/* ]]> */
Sep 232010
 எழுத்தாளர் சுஜாதா..லட்சோப லட்சம் தமிழ் நெஞ்சங்களில் குடி கொண்டிருக்கும் ஜனரஞ்சகமான, அறிவியலை பாமரனக்கும் புரியும் வண்ணம் எளிமைப்படுத்தி அளித்த, பல நூறு கதைகளையும், நாவல்களையும், சயின்ஸ் ஃபிக்ஷன்களையும், ஏராளமான திரைப்படங்களுக்கு கதை வசனங்களையும் எழுதிய,எத்துனையோ வளரும் எழுத்தளர்களுக்கு மான சீக குருவாக இன்னமும் இருப்பவர்.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட சுஜாதா, மே மாதம் 3 ஆம் தேதி 1935 ஆம் வருடம் சென்னயில் பிறந்தவர், ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் படித்தார், செயின்ட் ஜோசஃப்ஸ் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். பின்பு எம்.ஐ. டி சென்னையில் பொறியியல் பட்டம் பெற்றார். ஆனந்த விகடன், கல்கி, குமுதம் என இவர் எழுதாத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனும் அளவு பத்திரிக்கை உலகில் கோலோச்சியவர்.
எப்போதும் பெண், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கொலையுதிர் காலம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் போன்றவை இவருடைய பெரிதும் பேசப்பட்ட படைப்புகளில் ஒரு சில.

தமிழ் சினிமா உலகிலும் தனி முத்திரை பதித்தவர் சுஜாதா. இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து போன்ற படங்களின் கதை வசனம் சுஜாதாவினுடையது தான். அண்மையில் திரையிடப்படவிருக்கும் எந்திரன் கதையும் சுஜாதாவின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற கதைகளைத்தழுவி, அவரே வசனம் எழுதிய படம்.

“ஆனந்தத் தாண்டவம்” என்ற பெயரில் வெளியானசுஜாதாவின்” பிரிவோம் சந்திப்போம் பாகம் 1″ நாவல் விமரிசனத்தை இப்போது பார்ப்போம்.காதல் காதல் என்று சதாசர்வ காலமும் உருகி,’ காதல் போனால் சாதல்’ என்ற நிலைக்கும் போகத் தயங்காத, தற்கால இளைஞர்களுக்கு நல்லதோர் அறிவுரையை கூறியிருக்கிறார் சுஜாதா இக்கதையில்.

காதலை விட மகோன்னதமான விடயங்கள் உலகில் எத்துனையோ உள , இதனை இன்றைய இளைஞர் சமுதாயம் உணர்ந்து வாழ்க்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.

I love you sometimes foolishly and at those moments I do not understand that I could not,would not and should not be so absorbing a thought for you as you are for me” என்ற ஒரு ஃபிரென்சுக் காதல் கடிதத்தில் துவங்குகிறது கதை.

ரகுபதி..கதாநாயகன், கோவிந்தராஜன்..ரகுபதியின் அப்பா..கதையின் நிஜமான ஹீரோ இவர் தான்,மதுமதி ..ரகு விரும்பும் பெண், சுதாகர் ..மதுமதியின் தம்பி, திரு கோபினாத், திருமதி கோபினாத்..மதுவின் தாய், தந்தை,ஜெயந்தி..ரகுபதி வீட்டில் சமையல் செய்யும் பெண்,கலைச்செல்வன்..ரகுவின் நண்பன், ஸ்வாமி..ரகுவின் அடுத்த வீட்டு மாமா, ராதாகிஷன்..மதுவை மணந்து கொள்ள விரும்பும் குடும்ப நண்பன்.

பாபநாசம் அப்பர் டாமில் பிராஜக்ட் எஞ்சினீயராக இருக்கும் கோவிந்தராஜனின் மகன் ரகுபதி, தாயை இளம் வயதிலேயே இழந்தவன், அந்தக் குறை தெரியாமல் ஒரு தோழனைப் போல மகனை பாவிக்கும் அப்பாவினால் வளர்க்கப்பட்டவன், பொறியியல் படிப்பு முடித்து விட்டு, வேலை தேடி அலைந்து, அது கிடைக்காத விரக்த்தியில் இருப்பவன்.

ஒரு நேர்காணலுக்குப் போய் விட்டு ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கும் மகனிடம், தன் துயரத்தைக் காட்டிக் கொள்ளாமல் “மத்தியானம் தூங்கு, சாயங்காலம் வாக் போ, டென்னிஸ் போ, ஒரு தம் அடிச்சுட்டு வா, ஏதாவது படி..புதுசா ஒரு ராபின்ஸ் நாவல் வச்சிருக்கேன்- ஸிஸ்ஸில்ஸ் வித் செக்ஸ்” என்றெல்லாம் பேசி இப்படி ஒரு அப்பா இருப்பாரா? என்று ஆச்சர்யப்படுத்தும் கதாபாத்திரம்.

கோவிந்தராஜனின் பிராஜக்ட் ஆஃபிசர் கோபினாத்தின் மகள் மதுமிதாவைப் பார்த்த மாத்திரத்தில் காதல் வயப் படுகிறான் ரகு, பணக்கார வீட்டின் செல்ல மகளான மதுமிதா, படிப்பு, வீட்டு வேலை என்று எதிலுமே தேர்ச்சியில்லாத ஸ்பாயில்ட் சைல்ட்…ஆமாம் மிக அழகான இளம் பெண்ணாக வளர்ந்து விட்டாலும் சிறு குழந்தை போல நடந்து கொள்ளும் ஒரு காட்டுக் குருவி அவள்!

கோபினாத்தின் அலுவலகத்தில் சரியாக வேலை செய்யாத டெலிமெட்ரி இயந்திரத்தை சரி செய்து அவர் மனதில் இடம் பிடித்து , அதற்காக அவர் வீட்டில் விருந்து உண்ணும் அளவுக்கு அந்தக் குடும்பத்தில் பழகுகிறான் ரகு.
தான் மதுவை விரும்புவதை தன்னுடைய டைரியில் ரகு எழுத அதைப் படித்து விட்டு கோவிந்தராஜன் மகனுடன் பேசும் வரிகள் கிளாஸிக்!!!
காதல்ங்கிறது nature’s way of ensuring a pregnancy. கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாத்தா உனக்குப் புரியும். நியூயார்க் ஸ்டேட் ஸைகியாட்ரிக் இன்ஸ்டிட்யூட்ங்கிறது கொலம்பியா ப்ரெஸ்பிடீரியன் மெடிக்கல் ஸென்டர்ல இருக்குது. அதில பயோகெமிக்கல் ரிசர்ச் பண்ணற டேவிட் ஷ்வார்ட் ஸங்கறவர் காதல் வசப்பட்ட நூற்றுக்கணக்கான ஆண், பெண்களைப் பரிசோதனை செய்து காதல்ங்கிறது வேற ஒண்ணும் இல்ல ;நம்ம உடம்பில் ஏற்படற ஒரு விதமான ரசாயன மாறுதல்னு கண்டு பிடிச்சிருகார்.காதல்ர்களுடைய யூரின் சாம்பில் எடுத்துப் பார்த்த போது ,எல்லாருக்கும் விதி விலக்கில்லாம ஃபினைல் எதில் அமின் ஜாஸ்த்தியா இருக்காம். ஆம்ஃபிட்டமின்னு ஒரு போதைச்சரக்கு இருக்கு. அந்த வகையைச் சேர்ந்தது இது. காதல்ல் ஒரு விதமான மயக்கம், ‘பாலும் கசந்தது படுக்கை நொந்தது’. அதில் உள்ள யூஃபோரியா எல்லாமே ஆம்ஃபிட்டமின் தரக்கூடியது தான்”.

கோபினாத்தும் அவர் மனைவியும் வெகு சீக்கிரமே ரகுவை அங்கீகரித்து அவனை மருமகனாக ஏற்க விருப்பம் தெரிவிக்கிறார்கள் . கோவிந்தராஜன் குழம்புகிறார். இத்தனை அவசரம் தேவையில்லை என்பது அவர் எண்ணம். காதல் மயக்கத்தில் இருக்கும் ரகுவுக்கு அப்பாவின் பயம் புரியவில்லை. சுதந்திரப் பறவை போல சுற்றித்திரியும் மது, ரகுவிடம் உடல் ரீதியிலான நெருக்கத்தை விரும்ப, அப்பாவின் வளர்ப்பினாலும் அவ்வப்போது அவர் கூறும் அறிவுரைகளாலும், எல்லை மீறாமல் கண்ணியம் காக்கிறான் ரகு. இதற்கிடையே ரகுவுக்கு வேலை கிடைக்கிறது சென்னையில்.வேலை கிடைத்ததும் திருமணம் என்று கோபினாத் வாக்குக் கொடுத்தபடியால் மிகவும் மகிழும் ரகு, மதுவைப் பிரிய இயலாமல் வெகுவாக வாடுகிறான். கோபினாத்தின் குடும்பமே வந்து விடை கொடுக்க, சென்னை சேர்கிறான் ரகு.

கலைச்செல்வன் என்ற நண்பனுடன் தங்கும் ரகு மதுமிதாவைப் பிரிந்த ஏக்கத்தில் வாடித்தவிக்கிறான். அவளும் அவ்வப்போது கடிதங்களின் மூலம் அவனுடைய பிரிவுத்துயரை மேலும் கனலச்செய்கிறாள். வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே கோபினாத் ரகுவைத்தொலைப்பேசியில் அழைத்து, அவசரமாக ஊர் வரும்படி அழைக்கிறார். காரணம் புரியாமல் தவிப்பனிடம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளத்தான் என்று கூறுகிறார். ஏற்கனவே கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் ரகு இறக்கை கட்டி பறக்கிறான். வாரக் கடைசியில் ஊர் வந்து சேரும் ரகுவுக்கு இடி மேல் இடியாக காத்துக் கொண்டிருக்கின்றன .

ராதாகிஷன் என்ற ராதா வுக்கும் மதுமிதாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கக் கண்டு மனம் உடைந்து குமுறுகிறான் ரகு. கோபினாத்தின் நண்பரின் மகனான ராதாகிஷன் , நியூயார்க்கில் வருடம் அறுபதினாயிரம் டாலர் சம்பாதிக்கும் டாப் எஞ்சினீயர். மதுவின் அழகில் மயங்கும் அவனுக்கே அவளைத்திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானிக்கின்றனர் மதுவின் பெற்றோர். முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறும் மதுமிதா, தங்கள் எண்ணத்தை நியாயப்படுத்தும் திருமதி மற்றும் திருவாளர் கோபினாத், மகன் காயப்பட்டது தாங்காத தந்தை என்று குழம்பி, தற்கொலைக்கு முயல்கிறான் ரகு.

அவன் பெரிதும் மனம் உடையக் காரணம்……தங்கள் பெண்ணை ரகுவுக்கு மறுக்க கோபினாத் தம்பதி சொல்லும் சாக்கு தான். சமையல் செய்யும் ஜெயந்தியை கோவிந்தராஜன் தன்னுடைய உடற் தேவைகளுக்காக வைத்திருக்கிறார் என்பது தான் அது. அதிர்ந்து போகும் ரகு, தந்தைக்கும் ஜெயந்தியை மணம் செய்யும் எண்ணம் இருப்பது கண்டு துடிக்கிறான். ஆனால் பிறகு அது தன் தந்தையின் விசாலமான எண்ணம் என்பது அறிகிறான்.

மிக இளம் வயதிலேயே காதல் என்ற பெயரில் ஒரு காமுகனை நம்பி மோசம் போகும் ஜெயந்திக்கும் அவளுடைய குழந்தைக்கும் ஒரு சமூக அந்தஸ்த்தும், வாழ்வாதாரத்தையும் அளிக்கவுமே கோவிந்தராஜன் அவளை மணம் செய்யக் காரணம். ஆனால் உயர்ந்த அந்தஸ்த்தில் தங்கள் மகள் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ரகுவுக்கு ஆசை காட்டி கழுத்தறுக்கும் கோபினாத் தம்பதியர் ,கோவிந்தராஜனின் தன்நலமில்லாத எண்ணத்தைக் கொச்சைப் படுத்தியிருப்பதை அறிகிறான் ரகு.

எப்போதும் போல் மகன் மீது தனக்கு உள்ள மனத்தாங்கலை வெளிப்படுத்திக்கொள்ளாத கோவின்தராஜன், அவனுக்கு ஆறுதல் கூறி அமெரிக்கா செல்வது ஒன்றும் பிரமாதம் இல்லை அவனாலும் ராதாகிஷனுக்கு மேல் சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார். இவ்வாறு முற்றுகிறது முதல் பாகம்.

“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே, அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்” னுபாரதி சொன்னது கூட ஆம்ஃபிட்டமின் தான்னு என் அபிப்பிராயம்!” என்கிறார் ஓர் இடத்தில் கோவிந்தராஜன் …நான் அவர் கருத்துக்கு நூறு விழுக்காடு ஒப்புதல் அளிக்கிறேன்.

கண்டதும் காதல் என்பதெல்லாம் கவிதைகள் எழுதவும், கதைகள் படைக்கவும் ஏற்புடையது. நிஜ வாழ்கைக்கு ஒவ்வாதது இந்தக் காதல். திருமணம் செய்து கொண்டு ஒருவரின் குறைகளை மற்றவர் அறிந்து, நிறைகளைப் பாராட்டி, அகங்காரத்தைத் தொலைத்து, குடும்ப நன்மைக்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் தத்தம் ஆசாபாசங்களை உதறி ,விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்த காதல் வாழ்வு. மாறாகக் கண்டதும் கொண்ட காமத்தைக் காதல் என்று குழப்பி தமக்குள் உள்ள மன,உடல்,சமூக , அறிவு ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் பற்றி சிந்தியாமல், தமக்காகவே வாழும் பெற்றோரைத்தூக்கி எறியச்செய்யும் பொருந்தாக் காதலினால் எந்த இன்பமும் இல்லை காணீர் உலகத்தீரே!
…..ஷஹி…..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>