியும் கூட பல இடங்களில் எனக்குத் தோன்றியது .
இங்கு தான் “இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது” என்ற கவிதையைச் சொல்ல வேண்டி வருகிறது .. துயரமும் வலியும் நிறைந்த சொற்களான

/மருந்தொன்று கொண்டு வா / இல்லை ஒரு திராவகம் ! / பொசுங்கட்டும் / என் தூக்கம் கலைக்கும் துரோகி / … விலகு / ஐயோ ! அணை / இல்லை ! / இவள் பெண்மையைக் கொல் / ..

இவை .. வெறும் பாலியல் வேட்கையைப் பேசும் சொற்களாகப் பார்க்கப்படும் அபாயம் உள்ளது என்ற நினைப்பே ஆயாசம் அளிப்பதாக இருக்கிறது ! இம்மாதிரியான தளங்களில் பெண் பேசுவது இன்னமும் சலனங்களைத் தான் கொண்டு வருகிறது என்பது வேதனை . மேலும் அது கவிஞரின் துயரமாக / வேட்கையாகத் தான் இப்பொழுதும் பார்க்கப்பட வேண்டுமா என்ன ?

பழைய பாணியிலான ஒரு சில கவிதைகள் , சிலவற்றை முடித்திருக்கும் போக்கில் தட்டையான மற்றும் இணக்கமற்ற தன்மை
எ.கா /முதன் முறையாய் சந்தித்துவிடுவாய் / சொல்லிவிட்டேன் ஆமாம் ! / , /அதற்காக / பேராசைக்காரி என்று மட்டும் / என்னைக் கூறிவிடாதே ! /
போன்ற வரிகள் ..
கவித்துவமாய்த் துவங்கி வசனநடையில் சறுக்கும் சில என்று சில விமர்சனங்களையும் கவிஞரிடத்தில் சொல்ல வேண்டியவளாக இருக்கிறேன் .
தெரிவையின் மொழிபெயர்ப்புக்கவிதைகள் :

அபாரமான இரு மொழிப்புலமையும் மொழிபெயர்ப்புக்குத் தேவையான நுண்ணறிவும் உள்ளவராக இருக்கிறார் பத்மஜா ..not only is she proficient in her language skills she sure has the knack for translation ..

“without it ( translation ) we would live in arrogant parishes bordered by silence ” -
என்கிறார் George stainer

கலாச்சாரக் கூறுகளான நடை , உடை , பாவனை போன்றவற்றிர்க்கும் மிகுந்த அர்த்தம் இருக்கிறது என்பதோடு மூலத்தின் உச்சத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது என்பது ஏறக்குறைய இயலாது எனும் போது ஆங்கிலம் மற்றும் வெவ்வேறு மொழிக்கவிதைகளை ஆங்கிலத்தின் வழி தமிழாக்கி , வேறெப்படியுமே தமிழ் வாசகனின் பார்வைக்கு வர இயலாத கவிதைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டியது . தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது .

ஆந்ரி வோஸ்நஸென்ஸ்கி ஒரு கவிதையை வரையறை செய்கையில் கூறுகிறார் போல்
” a crystal , model of the world , structure of harmony , a method of thought penetrating to the essence of what is happening , a way of revealing the truth . Poetry knows no borders ; it has no capitals ,and no provinces , languages are many but poetry is one ”

Anne sexton இன் End middle beginning என்ற கவிதையை உதாரணத்துக்குப் பார்க்கலாம்
There was an unwanted child / Aborted by three modern methods / she hung on to the womb / hooked onto it / building her house into it / and it was to no avail / to black her out .. இதை வேறெப்படியும் , தன்னை விடச்சிறப்பாக மொழிபெயர்த்து விட முடியாது என்கின்ற நம்பிக்கை வாசகன் மனதிலும் ஏற்படுமாறு தமிழாக்கி இருக்கிறார் பத்மஜா ..

யாருக்குமே வேண்டாததாய் / ஒரு குழந்தை இருந்தாள் / மூன்று நவீன முறைகளில் / கருவிலேயே சிதைக்க முயலப்பட்ட
கருவறையை பற்றிக் கொண்டு / அதனோடு பிணைந்து / தன் வீட்டை அமைத்துக்கொண்ட / அவளை / எந்த ஒரு முறையாலும் / இல்லாமலாக்க இயலவில்லை -
இப்படி !

மொழிபெயர்ப்பு என்று வரும் போது நாம் சந்திக்கும் சிக்கல்கள் தான் எத்தனை எத்தனை ! நம் மொழி வளம் அல்லது அதன் குறைபாடுகளை , அதன் எல்லைகளைச் , சந்திக்க நேருகிறது . இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் மீறி மூலத்தை எழுதிய கவிஞனின் எல்லைக்குள் அத்துமீறாமலும் கவிதையை சிதைத்துவிடாமலும் , சாரம் இழந்து போகாமலும் பெரிய சமரசம் எதுவும் செய்து விடாமலும் ஓரளவுக்காவது original க்கு நியாயம் செய்வது என்பது பிரம்மப்பிரயத்தனம் தான் . பத்மஜா அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

குடும்ப அமைப்பிலும் சமூகத்திலும் எத்தனையோ குரூரங்களையும் வன்முறைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் நமக்கு , நாடுகளுக்கிடையிலான போர்கள் , அந்நாட்டின் மக்களுக்கு – குறிப்பாக குழந்தைகளிடத்து ஏற்படுத்தும் விளைவுகளை //எழுதும் விரல்களின் கண்ணீரால் // சொல்லும் கவிதை நிஸ்ஸார் கப்பானியின் அரேபியக் கவிதை ” வரைதலில் ஒரு படம் ” . ஒரே ஒரு படம் வரைந்து கொடுக்கக் கோரும் மகனுக்கு , போரினால் சிதைந்து உருக்குலைந்திருக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை மகன் ஒரு பறவையைக் கேட்கும் இடத்தில் சிறையையும் , கோதுமைச்செடியை வரையாமல் துப்பாக்கியையும் வரைந்து காட்டுகிறான் ..

மகன் தன் பேனாவையும் / வண்ண பென்சில்களையும் / என் முன் வைத்து / எனக்கான ஒரு தாய்நாட்டை வரையுங்கள் என்கிறான் / கையில் எடுத்த தூரிகை நடுங்க / உடைந்து அழுகிறேன் நான் .. என்று முடிகிறது கவிதை .

வாசிக்கும் யாரையும் சில தினங்களுக்கேனும் சமன் குலையைச்செய்யும் , வாசித்த நிமிடம் மனம் கசந்து , நம் குழந்தைகளின் உலகில் இத்தனை அவநம்பிக்கையையும் வன்முறையையும் நாம் விதைத்து விட்டோமா என எண்ணி குமுற வைக்கும் கவிதை ! தொகுப்பின் மொழிபெயர்ப்புக்கவிதைகளில் என்னை வெகுவாக உணர்ச்சி வசப்படச்செய்தது இந்தக் கவிதையே .

தனக்கு மிகவும் பிரியமான ஒரு பூச்சாடிக்கென மலர்களைச் சேகரிக்கும் சிறுமியைப் போல காதல் , வேட்கை எனவும் மொழிபெயர்ப்புக்கவிதைகள் தேர்வில் பிரத்யேக கவனம் கொண்டு மனம் பிறழ்ந்தவர்கள் பற்றின ஒன்று , பெண்ணியக் கவிதை , பெண் சிசுக்கொலை மற்றும் பெண் நிலையைச் சித்தரிப்பது , ஆணும் பெண்ணுமாய் இருக்கும் அர்த்தநாரிகள் பற்றியது என்று ஆர்வத்தோடு எழுதிச் சேகரித்துத் தொகுத்திருக்கிறார் பத்மஜா . நல்ல கவிதைகளைத் தேடும் வாசகனின் முன் நீண்டிருக்கும் .. காதலை , துயரத்தை , தீராத்தனிமையை , அர்த்தநாரிக்களின் சாபக்கனலை , தோட்டாக்களின் எரி மணத்துடன் கலந்து கமழும் ஒரு பூச்செண்டு இது ..

..ஷஹி ..

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>