/* ]]> */
Mar 062012
 


த்திரபிரதேசம் , பஞ்சாப் , உத்ராகந்த் , மணிப்பூர் , கோவா என ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன … இதில் உ.பி , பஞ்சாப் தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்களுக்கிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது , குறிப்பாக  403 தொகுதிகள் அடங்கிய உ.பி யில் ஆட்சியை பிடிப்பவர்கள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது அரசியல் வரலாறு …

அதனால் தான் மாநில கட்சிகளான எஸ்.பி பி.எஸ்.பி இரண்டுடனும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸ் பி.ஜே.பி ஆகிய தேசிய கட்சிகளும் மிகுந்த வலிமையுடன் களத்தில் இறங்கின … எப்போதுமே குடும்ப அரசியலை நம்பாத பி.ஜே.பி உமாபாரதியை நட்சத்திர பேச்சாளராக களமிறக்க , காங்கிரஸ் வழக்கம் போல ராகுல் காந்தியை களமிறக்கியது …

இந்த தடவையும் ராகுல் காந்தி கூட்டிய  200  க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களுக்கு கை தட்ட கூட்டம் கூடியதே ஒழிய “ கை ” க்கு ஒட்டு போடுவதற்கு அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன … பீகார் குஜராத் தேர்தல்களை தொடர்ந்து ராகுல் மீண்டும் மண்ணை கவ்வியிருப்பது அவர் மீடியாக்களை கவர்ந்த அளவிற்கு மக்களை கவரவில்லை என்பதையே காட்டுகிறது …

2007 ஆம் ஆண்டு தேர்தலில் 22 இடங்களை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றியிருந்தாலும் , கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் 95 தொகுதிகளை கைவசம் வைத்திருந்த காங்கிரசிற்கு இது பெரிய அடி … எதிர்பார்த்ததை போலவே தனிப்பெரும் கட்சியாக 224 தொகுதிகளை கைப்பற்றியுருக்கும்  எஸ்.பி தனித்து ஆட்சியமைக்க போவது உறுதியாகிவிட்டது … இந்த வெற்றிக்கு முலாயம் சிங்கின் புதல்வன் அகிலேஷின் பங்கு மகத்தானது என கூறப்படுகிறது …

80 சீட்களை மட்டும் வென்ற பி.எஸ்.பி ஆட்சியை இழந்து விட்டது … சட்டம் , ஒழுங்கை கட்டுக்குள் வைத்ததாக சொல்லப்பட்டாலும் மாயாவதியின் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம் … சென்ற முறை இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்த பிராமண , தாகூர் சமூகத்தினர் இம்முறை பி.ஜே.பி , காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததும் பி.எஸ்.பியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் …

பி.ஜே.பி யை பொறுத்த வரை கடந்த முறை பெற்ற 51 சீட்களை விட 2 சீட்கள் குறைவாக பெற்றது சறுக்கல் தான் என்றாலும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்ததை எண்ணி வேண்டுமானால் சந்தோசப்பட்டு கொள்ளலாம் …

பஞ்சாபிலும் வரலாறு காணாத வகையில் ஆளுங்கட்சியான அகாலி தள் – பி.ஜே.பி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது … ஆட்சியை பிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 46 இடங்களையே வென்றிருக்கிறது.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல கோவாவிலும் 9 இடங்களையே கைப்பற்றி ஆட்சியை பி.ஜே.பியிடம் இழந்த காங்கிரசிற்கு ஒரே ஆறுதல் மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பதே , அதே போல உத்ராகந்தை பொறுத்த வரை ஆளும் பி.ஜே.பி , காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தாலும் பி.ஜே.பி யே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்படுவதும் காங்கிரஸிற்கு நிச்சயம் கலக்கத்தை கொடுத்திருக்கும் .

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பல காங்கிரஸ் தலைவர்கள் உ.பி யில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் இல்லை , உள்ளூர் தலைவர்களே காரணம் என்பது போல பேச ஆரம்பித்துவிட்டார்கள் …இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உ.பி யில் காங்கிரஸ் அடையப்போகும் வெற்றிக்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்று சொல்லி வந்தார்களே என கேட்டால் வடிவேலு பாணியில் அது போன வாரம் , இது இந்த வாரம் என்று சொல்வார்களோ என்னவோ , அவர்களுக்கு தான் மக்களின் மறதி மேல் எவ்வளவு  நம்பிக்கை !

இந்த தேர்தல் முடிவுகள் அடுத்து 2014  இல் நடக்க போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்று சொல்லப்பட்டாலும் , காங்கிரஸின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையும்  , நேரு குடும்பத்தில் இருந்து யாராவது போய் நின்றாலே மக்கள் ஓட்டளித்து விடுவார்கள் என்ற காங்கிரஸாரின் நினைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவும் இதை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம் .

இனி வரப்போகும் தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தியை காங்கிரஸ் அனுப்புகிறதோ இல்லையோ பி.ஜே.பி உட்பட மற்ற எதிர்கட்சிகள் அவர் வரவேண்டுமென்றே வேண்டிக்கொள்ளும் என நினைக்கிறேன் , ஏனெனில் அவர் ராசி அப்படி …

ஒரு பக்கம் முடிவுகள் இப்படியிருந்தாலும் 2014 க்குள் பி.ஜே.பி தங்களுடைய  பிரதம வேட்பாளர் யார் என்பதில் ஒரு தீர்மானத்தையும் , கட்சிக்குள் உள்ள பூசலை  களைவதற்குரிய நடவடிக்கைகளையும்  இப்பொழுதிலிருந்தே  எடுக்காவிட்டால் மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அவர்களே வழியமைத்து விடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை …

( மேலே குறிப்பிட்டுள்ள தேர்தல் முடிவு எண்ணிக்கையில் சிற்சில மாற்றங்களை நாளை எதிர்பார்க்கலாம் )

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>