சினிமா விமர்சனம்:
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்:
இயக்குனர் சிம்புதேவன் இதன் திரைப்படக்கதை ஜெர்மன் படத்தின் அடிப்படையைக் கொண்டது என்று பெருந்தன்மையாக வெளிப்படுத்தியதிலிருந்து கதை ஆரம்பமாகிறது.வேலையில்லாமல் திரிகிறார்கள் 3 இளைஞர்கள். அவர்கள் தங்களுக்குண்டான பலவித பிரச்சினைகளிலிருந்து விடுபடவும், தாதாவிடமிருந்து 30 லட்ச ரூபாய் பணத்துக்காகவும், ஒரு பெண்ணைக் கடத்துகிறார்கள் . இந்தக் கதையில் ஒரேவித சம்பவங்கள் திரும்பத் திரும்ப வந்தாலும் டைரக்டர் அவற்றுக்கு சுவாரஸ்யம் ஊட்டியிருக்கிறார். காட்சிக்குக் காட்சி, சிரிப்பு வசனங்களோடு ரசிகர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
ஹீரோ என்று தனியாக யாரையும் சித்தரிக்காமல், எல்லோரோடும் சேர்த்தே கதை சொல்லி திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். கதை வேகமாக ஓடினாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. நான்கு பேரில் அதிகம் பிரகாசிப்பது அருள்நிதி. அப்பாவி நடிப்பிலும் காதல் பார்வையிலும் நிறைய வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். ஹீரோயின் பிந்துமாதவி யதார்த்தமாக நடித்திருப்பது ரசனைக்குரியது. ஹர்ஷிதா ஷெட்டிக்கு சொல்லிக்கொள்ளும்படியாக கேரக்டர் இல்லையென்றாலும், குளுகுளுவென்றிருப்பது கண்ணுக்குப் புத்துணர்ச்சி. ஜெயப்ரகாஷ் , அருள்தாஸ்,டெல்லி கணேஷ், கவிஞர் விக்ரமாதித்தன் என எல்லா கேரக்டர்களும் சுவாரஸ்யம் வழங்கத் தயங்கவில்லை. இப்படியொரு வித்தியாசமான திரைக்கதையைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருப்பது டைரக்டரின் தனித் திறமை.
நடராஜனின் இசையும் எஸ்.ஆர். கதிரின் கேமராவும் அருமை. வைரமுத்துவின் பாடல்கள் எப்போதும்போல அர்த்தமுள்ளவை. ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரைப்படம் கிடைத்துள்ளது.
^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments