முல்லை பெரியார் அணை எப்படி கட்டப்பட்டது ?
தமிழ்நாட்டுக்கும்,கேரளத்துக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை இப்போது தீவிரமடைந்துள்ளது.அணை அமைந்துள்ள இடம் பூகம்பத்தின் மையம் என்றும்,அணை வலுவிழந்துவிட்டது ,அது உடைந்துவிடும் ஆபத்து உள்ளதால் புதிய அணை கட்டவேண்டும் என்று கூறி பீதியை கிளப்பி,அதற்கான முயற்சியிலும் கேரள அரசு இறங்கி உள்ளது.
இந்நிலையில் ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.இந்தபடத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கும் முல்லை பெரியாறு அணையைப் பற்றி பார்ப்போம்.முல்லை என்ற நதியும் பெரியாறு என்ற நதியும் சங்கமிக்கும் இடத்தில் தமிழக கேரள எல்லையில்,இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும்,அணை தமிழ்நாட்டுக்கும் உரியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி,மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்த ராமநாதபுரம் மன்னர் சேதுபதி 1798-ம் ஆண்டு முல்லையாறு,பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார்.இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து வந்த ஆங்கிலேய அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.இந்தியாவுக்குராணுவபொறியாளராக[எஞ்ஜினீயர்]வந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் அணை கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து ஆங்கில அரசின் அனுமதியையும் பெற்றார். ரூ75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கப் பட்டது.அடர்ந்த காடு,விஷப்பூச்சிகள்,காட்டு மிருகங்கள்,கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையை கட்டிக்கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளதில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது.இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும் கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது.இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
முல்லை பெரியாறு அணையால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.மேலும் மதுரை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், ராணுவ பணி பொறியாளராக தமிழ்நாட்டுக்கு வந்த பென்னி குயிக், இந்த நாட்டை ஒரு அடிமை நாடாக கருதாமல், தன் உற்றார்- உறவினர் வாழும் பூமிபோல கருதி, மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்யும் மக்களின் விவசாயத்துக்காக, அவர்களின் குடிநீர் வசதிக்காக அரசாங்கம் நிதி உதவி செய்ய மறுத்த நிலையிலும், தன் சொத்துக்களையெல்லாம் விற்று, ஏன் மனைவியின் நகைகளைக்கூட விற்று `முல்லைப் பெரியாறு’ அணையை கட்டினார்.
வறண்டு கிடந்த தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பென்னிகுயிக்கை தென் மாவட்ட மக்கள் குறிப்பாக தேனி மாவட்ட மக்கள் கடவுளாக வணங்குகின்றனர்.அங்குள்ள சில கோயில்களில் அவரின் உருவப்படமும் வைக்கப் பட்டுள்ளது. உழவுப்பணி ஆரம்பிக்கும் பொழுதும்,அறுவடையின் பொழுதும் அவரின் படத்தை வணங்கிவிட்டு வேலையை ஆரம்பிக்கின்றனர்.பென்னிகுயிக் பெயரில் அம்மாவட்டங்களில் பேரவைகளும் அமைக்கப் பட்டுள்ளது.தங்கள் வாழ்வாதாரத்திற்குவழி வகுத்த பென்னிகுயிக்கின் பெயரை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி தங்கள்நன்றியை இன்றும் தமிழர்கள் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிபட்ட ஒரு மாமனிதரின் பெயரை அந்த பகுதி மக்கள் நினைவில் வைத்திருந்தாலும், தமிழக மக்கள் அனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில், அவருடைய வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு, கேரளா இரு மாநில மக்களும், பென்னி குயிக்கின் தியாகத்தால் உருவான இந்த அணையை போற்றி பாதுகாக்க வேண்டிய இந்த தருணத்தில், கேரள மாநிலம், `இந்த அணை பாதுகாப்பற்றது, இதை இடித்து தள்ளிவிட்டு, புதிய அணையை கட்டுவோம்’ என்று சொல்வது, தமிழக மக்களின் இதயத்தை வேதனையால் வாட்டுகிறது.
தொகுப்பு:diet-b
tags : முல்லை பெரியார் அணை, முல்லைப் பெரியார் அணை, முல்லை பெரியார், அணை, முல்லை பெரியார் டேம், டேம், முல்லை, பெரியார், அணை, முல்லை, பென்னிகுயிக், கேரள மாநிலம், மதுரை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி, கர்னல் ஜான் பென்னிகுயிக், முல்லைப் பெரியாறு, டேம் 999, டேம், Dam 999, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, benny quick, பென்னி குயிக், mullai periyar, mullai periyar dam, mullai periyar dam construction, வரலாற்று குறிப்புகள்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments