சிறுநீரகங்களைப் பாதிக்கும் இரண்டு காரணிகள்:
சிறு நீரகங்கள் தொடர்பான பிரச்சினைகளில் சமீபத்தில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட சிறுநீரக பிரச்சினைகள் என்று இரண்டு வகைகள் உள்ளன. இதில்; நாள்பட்ட சிறுநீரக பிரச்சினைகள் பற்றி அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.
உறுப்புகளைப் பாதிக்கும்:
நாள்பட்ட சிறுநீரக பிரச்சினைகளுக்கு, பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பது, சர்க்கரைக் கோளாறு. கட்டுக்குள் வைக்காத ரத்த சர்க்கரை பல உறுப்புகளைப் பாதிக்கும். சிறுநீரகங்களை அதிகமாகப் பாதிக்கும்.
இரண்டாவது, உயர் ரத்த அழுத்தம். இதுவும் ரத்த சர்க்கரை போன்றே கட்டுக்குள் இருக்கவேண்டும்.
சர்க்கரைக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதற்குண்டான மருந்துகள், உணவுமுறை, உடற்பயிற்சி செய்து, இரண்டையும் சீரான நிலையில் வைக்க வேண்டியது அவசியம்.
நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு உள்ள 100 பேரில் 70 சதவிகைதம் பேருக்கு, சர்க்கரைக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என்ற இரன்டால்தான் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுகின்றது. 30 சதவிகிதம் பேருக்கு மட்டுமே மற்ற காரணிகளால் பாதிப்பு வருகிறது.
சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் தாராளமாகக் கட்டுப்படுத்த முடியும். வராமலேயே தடுக்கவும் இயலும். இப்படி செய்தால் மட்டுமே, நாளடைவில் சிறுநீரகக் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
காரணம், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளுக்கு நிவாரணம் தர மருத்துவத் தீர்வு கிடையாது. ரத்த சர்க்கரையின் அளவும், உயர் ரத்த அழுத்தமும் தொடர்ந்து அதிகமாக இருந்தால், நாளாக நாளாக சிறுநீரகங்களில் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்லும்.
பாதிப்பின் வீரியத்தை குறைக்க முயற்சி செய்யலாமே தவிர முழுமையாகக் குணப்படுத்த முடியாது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டால், பாதிப்பு வந்த அடுத்த ஓராண்டில் டயாலிஸிஸ் செய்யவேண்டிய கட்டாயம் வந்துவிடும்.
இந்த சிகிச்சை ஆரம்பித்த இரண்டாண்டுகளுக்கு மட்டுமே அவர்கள் வாழ முடியும் என்ற நிலை இருந்தது. நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்கு டயாலிஸிஸ் அலல்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.
அந்த நிலை இப்போது இல்லை. உடனடியாக டயாலிஸிஸ் செய்யவேண்டிய அவசியம் கூட இல்லை. பிரச்சினை ஏற்பட்டபின், அடுத்த 15 ஆண்டுகளுக்குக்கூட மருந்துகளிலேயே நாள்பட்ட சிறுநீரகக் கோளாறை கட்டுக்குள் வைக்க முடியும்.
அறிகுறிகள்:
கால் வீக்கம், முக வீக்கம், சிறுநீரில் நுரைபோல போவது, ரத்தம் வருவது, சிறுநீர் அளவு குறைவாக போவது, மூச்சு வாங்குவது, களைப்பு, பசியின்மை போன்ற அறிகுறிகள் தொடர்ந்து 3 மாதங்கள் இருந்தால், சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
டயாலிஸிஸ் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், பல ஆண்டுகள் தொடர்ந்து உயிர் வாழ முடியும்.
அந்த அளவுக்கு நவீன மருத்துவ தொழில் நுட்பம் மாறிவிட்டது. நல்ல தரமான டயாலிஸிஸ் செய்தால், இயல்பாக வாழ முடியும்.
எனவே, டயாலிஸிஸ் என்பது அசாதாரணமான சிகிச்சையாக இருந்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
டயாலிஸிஸ் செய்தாலே உடலின் வேறு உறுப்புகள் பாதிக்கும். டயாலிஸிஸ் என்பது சிறுநீரகக் கோளாறின் இறுதிக் கட்டம் என்ற நிலையும் தற்போது இல்லை.
இந்த சிகிச்சை செய்து பல ஆண்டுகள் இயல்பாக வாழ்பவர்கள் பலர் இருக்கின்றனர்.
சிறுநீரகங்கள் முழுக்க செயலிழந்த பின் டயாலிஸிஸ் செய்கிறோம். அப்படி இருந்தாலும், இது வலி மிகுந்த செலவு பிடிக்கும் சிகிச்சை’ என்று மனதளவில் சோர்வடையாமல், இயல்பாக ஏற்றுக் கொண்டால், எந்த பிரச்சினையும் இருக்காது. நல்ல தரமான டயாலிஸிஸ் சிகிச்சை என்றால், வாரத்திற்கு மூன்று முறை வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டும்.
இதற்கு மாதம் 40,000 ரூபாய் வரை செலவு பிடிக்கும். நம் நாடு என்றில்லை. வளர்ந்த நாடுகளில் கூட இலவசமாக இதை செய்வது என்பது இயலாத விஷயம். மருத்துவ காப்பீடு இருந்தால், பிரச்சினை இருக்காது.
. இதன் இன்னொரு பக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். டயலிஸிஸ் என்பது சர்வ ரோக நிவாரணி இல்லை. இதை செய்தால், இதயக் கோளாறு, மூளை தொடர்பான பிரச்சினைகள் வராது, என்றெல்லாம் சொல்ல முடியாது.
சர்க்கரைக் கோளாறு இருந்தால், உடலின் பல உறுப்புகளும் பாதிக்கப்படலாம். டயாலிஸிஸ் சிகிச்சை என்பது பழுதான சிறுநீரகங்களுக்கான சிகிச்சை.
இந்த சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மற்ற உடல் உறு[ப்புகள் ஆரோக்கியமாக இருந்தால், டயாலிஸிஸ் செய்து 16 ஆண்டுகள் வரை இயல்பாக வாழ முடியும். டயாலிஸிஸ் செய்பவர்களுக்கு மாரடைப்பு வருவது இந்த சிகிச்சையால் இல்லை. சர்க்கரைக் கோளாறு நீண்ட காலமாக இருப்பதால், இதயமும் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனால் வந்த விளைவு இது.
டயாலிஸிஸ் ஆரம்பித்த சில ஆண்டுகளில் மாரடைப்பு வந்தால், இந்த சிகிச்சையால்தான் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. இது இதயத்தில் ஏற்பட்ட அடைப்பால் வருவது. இதய வால்வுகளில் அடைப்பு ஓரிரு ஆண்டுகளில் வராது.
சர்க்கரைக் கோளாறு பல ஆண்டுகள் இருந்து, ரத்த நாளங்களில் அடைப்பு என்று சர்க்கரைக் கோளாறு ஆரம்பித்த அன்றிலிருந்து, மெதுவாக வர ஆரம்பித்து இருக்கும்.
பல நேரங்களில் அறிகுறிகள் இல்லாமல் சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்த பின், வெளியில் தெரிய வரும்.
அதனால், சர்க்கரைக் கோளாறு, ரத்த அழுத்தம் இருந்தால், ஆண்டிற்கு ஒருமுறை எல்லா உறுப்புகளும் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்வது நல்லது; அறிகுறிகள் வந்தபின் சென்றால், பிரச்சினையை முழுமையாக சரி செய்ய முடியாமல் போய் விடும்.
**************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments