/* ]]> */
Aug 242011
 
isai3

சூன் 2 - அன்னக்கிளியில் ஆரம்பித்து அழகர்சாமியின் குதிரை  வரை தன்  இசையால்  இயற்கையில் பிரிந்து  கிடக்கும்  உயிர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி பிறந்த நாள் ..ஆம் இசை பிறந்த நாள்…  இசையே நீ…இசைஞானி மட்டும் அல்ல,….இசையே நீ…

           

1943  ஆம் ஆண்டு பன்னைப்புரத்தில்  பிறந்தவருக்கு பெற்றோர்கள் தெரிந்தே தான் “ஞானதேசிகன்” என்று பெயரிட்டிருக்கிறார்கள்…தன்  இசை ஞானத்தால் எல்லோர் இதயங்களையும் இளமையாக வைத்து அதில் எப்போதுமே ராஜாவாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தான் ”இசைஞானி“ இளையராஜா…

1976  இல் ஆரம்பித்து இன்று வரை 900த்துக்கும் மேற்பட்ட படங்கள் 4000த்துக்கும்   மேற்பட்ட பாடல்கள் , இவர் இசைக்காகவே வணிக ரீதியாக வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான படங்கள்,                                                                     நான்கு தேசிய விருதுகள்,  தமிழகம்,ஆந்திரம்,கேரளம்,மத்திய பிரதேசம்  என பல மாநில அரசுகளின்  விருதுகள், இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம  பூஷன் விருது ,

             ஆசியாவிலேயே சிம்பொனி இசை அமைத்த முதல் இசையமைப்பாளர் , ஒரே வருடத்தில் 50  க்கும்  மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்த ஒரே இசையமைப்பாளர் , 2005   ஆம் ஆண்டு எம்.எஸ்.வி யுடன் இணைந்து வழங்கப்பட்ட துளசி விருது , பி.பி.சி. வானொலி அறிவித்த உலகின் சிறந்த பத்து  பாடல்களில் இவர் இசையமைத்த “ராக்கம்மா கையத்தட்டு” பாடல் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்தது , 45 நிமிடங்களில்  சின்னத்தம்பி படத்திற்கான அத்தனை  ஹிட் பாடல்களையும் இசை அமைத்தது என்று இசைஞானியின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம் …நிச்சயம் இந்த ஒரு பதிவு போதாது..ஆனால் இது அவரைப்பற்றிய புள்ளி விவரங்களை மட்டும் சொல்லும்  பதிவு அல்ல …

           என்னைப் போன்ற கோடானு கோடி மக்களின் சந்தோசம்,துக்கம்,காதல்,காமம்,தனிமை,ஏக்கம்,பிரிவு, என எல்லா உணர்ச்சிகளிலும்  உறவாடும் அவர் இசையை பற்றிய பதிவு

                             

தமிழ் திரையுலக வரலாற்றை இசைஞானிக்கு முன் இசைஞானிக்குப்  பின் என்று இரண்டாக பிரிக்கலாம்..அதுவரை இசை நன்றாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் பாடல் , சிவாஜி பாடல் ,ஜெமினி பாடல் என்று சொல்லிக்கொண்டிருந்த மக்களை இளையராஜாவின் பாடல்கள் என்று சொல்லவைத்தது ‘அன்னக்கிளி” பாடல்கள்…அன்றைய காலகட்டத்தில் ஹிந்தி பாடல்களை விரும்பி கேட்டுக் கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை கேட்க வைத்ததோடு  மட்டும்  அல்லாமல் ஹிந்தி இசையமப்பாளர்களையே தமிழ் பாடல்களை திருடி மெட்டு போட வைத்தவர் இசைஞானி ..

ராமராஜன்,விஜயன் போன்ற சாமான்ய முகங்களையும் , மோகன் , கார்த்திக்,முரளி என்று பல புது முகங்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தது இசைஞானியின் இசை ..

            இந்தியாவிலேயே பின்னணி இசைக்கு புது பரிணாமம் கொடுத்தது இசைஞானியின் இசை..இன்றைய காலகட்டத்தைப் போல கைபேசி,,இணையதளம்  போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே மனித மனமெங்கும் இசையை விதைத்தது  இசைஞானியின் இசை

             சபா கச்சேரிகளில் புரிந்தோ,புரியாமலோ தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு  கிராமிய இசையை சாவுக் கொட்டு என்று சொன்ன கூட்டத்தின் பார்வையை  ”சிந்து பைரவி“ படத்திற்கு பிறகு  தலை கீழாக திருப்பிப்போட்டது  இசைஞானியின் இசை ..

இன்று மேற்கத்திய  பாடல்களை முழுவதும் திருடி விட்டு தன் பெயரை இசையமைப்பாளர் என்று போட்டுக்கொள்பவர்கள் மத்தியில் ”புன்னகை மன்னன்” படத்தின் மூலம் இசையின் எல்லைகளை விரிவு படுத்தியது இசைஞானியின் இசை….

தமிழ் மொழி, இனம் என்று சொல்லி ஒரு கூட்டம்  ஏமாற்றிக்கொண்டிருக்க தமிழ் வரிகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பியது இசைஞானியின் இசை…

தமிழனின் எந்த ஒரு விஷேசத்தையும் வியாபித்திருப்பது இசைஞானியின் இசை..தாயின் அரவணைப்பு , காதலியின் நேசம், நண்பனின் ஆறுதல் என எல்லாவுமாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் கூடவே பயணப்படுவது இசைஞானியின் இசை…

         பள்ளிப்பருவம் , முதல் காதல், கல்லூரி நாட்கள் , சுற்றுலா பயணம் ,                                  காதல் தோல்வி , நண்பர்களுடன் செய்த கூத்து என்று எல்லா நினைவுகளையும்  அசை போட  வைக்கும் இசைஞானியின் இசை …

இன்றும் பல படங்களின் பின்னணி இசையாக  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இசைஞானியின் பழைய பாடல்கள் ,                   தொலைக்காட்சித் தொடர்கள் கூட  இதை விட்டு வைக்கவில்லை…   இசைஞானியின் இசை பாதிப்பு இல்லாமல் ஒருவரும் இசை அமைக்க முடியாது ….

ஒப்பிடுதல் செய்தே நேரத்தைக்கழிக்கும் தமிழன் ஏ.ஆர்.ஆர். என்ற இளைஞனின் இசை ஒரு புத்துணர்வைக் கொடுத்தவுடன் இருவரையும் ஒப்பிட்டதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை..      இசைஞானியின் இசையில் புதிதாக ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நீண்டது காது  கேளாதோர் பட்டியல்…

ஏ.ஆர்.ஆர் வருகைக்குப் பிறகும் வள்ளி,வீரா,வால்டர் வெற்றிவேல்,அவதாரம்,காசி,காதலுக்கு மரியாதை,கண்ணுக்குள் நிலவு, சேது,விருமாண்டி,பிதா மகன்,நான் கடவுள் என்று தமிழில் இசைஞானி இசை அமைத்த படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்,…. சீனி கம்,பா,பழசி ராஜா என்று பிற மொழி படங்களின் ஹிட் பாடல்கள், அதிகம் விற்பனை ஆன “திருவாசகம்” என்ற தனி இசைத்தொகுப்பு  என்று அடுக்கிக்கொண்டே போகலாம்…இருந்தும் “அம்னீசியா”வில் இருப்பவர்களை நாம் எழுப்ப முடியாது….

76 ஆம் ஆண்டுக்கு முன்னர் இறந்தவர்களையும், உயிரோடு இருந்தும் இசைஞானியின் இசையினை உணராமல் நடை பிணமாக வாழ்பவர்களையும் எண்ணி வருத்தப்படுவதைத் தவிர நாம் வேறொன்றும் செய்ய முடியாது ….

இசை மட்டுமே தெரிந்த இசைஞானிக்கு வியாபார நுணுக்கம், வெளி நாடுகளில் தன் முகவர்களை நியமித்தல் போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லாததால் உலக அளவிலான ஆஸ்கர்,கிராமி விருதுகள் போன்றவை எட்டாமல் போயின..விருதுகள் வழங்கப்படுவது மட்டும் இல்லை..சில நேரங்களில் வாங்கப்படவும் செய்கின்றன….இல்லையென்றால் நான்கு தேசிய  விருதுகள் மட்டுமா கொடுத்திருப்பார்கள்??..

இசைஞானிக்கு வாழும் காலத்திலேயே “பாரத் ரத்னா” பட்டம் வழங்கப்பட வேண்டும் , அவர் பெயரில் தேசிய அளவிலான இசைப் பல்கழைக்கழகம் தொடங்கப்பட வேண்டும், இனி வழங்கப்படும் இசை சம்பந்தப்பட்ட எல்லா விருதுகளும் இசைஞானியின் பெயரிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளோடும், இசைஞானி வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்று சந்தோஷப்படுவதொடும் நின்று விடாமல் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும்  இசைஞானியின் பெருமையினை மேலும் மேலும் உலகமெல்லாம் பரப்ப வேண்டும்….

இசைஞானி சம்பந்தப்பட்ட  பதிவு என்பதால் விரல்கள் தாளம் போடுவதை என்னால் தவிர்க்க முடியாததன் விளைவே இந்த நீண்ட பதிவு…

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>