/* ]]> */
Oct 082010
 

பியோதர் தஸ்தயேவ்ஸ்கி;
நவம்பர் 11, 1821 இல் ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்தவர், 1881 இல் தனது 59 ஆம் வயதில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இறந்தார். இவருடைய உலகப் புகழ் பெற்ற படைப்புகள், “நோட்ஸ் ஃப்ரம் அண்டர்கிரௌண்ட்”,” கிரைம் அண்ட் பணிஷ்மென்ட்( குற்றமும் தண்டனையும்)”, “தி இடியட்”, “தி பிரதர்ஸ் கரமசோவ்(கரமசோவ் சகோதரர்கள்)”, “தி பொஸெஸ்ட்(பீடிக்கப்பட்டவன்)” ஆகியன.
ருஷ்ய இலக்கிய வானில், லியோ டால்ஸ்டாய், புஷ்கின், துர்கனேவ் ஆகியோர்களுக்கு இணையாகச் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருப்பவர் தஸ்தயேவ்ஸ்கி. உலக இலக்கியத்திலும் ஷேக்ஸ்பியர், தாந்தே போன்றவர்களுக்கு இணையாகப் போற்றப்படுபவர் இவர்.

” குற்றங்களைக் குற்றமென்று உணர்வதோடு, அக்குற்றத்தில் இருக்கும் தன் பங்கையும் நம் பங்கையும் அவர் ஒப்புதல் செய்கிறார். இது தான் தஸ்தயேவ்ஸ்கியின் மகத்துவம்”.-எட்மன்ட் ஃபுல்லர்.

குற்றமும் தண்டனையும் நாவலின் தமிழ் பெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா அவர்கள்

மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராக 36 வருடங்கள் பணியாற்றியவர்.’ ஸ்த்ரீ ரத்னா(2002)’,'சிறந்தபெண்மணி (2004)’ முதலிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

‘குற்றமும் தண்டனையும்’ இவரது முதல் மொழியாக்க முயற்சி.

‘பருவங்கள் மாறும்’, ‘புதிய பிரவேசங்கள்’,’ தடை ஓட்டங்கள்’ முதலிய சிறுகதைத்தொகுப்புகளும் , ‘விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்’, ‘பெண்- இலக்கியம்-வாசிப்பு’, ‘இலக்கிய இலக்குகள்’ ,’தமிழிலக்கிய வெளியில் பெண் மொழியும் பெண்ணும்’ ஆகிய கட்டுரைத்தொகுதிகளும் நூல் வடிவம் பெற்றுள்ள இவரது ஆக்கங்கள் . சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள இந்திய எழுத்தாளர்கள் குறித்த விவரப் பட்டியலிலும் இவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது.

நாவலின்முக்கிய கதாபாத்திரங்கள்:

1. ரஸ்கோல்னிகோவ்; கதையின் நாயகன், 2. பல்கேரியாஅலெக்சாண்ட்ரோவ்னா; ரஸ்கோல்னிகோவின் தாய்,

3. அவ்தோத்யா ரொமனோவ்னா ;ரஸ்கோல்னிகோவின் தங்கை, துனியா என்றும், தன்யா என்றும் கூட அழைக்கப்படுபவள்,
4. ரஸூமிகின்; ரஸ்கோல்னிகோவின் நண்பன்,
5. அர்க்காதி இவானோவிச் ஸ்விட்ரிகைலோவ்; துனியா பணிபுரிந்த வீட்டின் எஜமான்,
6.மார்ஃபா பெத்ரோவ்னா; ஸ்விட்ரிகைலோவின் மனைவி,
7. பீட்டர் பெத்ரோவிச் லூசின் ;துனியாவை மணக்க இருந்தவன்,
8. அல்யோனா இவானோவ்னா; ரஸ்கோல்னிகோவால் கொல்லப்பட்ட அடகுத் தொழில் செய்து வந்த முதியவள்,
9. லிஸாவெதா; அல்யோனா இவானோவ்னாவின் சகோதரி , இவளும் ரஸ்கோல்னிகோவால் கொலை செய்யப்பட்டவள்,
10. மர்மெலாதோவ்; குடிகார, முன்னாள் குமாஸ்தா, சோனியா என்ற நாயகியின் தந்தை,
11. காதரீனா இவானோவ்னா; மர்மெலாதோவின் இரண்டாவது மனைவி, இவளுக்கும் மர்மெலாதோவ் இரண்டாவது கணவன்,
12.சிறுமியர்;போலென்கா, லிடோகா இருவரும் காதரீனாவுக்கு அவளுடைய முதல் திருமணத்தில் பிறந்த மகள்கள்,
13.கோல்யா: காதரீனாவின் முதல் கணவரின் மகன்,

14. சோனியா செமீனோவ்னா; இவள் மர்மெலாதோவின் முதல் மனைவிக்குப் பிறந்த மகள், ரஸ்கோல்னிகோவின் காதலி, காதரீனாவின் வற்புறுத்தலின் பேரில் விபச்சாரத்தில் ஈடுபட்டவள்,

15. ஆண்ட்ரி செமீனோவிச் லெபஸியாட்னிகோவ்; மர்மெலாதோவின் குடும்பம் வசிக்கும் குடியிருப்பில் வசிப்பவன், சோனியாவின் மீது அன்பு கொண்டவன்,
16. அமாலியா இவானோவ்னா பியோதரவ்னா லிப்பேவெசல்ஸ்; மர்மலாதோவ் வசிக்கும் வீட்டின் சொந்தக்காரி,
17. தார்யா ; அதே குடியிருப்பில் வசிக்கும் தீய எண்ணம் கொண்ட ஒரு பெண்,
18. நடால்யா ஈகோரோவ்னா ; ரஸ்கோல்னிகோவ் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியின் மகள், ரஸ்கோல்னிகோவின் முன்னாள் காதலி,
19. நஸ்டாஸியா; ரஸ்கோல்னிகோவ் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியின் பணிப்பெண்,
20. ஜோஸிமோவ் ;ரஸ்கோல்னிகோவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்,
21. காபர் நவுமோவ்; தையற்காரர்,
22. போர்ஃபிரி பெத்ரோவிச்; மாஜிஸ்டிரேட், துப்பறியும் நிபுணர்,
23. சமெடோவ்; காவல் நிலைய தலைமை குமாஸ்தா,
24. நிகோடிம் போமீச்; காவல்துறைத்தலைவர்,
25. இலியா பெத்ரோவிச்; காவல் துறை அதிகாரி.

கதைச் சுருக்கம்;

நரம்புத்தளர்ச்சியால் பீடிக்கப்பட்டிருக்கும் ,முன்னாள் மாணவனான ரஸ்கோல்னிகோவ், செயின்ட் பீடர்ஸ்பர்கில் ஒரு சின்னஞ்சிறிய வாடகைக் குடியிருப்பில் வசிக்கிறான். தன்னுடைய நண்பனான ரஸூமிகினிடம் இருந்து கூட எந்த ஒரு உதவியையும் ஏற்றுக்கொள்ளாத ரஸ்கோல்னிகோவ், சுயநலமிக்க வெறுக்கத்தக்க ,அடகு பிடிக்கும் தொழில் புரிந்து வந்த ,அல்யோனா இவானோவ்னா என்ற கிழவியை கொலை செய்து விடும் திட்டத்தோடு இருக்கிறான்.

அவனுடைய தாயிடம் இருந்து வரும் கடிதத்தில் இருக்கும்செய்தியான, அவர்களுடைய துயரார்ந்த வாழ்வும், அவன் தங்கை துனியா தன்னை விட வயதில் மிகவும் மூத்தவரான லூசின் என்பவரைத் திருமணம் செய்ய கொடுத்த ஒப்புதலும் அவனுடைய மனநிலையை மேலும் வெகுவாக குழப்புகின்றன. ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்டிப்படைப்பதாக உணரும் ரஸ்கோல்நிகோவ், அந்தக் குழப்பமான மனநிலையிலேயே அல்யோனா இவானோவ்னாவின் வீட்டை அடைந்து, அவளை மட்டும் அல்லாமல் அவளுடைய தங்கை லிஸாவெதாவையும் கொன்று விடுகிறான்.

‘கிழவியிடம் உள்ள சொத்தையெல்லாம் பங்கிட்டால் எத்தனை ஏழைகள் பிழைப்பார்கள் ‘என்றெல்லாம் எண்ணி வந்த ரஸ்கோல்னிகோவ், கொலை செய்து விட்ட பதட்டத்தில், ஒரு சில நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த வீட்டை விட்டு அதிசயத்தக்க வகையில் யாரும் கண்டுவிடும் முன் தப்பிக்கிறான்.

களவாடிவந்த சிறிய பணப்பையையும், நகைகளையும் யாருமே கண்டு பிடித்து விடா வண்ணம் மிகச் சாமர்த்தியமாக ஒளித்து வைப்பதுடன், தன் மீதும் தன் உடைகளின் மீதும் பட்டு விட்ட இரத்தக்கறைகளையும் முற்றிலுமாக கழுவிக்களைகிறான் ரஸ்கோல்னிகோவ். தன்னிலை மறந்த நிலையில் செய்து விட்ட கொலைகள் அவன் உள்ளத்தை மிகுந்த பதட்ட நிலைக்கு உள்ளாக்க, கடுமையான ஜுரத்தால் பீடிக்கப்பட்டு, ஜன்னி கண்டவனாக நகரம் முழுவதும் திரிந்து அலைகிறான்.

அதோடு கூட ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக தேவையற்ற கவன ஈர்ப்புகளுக்கும் தன்னைத்தானே ஆளாக்கிக்கொள்கிறான்.

இவ்வாறான நகர் வலத்தின் போது, தனக்கு முன்னமே அறிமுகமான மர்மெலாதோவ் என்ற மொடாக்குடிகாரனை, வண்டியில் அடிபட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பவனாகக் காண்கிறான். அடிபட்டவனை அவன் இல்லத்தில் சேர்க்கப்போகும் ரஸ்கோல்னிகோவ் ,தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் கடுமையான துயர நிலையில் இருக்கும் மர்மெலாதோவின் குடும்பத்தாருக்குக் கொடுத்து உதவுகிறான், மேலும் மர்மெலாதோவின் மகள் சோனியாவிடம் தன் மனதை இழக்கிறான்.

சோனியா குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி, விபச்சாரம் செய்யும் பெண்.

நகரத்தில் பரபரப்பாக இந்த இரட்டைக்கொலை பற்றி பேசப்பட, இச் செய்தி காதில் விழும் போதெல்லாம், தன்னை மறந்து பதட்டப்பட்டு, தன் மனநிலையை வெளிப்படுத்தியும் விடுகிறான் ரஸ்கோல்னிகோவ். இந்நிலையில், ரஸ்கோல்னிகோவின் தாய் பல்கேரியாவும், தங்கை துனியாவும் அவனை சந்தித்து, திடீரென்று எடுக்கப்பட்ட துனியாவின் திருமணம் குறித்த முடிவு பற்றி விவாதிக்க பீட்டர்ஸ்பர்க் வருகிறார்கள்.

துனியா பணி புரிந்து வந்த வீட்டின் எசமானர் ஸ்விட்ரிகைலோவ் அவளிடம் தவறாக நடக்கத் துணிய, வேலையை விட்டு விலகும் அவள், தன்னுடைய குடும்ப சூழல் கருதி தன்னை விட பல வருடம் மூத்தவரான லூசினை மணக்கச்சம்மதிக்கிறாள். இது பற்றி பேச தாயும் மகளும் ரஸ்கோல்னிகோவை நாடி வர இதற்கு முன்பே லூசினை சந்தித்து அவரை அவமானப்படுத்தி விரட்டிவிடுகிறான் ரஸ்கோல்னிகோவ்.

கதையின் ஓட்டத்தத்தில் ரஸ்கோல்னிகோவும் சோனியாவும் காதலில் விழ, ரஸூமிகினுக்கும் துனியாவுக்கும் இடையே அன்பு மலர்கிறது.

இந்நிலையில், ஸ்விட்ரிகைலோவ் மனைவியை இழந்த நிலையில் துனியாவைத்தேடி பீட்டர்ஸ்பர்க் வருகிறார். போர்ஃபிரி எனும் துப்பறியும் நிபுணரின் சந்தேகத்திற்கு ஆளாகிறான் ரஸ்கோல்னிகோவ். லூசினை துனியாவின் வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவதில் ரஸூமிகினும் ரஸ்கோல்னிகோவும் முனைய, ஸ்விட்ரிகைலோவ் மீண்டும் துனியாவுக்கு வலை விரித்து அவளுடைய மாறா வெறுப்பை சம்பாதிக்கிறார்.

போர்ஃபிரிக்கு ரஸ்கோல்னிகோவ் தான் கொலையாளி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனினும் சாட்சி இல்லாத காரணத்தால் தடுமாறுகிறார். கதாநாயகனின் மனசாட்சி அவனைக் கொல்ல, காதலியிடம் நடந்த அனைதையும் கூறி ஆறுதல் அடைய முயல்கிறான்.

விதி வசத்தால் இந்த சம்பாஷணை அனைத்தையும் ஸ்விரிகைலோவ் கேட்டு விட்டு ரஸ்கோல்னிகோவை மிரட்டுகிறார். தானும் தன் மனைவியைக் கொன்று விட்டதை ஒப்புக்கொள்ளும் ஸ்விட்ரிகைலோவ், துனியாவை பலவந்தப் படுத்த முயற்சித்து தோற்கிறார், குழம்பிய நிலையில் தற்கொலையும் செய்து கொள்கிறார்.

தன்னைக் காட்டிக்கொடுக்க விருந்த ஒரே சாட்சியும் மரணித்து விட்ட நிலையில், குற்றத்தை காவல் துறையினரிடம் ஒப்புக்கொள்ள வேண்டியிராது என்று நினைக்கும் ரஸ்கோல்னிகோவின் மனதை மாற்றி, அவனை நல்வழிப்படுத்த நினைக்கும் சோனியாவின் வற்புறுத்தலின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சைபீரிய சிறை தண்டனை ஏற்று, ஆத்ம சுத்தி அடைகிறான் ரஸ்கோல்னிகோவ்.

ரஸூமிகினும் துனியாவும் மணவாழ்வு துவங்க , சோனியாவின் காதலினால் மன அமைதியும் ஆறுதலும் அடைகிறான் ரஸ்கோல்னிகோவ்.

திருமதி எம். ஏ. சுசீலா அவர்கள் கூறியிருப்பதைப் போல் “தஸ்தாயேவ்ஸ்க்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர் என்றோ…முழுமையான தீயவர் என்றோ எவருமில்லை”.

கதாபாத்திரங்களின் மன உணர்வுகளையும், கருணையையும், தோழமையையும், பெண்களின் ஆழ் மன எண்ணங்களையும் தஸ்தாயேவ்ஸ்கி நம் கண்களின் முன்னே படைக்கும் விதம் கண்டு நமக்கு அவர் மீது மிகுந்த பிரமிப்பு உண்டாகிறது.

எஸ். நாகராஜன் கூறும் விதமாக “தஸ்தாயேவ்ஸ்கியைப் படித்து, அவரது நூல்களைக் கற்றுணரும் விதம் நிச்சயமாக சமூகத்தின் தார்மீக அபிலாஷைகளை அளக்கும் விதமாக இருக்கிறது”.

என்னை பொறுத்த வரையிலும் கூட தல்ஸ்தோயின் எழுத்துக்களைப் படிப்பதைப் போல தஸ்தாயேவ்ஸ்கியின் எழுத்தைப் படிப்பது மிகுந்த வெட்க உணர்வைத்தான் உள்ளத்தில் எழுப்புகிறது. நம் செயல்களையும், அவற்றில் இருக்கும் ஒழுக்கக் கேடுகளையும், சுயநலத்தையும், தீமைகளையும் இவர்களுடைய எழுத்து நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுவதால் உண்டாகும் வெட்க உணர்வு அது. நாவலைப் படித்து முடிப்பது மிகுந்த சிரமமான ஓர் காரியமாகவே எனக்குப் பட்டது, ஏதோ ஓர் சக்தி தன்னைப் பிடித்து ஆட்டுவதாக கதாநாயகன் உணர்வான் கதையில், இந்த நாவல் என்னைப் பிடித்து பல நாட்கள் ஆட்டி வைத்து விட்டது!

தஸ்தாயேவ்ஸ்கியின் பலமே, படிக்கும் நம் கண்களின் முன் கதாபாத்திரங்களை சிறிது நேரத்திலேயே உயிருடன் உலவ விட்டு விடுவது தான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாவலை ,உன்னதமான ஓர் லட்சியக் காவியத்தை தமிழில் மொழிபெயர்த்து மிகப் பெரிய ஓர் சாதனையை, சேவையை சுசீலா அம்மையார் செய்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது!


தவறு செய்து விட்டவர்களின் உளப் போராட்டத்தையும், காதலின் மகத்துவத்தையும், குடும்ப நன்மைக்காகப் பெண்கள் செய்யத் துணியும் மகத்தான ஆனால் உலகம் அறியாமலே போய் விடும் தியாகங்களையும் உலகறியச்செய்திருக்கும் தஸ்தாயேவ்ஸ்கியின் எழுத்துக்கு வந்தனம்.

…….ஷஹி….

நூல் பதிப்பு மற்றும் விற்பனை;
P.Duraipaandi,
Bharathi book house,
D-28,
Corporation shopping complex,
Periyaar bus stand,
Madurai-625001

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>