வியப்புக்குரிய விடயம் ஒன்று இவர் பற்றி உண்டு. பொதுவாகக் கவர்ச்சி நடிகைகள் என்றாலே வெறுக்கும் பெண்கள் கூட்டத்தில் கூட இவருக்கு ரசிகைகள் அநேகம் பேர் இருந்தனர்.
ஒரு முறை நானும் என் தோழியும் ஃபாம்கோ என்ற ஆயத்த ஆடையகத்தில் அவரைப் பார்த்தோம். படங்களில் காணப்படுவதை விட சற்றே குள்ளமாக நிறம் குறைவாக இருந்தார். ஆனால் நாங்கள் அவரை வெறித்துப் பார்ப்பதை கவனித்து விட்டு அவர் செய்த புன்னகையை ஆயுசுக்கும் மறக்க இயலாது. இன்று அவருடைய “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ” என்ற பாடலை தொலைக்காட்சியில் பார்த்த போது அநியாயமாக தற்கொலை செய்து கொண்டாரே என்று மிகுந்த அங்கலாய்ப்பு ஏற்பட்டது…அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து கவிஞர் மு. மேத்தா எழுதிய கவிதை ஒன்றை அனைவருடனும் பகிந்து கொள்ள விழைகிறேன்..
அவளுக்கு ஓர் ஆடை
வாலிப வசந்தங்களின்
திருவிழாத் தேவதையே!
செப்பனிடப் படாத சொப்பனமே!
மர்மம் சூழ்ந்த உன்
மரண வாசலில்
என் கவிதை
உனக்கு
மலர் தூவுகிறது!
வறுமையின் கோரப் பிடியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக் கொள்ள முடியவில்லை!
வசதியின் வாழ்க்கை படியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திகொள்ள முடியவில்லை!
அணிந்து மகிழ்வதற்காகவே ஆடைகள்..
உன் ஆடைகளின் கதையோ
சோகமானது..
அவை அவிழ்பதற்காகவே…
அணிவிக்கப்பட்டவை..
நடிகை என்று உன்னை
நாடு அழைத்தது!
எங்கள் முன்
ஒரு கேள்வியை
எரிந்தது உன் வாழ்க்கை!
‘ நடிக்காதவர் யார்?’
நீ தாலி கட்டாமல்
வாழ்ந்தது கூடத்
தவறில்லை-ஒரு
வேலி கட்டி
வாழ்ந்திருக்கக் கூடாதா?
யார் யாருக்கோ
அட்சய பாத்திரமாய் இருந்தாய்!
உன்னையே நீ ஏன்
பிச்சைப் பாத்திரமாய்
உணர்ந்தாய்?
கனவுத்தொழிற்சாலையே உன்
கைக்குள் இருந்தது!
நீ ஏன் இன்னொருவர் கைக்குள்
இறுகிக் கிடந்தாய்?
நீ
விசிறிகளை நேசித்தாய்..
அதனால் தானா
உன் மரணத்தையும்
ஒரு விசிறியிடம்
யாசித்தாய்?
உன் மரணத்துக்காக
என் கவிதை இப்போது
கண்ணீர் சிந்தவில்லை..
பெருமூச்சு விடுகிறது!
இனி
தூக்கத்தில் யாரும் உன்னைத்
தொல்லை செய்ய மாட்டார்கள்…
உன் படுக்கையில்
நெருப்பை யாரும் பற்ற வைக்க மாட்டார்கள்…
இனி
உனக்கு
கூரிய நகங்களால் கீறும்
இரவுகளும் இல்லை!
கொள்ளிக் கட்டைகளாய்ச் சீறும்
பகல்களும் இல்லை!
… ஷஹி…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments