/* ]]> */
Aug 012010
 மோக முள்,செம்பருத்தி,மரப்பசு போன்ற பிரசித்தி பெற்ற நாவல்களின்வரிசையில்” அம்மா வந்தாள் “தி.ஜானகிராமன் அவர்களின் மிகச் சிறப்பான ஓர் படைப்பு.சாகித்திய அகாதெமி விருது பெற்ற தி.ஜானகிராமன் அவர்கள் தனது சிறப்பான கதையோட்டம்,துணிச்சலான கருத்து வெளிப்பாடு மற்றும் மனித உணர்வுகளை உள்ளபடியே வெளிப்படுத்தும் திறம் ஆகியவற்றால் பல லட்சம் தமிழ் நெஞ்சங்களில் இன்னமும் வாழ்ந்து வருகிறார்.


தாயின் விருப்பத்துக்கிணங்க தந்தையால் வேத பாடையில் சேர்ப்பிக்கப் பெறும்அப்பு,கதையின்நாயகன்.தண்டபாணி..அப்புவின்தகப்பனார்,தாயார்..அலங்காரத்தம்மாள்.தன் குழந்தைகளிலேயே அழகும், ஆகிருதியும் மிக்கவனான அப்புவை,எல்லா குழந்தைகளையும் விட தான் அதிகம் நேசித்து வந்த அப்புவை,’இன்சினீர்” ஆக வேண்டுமென விரும்பின அப்புவை வேத வித்தாக்கிப் பார்க்க ஆவல் கொள்கிறாள் அலங்காரம்.வேத வித்தாகி வரும் மகனின் கால்களில் தன் பாவங்களைக் எரித்துக் கொள்ளும் எண்ணத்தில்.இந்துவேத பாட சாலை நடத்தி வரும் விதவை பவானியம்மாளின் சகோதரனின் மகள்.அவளுமோர் இளம் விதவை.அப்புவோடு வேதம் ஓதின பரசுவிற்கு வாழ்க்கைப்பட்டு மிக இளம் வயதில் தாலியறுத்து, தாய் தந்தையற்ற காரணத்தால்,அத்தையிடமே வருகிறாள்…இந்து.சிறு பிராயத்தில் இருந்தே அப்புவிடம் கொண்டிருந்த காதலை சொல்லாமல் வாழும் இந்து,அப்பு வேத பாடம் முடித்து பதினாறு வருடம் கழிந்து ஊர் செல்லவிருக்கும் சமயத்தில் வெளிப்படுத்துகிறாள்.


பிள்ளை போல் வளர்த்து, வேதம் படிப்பித்து,தானும் அத்தையென்றே அழைத்து வரும் பவானியம்மாளுக்கும், தான் தெய்வமாக மதிக்கும் தாய்க்கும் அவமானம் சேர்ப்பிக்கலாகாதென தானும் அவளை பிள்ளைப் பருவம் தொட்டே விரும்பி வந்தாலும் இந்துவின் காதலை மறுக்கிறான் அப்பு.தாயின் காரணமாகத் தன் காதலை மறுக்கிறானென்ற ஆத்திரத்தில் ,இந்து ,அப்புவின் தாய் சிவசு என்ற ஒரு மிராசுதாரிடத்து கொண்டிருக்கும் தகாத உறவு பற்றின ரகசியத்தைப் போட்டு உடைக்கிறாள்.மிகுந்த அதிர்ச்சியும் ஆத்திரமும் கொள்ளும் அப்பு ஊர் திரும்புகிறான்.

பிறந்த ஊர் சேர்ந்ததுமே தன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கும் சிவசுவைப் பார்த்து தன் தம்பி கோபு என அப்பு எண்ணி விடும் ஒரு கணத்தில் அப்புவுக்கும் வாசகர்களுக்கும் அலங்காரத்தம்மாளின் தகாத உறவு பற்றின கேள்விக்கான விடையை அளித்து விடுகிறார் ஆசிரியர்.வீட்டில் தங்கியிருக்கும் சில தினங்களிலேயே அண்ணன்,தங்கை,அண்ணி ஆகியோரின் நடவடிக்கைகளில் தெரிந்து கொள்கிறான் ஊர் அறிந்த ரகசியத்தை.உச்சகட்ட அதிர்ச்சியாக தன் தந்தையும் இது குறித்து அறிவார் என்ற உண்மை உணர்ந்து மிகுந்த அறுவெறுப்பு அடைகிறான்.இதற்கிடையே அவனுக்காகப் பெண் தேடுவது, உத்யோகத்திற்கான வழி அமைப்பது என்று செல்கிறது கதை.

திடீர் திருப்பமாக அத்தைக்கு உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக இந்துவின் கடிதம் வருகிறது.வீட்டினரின் பிரிவு பற்றின துயருக்கிடையே பவானியம்மாளைப் பார்க்க விரைகிறான் அப்பு.வழியில் தன் அக்காளைப் பார்க்கச்செல்லுமிடத்தில் அவளின் புகுந்த வீட்டிலும் தன் தாயைப் பற்றின ரகசியம் அறிவார்கள் என்ற உண்மை அறிகிறான்.சிறு பிராயம் முதற் கொண்டே தன் மீது காதல் கொண்டு தன் நினைவாகவே வாழும் இந்துவின் மகோன்னதமான காதலை உணர்ந்து கொள்கிறான் அப்பு.தன்னைப் பார்க்க வரும் தாயிடம்தான் அங்கேயே தங்கி விடப் போவதாக அப்பு தெரிவிக்கும் இடம் மிகவும் உணர்ச்சிமயமானது.

பாத்திரப் படைப்புகள் மிகவும் அருமை.குறிப்பாக இந்து மற்றும் அலங்காரம்.”என் உடம்பை மாத்திரம் கட்டி ஆண்டா, நான் பெண்டாட்டியா ஆகிடுவேனா?நான் ஆகலே .உடம்புக்குதான் ஆச்சு”என்று இந்து கூறும் வரிகள் …எத்தனை ஆழமான வரிகள்!!பெண் உள்ளத்தின் உணர்வுகளை ஜானகிராமன் எப்படி அறிவார்?படிப்பறிவு அதிகம் அற்று, வீட்டினுள் முடக்கப் பட்டு வாழும் விதவையான இந்துவுக்குத்தான் எத்தனை ஆழ்ந்த காதல்,உறுதி,தைரியம்?பிள்ளைப் பிராயத்தில் உண்டாகிவிடும் காதல் தான் பசுமரத்தாணி போல் எப்படி ஆழப் பதிந்து விடுகிறது?


அலங்காரத்தம்மாள்.. இன்னமொரு வித்தியாசமான பாத்திரம்.நொடிக்கொரு முறை தான் ஒரு சராசரிப் பெண்ணல்ல என்கிறது அவருடைய பாத்திரம்.அவளுடைய ஆளுமை குறித்த அச்சத்தினாலேயே விலகி விடுகிறார் தண்டபாணி என்று தோண்றுகிறது நமக்கு.தன்னை பற்றின கர்வமா?தன் புருஷனிடத்து எது குறித்தோ ஏற்ப்பட்ட ஏமாற்றமா?எதுவோ காரணம் அவளின் ந்டத்தைக்கு?


சட்டென யாரும் பேசவோ எழுதவோ துணியாத விஷயங்களை விரசமில்லாமல் எழுதி,விதவை மறுவாழ்வை ஆதரித்து, கதையை முடித்திருக்கிறார் ஜானகிராமன்.தகாத உறவு,விதவா மறுமணம் போன்ற விஷயங்களை விவாதித்து பல விமர்சனங்களையும் சந்தித்த நாவல் என்றாலும்…பேசப்பட்ட அனைத்து விஷயங்களுமே எப்பொழுதும் எங்கிலும் பரவலாக நடந்து கொண்டு தான் உள்ளன என்பதை மறுக்கவியலுமா?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>