/* ]]> */
Jun 092011
 

செம்மொழித் தமிழிலக்கியம் உணர்த்தும் மக்களின் வாழ்க்கை

முறைகள்(பகுதி-3)

 

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

 

கல் வழிபாடு

 

சமய வாழ்க்கை முறை

சங்க காலச் சமுதாயம் பெரிதும் இம்மை வாழ்வின் செம்மையிலும்  இன்பத்திலும் நாட்டமுடையதாக இருந்தது. சமயம் வாழ்க்கை நெறியாக இருந்ததேயன்றி அது ஒரு நிறுவனமாக வளர்ந்து சமூகத்தினை ஆட்டிப்படைக்கவில்லை. சமயங்கள் உருவாதற்கு அடிப்படையான கோட்பாடுகள் அன்று தேன்றியிருந்தன. தமிழர்களிடையே வேரூன்றியிருந்த வழிபாடுகளில் மிகவும் குறிப்பிடததகது இறந்தார்க்கு நடப்பட்ட கற்களை வணங்கும் நெறியாகும்.

நடுகல் வழிபாடு

சங்கச் செய்யுட்களில் பல வெட்சித் திணையின் தொடர்புடையனவாகவே உள்ளன. நடுகற்கள் ஊருக்குப் புறத்தே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன. ஓங்கி வளர்ந்த வேங்கையின் மலர;களை வௌ;ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மாலையாகச் சூட்டிக் கோவலர; ஒரு வீரனுக்குக் கல்; நட்டதைப் புறநானூற்றுப் பாடல்; ஒன்று (265:1-5) நவில்கின்றது. இக்கற்களில் வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டன. அணிமயிற் பீலியும் மலர்; மாலைகளும் சூட்டப்பட்டன. இதனை,

‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்;

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’’ (அகம்..67)

என அகநானூறும்,

‘‘பரலுடை மருங்கிற் பதுக்கை சேர;த்தி

மரல்வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு

அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித்து

இனிநட்டனரே கல்லும்’’ (புறம். 264)

என்று புறநானூறும் மொழிகின்றன. இச்செய்தி,

‘‘விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

எழுத்துடை நடுகல்’’ (ஐங்குநுறூறு, பா.எ. 352)

எனறு ஐங்குநுநூற்றில் இடம்பெற்றிருப்பது உன்னற்பாலதாகும்.

நடுகற்கள் அமைந்த இடத்தைச் சுற்றி வேலை நட்டுக் கேடயங்களையும் நிறுத்தி வைத்தனர் (அகம். 131).இக்கற்களுக்கு வேங்கை மலரை மட்டுமின்றிச் செம்மையான கரந்தை மலரையும் சூட்டினர் (அகம். 269).இத்தகைய கற்கள் வரிசை வரிசையாகவும் மிகப் பலவாகவும் சில இடங்களில் காணப்பட்டன   (அகம். 387).நடுகற்களின் மேல் துணியினால் பந்தலிடுவதும் வழக்கமாக இருந்தது (புறம். 260).

இத்தகு நடுகற்களை தெய்வமாகவே வழிபட்டு நாள்தோறும் பலியிடுதல் அக்காலத்திய மராபாயிருந்தது. கற்களிலுறையும் தெய்வத்திற்கு வழிபாடு இயற்றுகையில் துடிகள் முழக்குவதோடு, தோப்பிக் கள்ளையும்;பலியாக வழங்குவர். இச்செய்தியை,

‘‘நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்’’

(அகநானூறு, பா.எ. 35)

என அகநானூறு நவில்கிறது. சிற்றூர் வாழ் மக்கள் தம்மூர் புறத்தே இருந்த நடுகற்களை நன்னீராட்டினர்.நெய்நறைக் கொளுவினர். தூபமெடுத்தனர். அதன் புகை தெருக்களில் கமழ்ந்தது என்பதனை புறநானூறு(பா.329)எடுத்துரைக்கின்றது.

மறக்குடிப் பிறந்த மக்கள் நெல்லை உகுத்துப் பரவும் கல்லைத் தொழுவதன்றி வேறு தெய்வத்தினை வணங்காத இயல்புடையோராவர் (புறம், 335) ஒரு வீரனுடைய மனைவி தன் கணவன் நல்ல பனையைப் பெறவும் தனக்கு நல்ல விருந்தினர் வரவும் வேண்டி நடுகல்லைப் பரவியதாகப் புறப்பாடல்(360)தெளிவுறுத்துகிறது. தற்போது தமிழ் நாட்டில் வணங்கப் பெறும் பல வீரத் தெய்வங்கள் நடுகல் வழிபாட்டிலிருந்து தோன்றியவை என்று அறிஞர் மொழிவர்.

வெறியாட்டு

சங்க காலத் தமிழரின் சமய வாழ்க்கை முறையில் மிகவும் பழமையானது வெறியாட்டு என்பதாகும். மனிதர்மேல் தெய்வம் ஏறி வருவதுண்டு என்ற நம்பிக்கையில் இருந்து உருவானதே இது. ஆவேசம் என்று இதனைக் கூறுவர். சங்க காலத்தில் முருகனோடு தொடர்புடையதாக இவ்வெறியாடல் திகழ்ந்தது. முருகனுக்குரிய வேலினைக் கையில் ஏந்தி ஆடுபவன் வேலன் எனப்பட்டான். இவ்வேலனின் வெறியாட்டைப் பற்றி அகப்பாடல்களே அதிகம் மொழிகின்றன. இஃது தொல்காப்பியத்தில்,

‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்டயர்ந்த காந்தளும்’’

என இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கதாகும். ஐங்குறுநூற்றில் வெறிப்பத்து என்பது ஒரு பகுதியாகும். வெறியைச் சிறப்பித்துப் பாடிய ஒரு புலவர், ‘வெறிபாடிய காமக்கண்ணியார்’ என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெறியாடும் வேலன் வௌ;ளிய பனந்தோட்டொடு கடம்ப மலரைத் தொடுத்துச் சூடிக்கொள்வான் இனிய சீரமைந்த தாளத்தோடு கூடிய முருகக் கடவுளின் பெரும் புகழினைக் கூறி ஆடுவான் (அகம். 98:16-19).வெறியாடும்பொழுது, ஆட்டுக்குட்டியைப் பலியிடுதல் மரபாகும் அதன் குருதியைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவர். ஆட்டின் கழுத்தை அறுப்பதோடு தினைப் பிரப்பை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். இதனை,

‘‘களம்நன் கிழைத்துக் கண்ணி சூட்டி

வளநகர் சிலம்பப் பாடிப்பலிகொடுத்து

உருவச் செந்தினை குருதியொடு தூஉய்

முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்’’ (அகம். 22)

என்று அகநானூறு கூறுகின்றது. வெறியாட்ட மகளிரின் தோற்றம் முதலியவற்றை அகநானூற்றின் 370-ஆவது பாடலும் குறிப்பிடுகின்றது.

கந்துடைத் தெய்வம்

பழங்காலத்தில் கற்களில் தெய்வத்தை நிறுத்தி வழிபட்டனர். ‘நடப்பட்ட ஒரு மரக்கட்டை, ‘கந்து’ எனப்பட்டு வழிபடப்பெற்றது. அக்கட்டையில் தெய்வம் இருப்பதாக மக்களால் நம்பப்பட்டமையின் அது கடவுளாகவே கருதப்பட்டது.’’ (ந. சுப்பிரமணியன், சங்க கால வாழ்வியல், ப. 422) பொதியில் எனப்பட்ட மன்றங்களில் ஒரு மேடையில் இத்தகு கந்துகள் இருந்தன. கொண்டி மகளிர் குளிர்ந்த நீரிற் படிந்து மன்றத்தினை மெழுகுவர்.நாளடைவில் பேணாரின்மையால் அவ்வம்பலங்கள் பாழாயின. அதனால் அங்கு குடிகொண்டிருந்த தெய்வங்கள் இடம்பெயர்ந்து சென்றன. இதனை,

‘‘கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்

பலிகண் மாறிய பாழ்படு பொதியில் (புறம். 52)

எனப் புறநானூறு எடுத்துரைக்கிறது. அப்பொதியிலின் சுவர்களில் புற்று மண்டியிருந்தது. புதர்கள் படர்ந்திருந்தன. பாழ்பட்ட இப்பொதியிலில் இருந்த கடவுள் தான் இருந்த தூணை விட்டுப் போயிற்று (அகம்.307) என அகநானூறு தெளிவுறுத்துகிறது. மக்களைத் தம் வளப்பால் தம்வயப்படுத்தி ஈர்த்துச் சென்று கொன்றுவிடும் கொடிய தேவதை அணங்கு எனப்பட்டு மக்களால் வணங்கப்பட்டது என்பதனை அகநானூறு (70) நவில்கிறது.

முருகன், சிவன், திருமால் ஆகிய கடவுளர் வழிபாடு

முருகன் வீரம் மிக்க கடவுளாகவும், போர்க்கடவுளாகவும் சங்க நூல்களில் புகழப்படுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது. முருகன் கோயில், ‘‘அணங்குடை முருகன் கோட்டம்’’(புறம்.298) எனப்பட்டது. திருச்சீரலைவாய் என்னு திருச்செந்தூரில் முருகன் கோயில் சிறப்புற்றிருந்தது என்பதனை,

‘‘திருமணி விளக்கின் அலைவாய்ச்

செருமிகு சேஎயொடு’’ (அகம். 266)

‘‘வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள்’’ (புறம்.55)

என அகமும், புறமும் எடுத்தியம்புகின்றன.

சங்க கால மக்கள் சிவனை வழிபட்டு வந்தமையைச் சங்கச் செய்யுட்கள் எடுத்துரைக்கின்றன. தொகை நூல்கட்கு கடவுள் வணக்கச் செய்யுள் பாடிய பெருந்தேவனாருடைய செய்யுளில் சிவனுடைய திருமேனி புகழப்பட்டுள்ளது. ‘அவிர்சடை மாற்றரும் கணிச்சி மணிமிடற்றோனும்’’ (புறம். 56) எனப் புறநானூறு மொழிகிறது. சிவன் கோயில் ‘முக்கட்செல்வன் நகர;’ (புறம்.6:18) என வழங்கப்பட்டது. சிவனின் பிறைநுதல் விளங்கும் கண்ணைப் புறம் 55-ஆம் பாடல் சுட்டுகிறது. சிவனைப் பற்றிய செய்திகள், புறநானூற்றில் உள்ள 91, 166 ஆகிய பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

மாயோன் எனப்படும் திருமால் முல்லை நிலக்கடவுளாக ஆயர்களால் வணக்கப்பட்டவனாவன். ஆயர;கள் குரவையாடியும், குழலூதியும் திருமாலை வணங்கினர். திருமாலைப் பற்றி, புறநானூற்றில் உள்ள 51, 56, 174,ஆகிய பாடல்கள் மொழிகின்றன.  திருமால் யமுனை ஆற்றில் நீராடும் அண்டர் மகளிர; தண்ணிய தழையுடையை அணிந்து கொள்ள உதவும் வகையில் குருந்த மரத்தில் ஏறி மிதித்தார் என்னும் செய்தியை,

‘‘வண்புனற் றொழுநை வார்மணல் அகன்றுறை

அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்

மரஞ்செல மதித்த மாஅல் போல’’ (அகம். 59)

என்று அகநானூறு கூறுகிறது.

சமய விழாக்கள்

சங்ககாலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் அகநானூற்றிலும், புறநானூற்றிலும் பெருமளவில் கிடைக்கின்றன. இவ்விழாக்கள் சமயத் தொடர்பானவையாகவும், வேறு சில சமூகத் தொடர்பானவையாகவும் விளங்குகின்றன. விழாக்களில் ஆடலும், பாடலும இடம்பெற்றன. பாணர், கூத்தர்,முதலிய கலைஞர்கள் விழாக்களில் ஆடியம், பாடியும் மக்களை மகிழ்வித்தனர்.

கார;த்திகைத் திருவிழா

பழந்தமிழர் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தக்கது, கார்த்திகைத் திருவிழாவாகும். குhத்திகை விண்மீனை ‘அறுமீன்’ என்றும், ‘அறஞ்செய் திங்கள்’ என்றும் நற்றிணை(பா. 202) குறிப்பிடுகின்றது. அன்று வீடுகளும், தெருக்களும் ஒளி விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டன. இதனை,

‘‘மழைகால் நீங்கிய மாசு விசும்பின்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

புழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர’’ (அகம். 141)

என்று அகநானூறு குறிப்பிடுகின்றது. இலவ மரத்தில் நெருக்கமாக மலர;ந்துள்ள பூக்கள்; பெரு விழாவில் ஏற்றப்பட்ட விளக்குப்போல் தோன்றியதாக மற்றொரு பாடல் (அகம். 185) குறிப்பிடுகின்றது. வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்; முரசம் முழங்குதலைப் புறநானூறு மொழிகின்றது (புறம். 141).

நீர் விழா

வைகையில வௌ;ளம் வந்துற்றபோது மக்கள் நீராடியதனை பரிபாடல் (பரி.16:11-15) தெளிவுறுத்துகின்றது. முற்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர் என்பதனை அகநானூறு (அகம். 222, 376)நுவல்கிறது.

திருப்தியில் விழா, உள்ளி விழா, பங்குனி விழா

திருமால் உறையும் திருவேங்கடத்தில் மக்கள் நெடியோனுக்கு எப்போதும் விழாவெடுத்து வணங்கினர் என்பதை,‘விழவுடை விழுச்சீர் வேங்கடம்’’ என அகநானூறு (61) எடுத்துரைக்கின்றது.

கொங்கர்கள் உள்ளி விழாக் கொண்டாடினர். இடுப்பைச் சுற்;றிலும் மணியைக் கட்டிக் கொண்டு தெருவில் இவ்விழாவின்போது அவர்கள்; ஆடினர் என்பதனை,

‘‘அம்பணை விளைந்த தேக்கட் டேறல்

வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்

எவன்கொல் வாழிதோழி கொங்கர்

மணியரை யாத்து மறுகின் ஆடும்

உள்ளி விழவின்; அன்ன

அலரா கின்றது பலர்வாய்ப்பட்டே’’  (அகநானூறு, பா.எ. 368)

என்று அகநானூறு அலர் பற்றி நவிலும்போது குறிப்பிடுகின்றது.

உறையூரில் மக்கள் பங்குனி விழாவினைக் கொண்டாடினர் என்பதை, ‘‘வென்றெறி; முரசின் விறற்போர்ச் சோழர்

இன்கடும் கள்ளின் உறையூ ராங்கண்

வருபுனல் நெரிதரும் இடுகரைப் பேரியாற்று

உருவ வெண்மணல்; முருகுநாறு தண்பொழில்

பங்குனி முயக்கம் கழிந்து வழிநாள்’’ (அகம். 137)

என்று அகநானூறு குறிப்பிடுகின்றது.

பூந்தொடை விழா, கோடியர் விழா

வீரர்களின் கலைப் பயிற்சித் தொடக்க விழாவினைப் பூந்தொடை விழா என்று வழங்குவர். மாலைகளால் இடத்தை அழகுறுத்தி, வீரனையும் அழகுபடுத்தி வில்லில் நாணேற்றி அம்பினைக் குறிபார்த்து எய்யும் விழா இதுவாகும். இஃது,

‘‘வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’’ (அகம். 187)

என அகநானூறு மொழிகின்றது.

ஆடும் கலைஞர்கள் கோடியர் என அழைக்கப்பட்டனர். விறலியர் ஆடும்போது, கூத்தர்கள் முழவினை முழக்கிக் கொண்டு; பின்னே செல்வர். இதனையே கோடியர் விழா என்று மொழிவர். இவ்விழாவினைப் பற்றி, ‘கோடியர்விழவுகொள் மூதூர் விறலி பின்றை முழவன்; போல’’ (அகம். 352) என அகநானூறு உவமை வழி விளக்குகிறது. இங்ஙனம் புறநானூற்றை விட அதிகமாக அகநானூறே மக்கள் தங்கள் வாழ்வில் கொண்டாடிய விழாவினைப் பற்றி மொழிவது உன்னற்பாலதாகும்.

–தொடரும்…….

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>