/* ]]> */
Aug 012011
 

உலக மக்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டும்…உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: “விசுவாசங்கொண்டோரே ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் உள்ளம் சுத்தி பெற்று பயபக்தியுடையவர்களாகலாம்.”

நோன்பானது , செறிமானக்கருவி மற்றும் குடல் அவ்விரண்டின் தொடர் இயக்கத்தின் சிரமத்திலிருந்து ஓய்வை நல்குகிறது , மனதைச் சுத்தப்படுத்தி நன்மை செய்தல், ஒழுங்குற எதையும் செய்தல், கீழ்படிதல், சகித்துக்கொள்ளுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றுக்கு அம்மனதை பழக்கப்படுத்துகிறது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் என்பதால் ரமலான் மாதம் துவங்கும் முன்பே ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். வீட்டை சுத்தம் செய்வது, அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவது என்று. நோன்பு துவங்கி விட்டாலோ…பகலெல்லாம் நோன்பாயிருந்து மாலையில் நோன்பு திறக்கும் நேரம் படு பிசியாகி விடுவோம். அதுவரையில் மந்த கதியில் போகும் நாள் மாலை நான்கு மணியில் இருந்து சூடு பிடித்து விடும். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, அதே சமயம் சத்தான உணவுவகைகள் செய்து , அனைவருமாக அமர்ந்து நோன்பு திறக்கும் இன்பம் ..ஆ..அது சொல்லில் அடங்காது. பசியும் தாகமும் அடங்கி மனதுக்கும் வாழ்வுக்கும் வலு சேர்க்கும் இறைதியானத்தில் வீடே திளைத்திருக்கும் .

பொதுவாக நோன்பு நாட்கள் முப்பதையும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பத்தாகப் பிரித்து , முறையே பேரீட்சை, தண்ணீர், உப்பு என்ற மூன்றையும் கொண்டு நோன்பு திறப்போம். பேரீச்சையும் தண்ணீரும் உடலுக்கு தேவையான அதிமுக்கியமான சத்துக்கள். உப்பு? உயிர் காக்கும் பொருளாயிற்றே! மட்டுமல்லாமல் நோன்பின் இறுதிப் பத்தில் நோன்பு காலம் முடிகிறதே என்ற வருத்ததுடன் உப்பில் நோன்பு திறப்பதாக ஒரு கருத்தும் உண்டு.

உப்பு கொண்டு நோன்பு திறக்கும் நேரம் எல்லாம் என் நினைவில் அப்பா தான். அப்பாவும் அம்மாவும் காதல் ,கலப்பு மணம் புரிந்து கொண்டவர்கள். அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் அம்மா இருக்கும் போது அவருக்கு சரியாக வீட்டின் அத்தனை வேலைகளிலும் அப்பா கைகொடுப்பார். எங்கள் அனைவருக்குமாக டிபன்பாக்ஸ் ரெடி செய்யும் பொறுப்பு அப்பாவினது தான். ஒரு நாள் பகலுணவு நேரம், பசியுடன் டப்பாவைத்திறந்து ஒரு கவளம் உண்கிறேன்.. சுத்தமாக உப்பில்லை உணவில்! பசியும் கோபமுமாக அப்படியே கொட்டிக் கவிழ்த்து விட்டு வகுப்பில் சென்று அமர்ந்து விட்டேன்.

மதியத்தின் முதல் வகுப்பு துவங்கி சிறிதே நேரத்தில் அழைப்பு வந்துவிட்டது. ‘ஷஹி, யுவர் டாட் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ இன் தி ஆஃபிஸ் ரூம்’ என்று. என்னவோ என்று ஓடினேன்.’ என்னப்பா ?’ என்றதற்கு ‘ஆஃபிஸில சாப்பிடும் போது தான் சுத்தமா உப்பில்லைன்னு தெரிஞ்சிது நீ சாப்பிட்டிருக்க மாட்டியேன்னு தான் அரை நாள் லீவ் போட்டுட்டு வந்தேன் என்கிறார்!” என்னை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்த வைத்து விட்டு பிறகு பள்ளியில் விட்டுச்சென்றார். என் திருமண வரவேற்பின் போது அப்பாவின் நண்பர் ஒருவர் இந்த சம்பவத்தை என் கணவரிடம் சொல்ல இன்றும் அது என்னவரின் நினைவில் நீங்காமல் இருக்கிறது. வாழ்வில் சுவை கூட்டும், உயிர் காக்கும் ,பெண்களின் மனங்களில்  உறைந்திருக்கும் வலு சேர்க்கும் உப்பாகத் தான் அப்பாக்கள் இருக்கின்றனர்.

கவலைகளற்ற பதின் வயதில், அத்தை மகனையே திருமணம் செய்து கொண்டதால் தாய் வீடு நீங்கும் போது அழ வேண்டும் என்றே தெரியவில்லை எனக்கு. அம்மாவும் கண்ணீர் ததும்பிய விழிகளோடு அமைதியாகப் ‘போய் வா’ என்றார். அப்பாவுக்கு சலாம் சொல்ல திரும்புகிறேன்.. ஓவென்ற அழுகைச்சத்தம் ! ஒரு பெண் பிள்ளை போல் கதறி அழுகிறார் அப்பா! அப்பா அழுகிறாரே என்ற தாபத்தில் துளிர்த்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டு  நானே அப்பாவை சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது!

அராபியாவில் பெண்குழந்தைகளை அவமானச் சின்னமாகக் கருதி,அராபியர்கள் உயிரோடு புதைத்துக் கொண்டிருந்த சமயம் ..முகம்மது நபியவர்கள்”இரண்டு பெண் மக்களைப் பெற்று அன்புடன் வளர்த்து, மார்க்கம் பயிற்றுவித்து, கரை சேர்ப்பவர் ,சுவனத்தில் என்னுடன் இருப்பார் “என்று கூறியதாக ஒரு ஹதீத் கேட்டிருக்கிறேன். என் அப்பாவுக்கு நான் ஒரு பெண் தான். நடுத்தர வர்க்கமென்றாலும் ஒரு இளவரசிக்குரிய சகல சந்தோஷங்களுடன் என்னை வளர்த்த என் அப்பாவுக்கும், பெண் மக்களைப்பெற்று அவர்களைப் பேணி வளர்க்கும் உலகின் எல்லா அப்பாக்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கிருபை செய்யட்டும்.

பால்ய வயதிலேயே உலக இலக்கியம், உலக சினிமா, கம்யூனிச சிந்தனை என்று அத்தனையையும் அறிமுகம் செய்து, இன்றும் என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டிவரும் என் அப்பாவுக்கே நான் எழுதிய, எழுதவிருக்கும் அத்தனையும் சமர்ப்பணம்.

நோன்பு நாட்களின் நல்வாழ்த்துக்களுடன்

                                                                                                  …ஷஹி…

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>