என்னைத் தொலைத்து
என்னுள் தேடுகிறேன்
சற்றேனும் என்னை
முன்பின் தெரிந்தால்
நீங்களும் வாங்களேன்
அடையாளம் காட்ட!
காணாமல் போனதை
அறிவிக்கும் போதெல்லாம்
பெயர் தானே சொல்வார் முதலில்
இங்கே பல பெயர் உண்டு
ஆத்மா, உள்ளம் , மனசு
இப்படி
நிறைய புனைபெயர்
நிஜ பெயர் என்ன?
நிச்சயமாய் தெரியாது!
உள்ளிருக்கும் என்னின்
புகைப்படம்
தேடுதல் வேட்டைக்கு
நிச்சயம் உதவும்!
ஆனால்
வெளிப்பூச்சு பூசிபூசி
தேய்ந்தே போனதால்
உண்மை முகம்
பார்த்தவர் யாருமில்லை!
கண்ணாடி கூட
கண்ணால் பார்த்ததில்லை!
முகம் எப்படி என்ற
முகாந்திரமில்லை!
உயரம் நிறம்
எதுவுமே தெரியாது!
வானம் வரை விரிவதும்
சில சமயம்
தரையிலேயே புரள்வதுமாய்
உயரம்
நொடிக்கு நொடி மாறுவதால்
தேடுதல் வேட்டைக்கு
உயரம் உதவாது!
நிறம்
பாலைப்போல என்று
பாலூட்டியவள் சொல்வாள்!
கள்ளைப்போல் என்று
கள்ளூட்டியவர் சொல்வார்!
கருமை நிறமென்று – என்னால்
கருகியவர் சொல்வார்!
செம்மை நிறமென்று – என்னை
செதுக்கியவர் சொல்வார்!
நிமிஷத்துக்கு நிமிஷம்
நிறம் மாறுவதால்
பச்சோந்தி நிறமென்று – தேடல்
பலகையில் எழுதுங்கள்!
குணத்தைப் பற்றி மட்டும்
குறைந்த தகவல் உண்டு!
அப்பாவி இல்லை
அது எனக்குத் தெரியும்!
பாவியா படுபாவியா
பார்த்துச் சொல்லுங்கள்!
கண்டுபிடித்தால்
என்சார்பில்
ஒன்றெ ஒன்று கேளுங்கள்!
எனக்குள் இருந்தும்
என்னையே பாராமல்
எனக்கே தெரியாமல்
என்னுள் ஒளிந்தே
என்ன சாதித்தான்
என்றே கேளுங்கள்!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments