துப்பாக்கி படத்தில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம்
பெறும் காட்சிக்கு எதிர்ப்பு

விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு ‘பசுமைத் தாயகம்’ காட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “வீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பாக்கி’ எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், ‘துப்பாக்கி’ திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை மீறிய செயல். எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இது விஜய் ரசிகர்களையும், துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸையும் கோபப்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் ,இந்தியில் அனுராக் கஷ்யாப் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘GANGS OF WASSEYPUR’ போஸ்டரை தனது டிவிட்டர் இணையத்தில் வெளியிட்டு “இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்!” என்று கூறியுள்ளார்.
துப்பாக்கி படத்தின் FIRST LOOK விளம்பரத்திற்கு எந்த அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அந்த அளவிற்கு தற்போது எதிர்ப்பும் வந்துள்ளது.



