
வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு…
நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று…
எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?…
நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை…
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில்
சண்டைகள் போட்டிறுக்கிறோம்…
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை…
சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை…
வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்…
அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்…
என் காதலுக்கு
தூது போனவள்
நீ
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன் நான்…
இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை…
இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments