/* ]]> */
Aug 152011
 
FLAG

இந்தியர்களாகிய நாம்  ஆகஸ்ட் 15 ஆன இன்று 65 வது சுதந்திர தினத்தில்  அடியெடுத்து வைக்கிறோம்..  விடுமுறை நாளான இன்று தொலைகாட்சி பெட்டிக்கு முன்னாள் அமர்ந்தோ அல்லது குடும்பத்தினர்,நண்பர்களுடன் வெளியில் சென்றோ பொழுதைக் கழிக்கலாம் என்று நினைப்பவர்கள் ஒரு வகை, இன்று ஒரு நாள் மட்டும் நெஞ்சில் தேசியக் கொடியை குத்திக்கொண்டு விறைபபுடன் அலைபவர்கள் மற்றொரு  வகை..

எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல்   ஆனால் “டாஸ்மாக்” மூடியிருப்பார்களே என்று மட்டும் கவலை கொள்ளும் “குடி” மகன்கள் ஒரு வகை.  .”வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம்.அவனைப்போல வருமா” என்று ஐந்தறிவோடு பேசும் அடிமைபுத்தியுள்ளவர்கள் மற்றொரு  வகை..

இப்படி பல தரப்பட்ட வகையினரையும் , பல ஜாதி,மத,இன,மொழி கொண்ட பல்வேறு தரப்பினரையும் தாங்கிக் கொண்டிருப்பதே நம் பாரதத்தாயின் பெருமை..அந்த பாரதத்தாயை எந்நேரமும் நெஞ்சில் தாங்கிக்கொண்டிருக்கும் வகையினரும் இங்கு ஏராளம்..பெருமையோடு நின்று விடாமல்  “நாம்  இந்தியர்” என்ற உணர்வினை உயிர் போனாலும் போகாமல் போற்றிக் காப்பதே இந்தியனாகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமை

அந்நியர்களின் படையெடுப்புகளையும் மீறி, பலதரப்பட்ட கலாச்சார வேறுபாடுகளையும் தாண்டி இந்தியாவைப் போல உலக வரலாற்றில் எந்த ஒரு  நாடும் நிமிர்ந்துநின்றதுமில்லை,நிற்கப் போவதுமில்லை..

வணிகம் செய்வதாக கூறி உள்ளே நுழைந்து தங்களின் புத்தி சாதுர்யத்தாலும் , பிரித்தாளும் கொள்கைகளாலும் , மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் உதவியினாலும் இந்தியாவை ஆங்கிலேயர்கள் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் .இவர்களின் வருகை இந்தியாவை முழு தேசமாக அவர்களுக்கு   எதிராக ஒன்றுபடுத்தியது .. இந்த ஒற்றுமை முன்பே இருந்திருந்தால் நம்மை விட 12 மடங்கு சிறிய நாடான இங்கிலாந்தால் நம்மை அடிமைப் படுத்தியிருக்க முடியாது..

“பட்ட காலிலேயே படும்,கெட்ட குடியே கெடும்” எனும் கூற்றிற்கேற்ப பல்வேறு இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்து வந்த நம்  பாரத தேசம் பின்னர் திலகர்,காந்தி,பகத்சிங்,போஸ்,பாரதி போன்ற பல்லாயிரக்கனக்கானோரின் தியாகங்களாலும் , இரத்தம் சிந்தினாலும் இலச்சியத்தை சிதற விடாத போராட்டங்களினாலும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் சுதந்திரம் அடைந்தது…

உலகிலேயே இரண்டாவது பெரிய ஜனநாயக நாடாகவும் , இராணுவ பலத்தில் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கும் இந்தியா சுதந்திரம்அடைந்து 64 ஆண்டுகள் முடிவடைந்த போதிலும் போதுமான முன்னேற்றத்தை நிச்சயம் அடையவில்லை…

நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முக்கியமான இரண்டு காரணிகள் ஊழலும்,தீவிரவாதமும்..  நம்  தேசத்தை பல  முறைகள்  ஆண்டும், இப்போது இரண்டாவது  முறையாக தொடர்ந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தும் காங்கிரஸ் இரண்டு காரணிகளையும் ஒழிக்காததோடு மட்டுமல்ல , அதற்கு துணை போய்க்கொண்டும்,ஒழிப்பதற்கு போதுமான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதும் நம் துரதிருஷ்டம..

சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியை  கலைக்க சொன்னார் காந்தி..அப்படி செய்த்திருந்தால் இன்று   அந்த கட்சிக்கு எதிராக   ஒரு  காந்தியவாதியே கொடி பிடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.. அன்னா ஹசாரே முதல் முறை உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது எல்லோரும்   இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்..அப்பொழுதே அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ? என்ற கேள்வி நம்முள் எழாமல் இல்லை..

இன்று எதிர்பார்த்ததைப் போலவே அவர் பணியவில்லை என்றவுடன் அவர் மீதும் இரண்டு லட்ச ரூபாய்க்கு ஒரு ஊழல்  குற்றச்சாட்டை  சுமத்தியிருக்கிறது மத்திய அரசு …இரண்டு லட்சம் கோடிஊழல் செய்பவர்களை கூட அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் காங்கரஸின் இந்த செயலில் வியப்பு ஒன்றுமில்லை…

இவ்வளவு முட்டுக்கட்டைகள் இருப்பினும் இவற்றையெல்லாம் ஆட்சி மாற்றத்தினாலோ , கடுமையான சட்டங்களினாலோ,வளர்ச்சித் திட்டங்களினாலோ நிவர்த்தி செய்து விட முடியும்..ஆனால்  “நாம்  இந்தியர்” என்ற உணர்வு மேலோங்கி நிற்காமல் மேலோட்டமாக இருக்கும் வரையிலும் நம்  தேசம் வல்லமை படைத்த நாடாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை..

நம் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் பாதைகள் வேறுபட்டிருந்தாலும் , இலக்கை நோக்கிய பார்வைகளில் வேறுபாடில்லை… இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் நம்மிடையே  மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள் ?

ஆறுகள் காடு,மலை தாண்டி எங்கிருந்து ஓடி வந்தாலும் கடலில் கலப்பது போல நாம் அனைவரும் இந்தியா என்ற ஒரே குடைக்குள் ஒன்று பட வேண்டும்.. கார்கில் போர் , கிரிக்கெட் மேட்ச் என்று ஏதாவது நடக்கும் போது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டை காட்டும் நாம் , இரவு, பகல் பாராமல் வெயிலிலும், குளிரிலும் நமக்காக எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும் இராணுவ வீரர்களைப் போல எந்நேரமும் தேசப்பற்றோடு இருக்க வேண்டும்..

அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளைப் பார்த்து இரத்தம் கொதிக்கும் நாம் , உலகின்  எந்த ஒரு மூலையில் சக இந்தியன் துயரபட்டாலும் கொதிக்க வேண்டும் , துடிக்க வேண்டும்..அதுவே உண்மையான தேசிய உணர்வு..

தேசிய ஒருமைப்பாட்டையும் , இந்திய இறையாண்மையையும் நாம் இரு கண்களாக பார்க்காவிடில்  நாம் கண்ணிருந்தும் குருடர்களே…

சுதந்திர தினமான இன்றிலிருந்து நான் தமிழன் , தெலுங்கன் , மராட்டியன் என்றோ இல்லை  நான் இந்து , முஸ்லிம் , கிறிஸ்துவன்  என்றோ  சொல்லாமல்

நாம்  இந்தியர்   என்று   சொல்வோம்

                                                                      சொல்வதில் பெருமை கொள்வோம்

எல்லோருக்கும் என்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஜெய்ஹிந்த்                                                                                                                                                                                                                         வாழ்க பாரதம்

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>