/* ]]> */
Nov 102010
 
நவம்பர் 17 .2010 தேதியிட்ட ஃபெமினா பத்திரிக்கையில் வெளிவந்துள்ள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் பேட்டியின் தமிழாக்கம்.

தஸ்லிமாவின் பெரும்பான்மையான கருத்துக்களுடன் நான் 100 விழுக்காடு முரண்படுகிறேன்!அவருடைய மத விரோதக் கொள்கைகளுக்கு என்றுமே நானொரு எதிரி! ஆனால் ஒரு பெண்ணாக அவருடைய உறுதியும் , தைரியமும் என்னை வியக்க வைத்துள்ளன. ஃபெமினா போன்ற பத்திரிக்கைகள் பெரும்பான்மையினருக்கு படிக்கக் கிடைப்பதில்லை என்பதாலும், மாற்றுக் கருத்துக்களை எதிர்நோக்கியும் இந்த மொழியாக்கத்தை எழுதியுள்ளேன். சர்ச்சைகளின் மறு பெயராகவே உள்ள தஸ்லிமா, குரானை விமர்சித்து பங்களாதேஷை விட்டு வெளியேற்றப்பட்டவர்.

அவருடைய “லஜ்ஜா” நாவலுக்காக கடும் விமர்சனங்களுக்கு ஆளானதுடன், இரு ஆண் எழுத்தாளர்கள் இவருக்கு எதிராக வழக்குகள் தொடுத்தும் உள்ளனர்.

இனி பேட்டி:

1.உங்கள் பெற்றோர் மிகுந்த சமயப்பற்று உள்ளவர்கள் . உங்களுடைய எழுத்துக்களை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

பதில்: என்னுடையது ஒரு கல்வியறிவு மிக்க குடும்பம். என் தாய் இறையச்சம் மிக்கவர் அதே சமயம் தாராள மனப்போக்கும், இரக்க சுபாவமும் கொண்டவர். என் தந்தை மருத்துவர் அதனால் பகுத்தறிவுவாதி எதையும் அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகுபவர். நான் எப்போதுமே இறைநம்பிக்கை கொண்டதில்லை. மதச்சார்பற்ற, அறிவியல் பூர்வமான சூழ்நிலையில் வளர்ந்ததால் என் படிப்பு மற்றும் தொழில் சம்பந்தமான முடிவுகளை சிறப்பாக என்னால் எடுக்க முடிந்தது.

வளர, வளர சமூக ஏற்றத்தாழ்வுகள், தந்தை வழி சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் ,மதங்களின் அறிவுக்குப் புறம்பான கருத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொண்டேன்.

நான் மகளிர் மருத்துவம்(GYNAECOLOGY) முடித்த சமயம் பத்திரிக்கைகளில் எழுதவும் ஆரம்பித்திருந்தேன். பெண்ணியக் கோட்பாடுகள் என் பதின் பருவத்திலேயே முளைவிடத் துவங்கி விட்டன. நான் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உள்ளதை வெகுவாக வரவேற்ற என் பெற்றோர், என் கவிதைகள் பிரசுரமானதைப் பற்றியும் மிகவும் மகிழ்ந்தனர். ஆனால் என் எழுத்துக்கள் மதத்தலைவர்களை எரிச்சலூட்டுவது பற்றி கவலையுறவும் செய்தார்கள் தான்.

2. உங்கள் வாழ்வை வெகுவாக வகைப்படுத்திய இஸ்லாத்தைப் பற்றி இனி பேசுவதில்லை என்று கூறுகிறீர்கள்? இது சாத்தியமா?

பதில்:நான் இஸ்லாத்தில் வல்லுநள் இல்லை! ஆனால் குரானைப் படித்து ஆய்ந்திருக்கிறேன். இந்த மதத்தின் பகுத்தறிவற்ற தன்மை தான் என்னை ஒரு நாத்திகவாதியாக்கி உள்ளது. ஆமாம், இஸ்லாம் என்னை வகைப் படுத்தியுள்ளது. மதங்கள் எத்தனை முரண்பாடானவை, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்பதையெல்லாம் இஸ்லாமே எனக்கு போதித்தது. அதோடு பெண்களை எதிர்ப்பதிலும் அடிமைப்படுத்துவதிலும் மதத்துக்கு உள்ள வலிமையை அது தான் எனக்கு தெரிவித்தது.

பெரும்பாலான மதங்களைப் போல இஸ்லாமும் மனித உரிமை, பெண்ணுரிமை, கருத்துரிமை மற்றும் மக்களாட்சிக்கு எதிரானது. அது பெண்களை உடல், அறிவு மற்றும் ஒழுக்க ரீதியில் கீழானவர்களாகப் பார்க்கிறது. மதக்கோட்பாடுகள் மக்களாட்சிக்கு எதிரானவை , ஆனால் இஸ்லாம் முழுக்க முழுக்க மதக் கோட்பாடுகளை போதிப்பது. ஆகையால் நாத்திகவாதம் என் வரையில் மிக எளிதான ஒன்றாகிவிட்டது. அறிவியல் மாணவியாக , பெண்கள் ஆண்களை மகிழ்விக்கவே பிறந்தவர்கள் என்பதையும், சூரியனே பூமியைச்சுற்றுகிறது என்ற கருத்தையும், நிலவுக்கு சுயமாக ஒளி உண்டு என்பதையும் மலைகள் பூமியை விழுந்து விடாமல் நிலைப்படுத்துகின்றன( குரானின் கருத்துக்கள்) என்பதையும் என்னால் ஏற்கவே இயலவில்லை.

3. அடிப்படையான மதக்கருத்துக்களை விமர்சிக்கும் போது மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என்று நினைத்தீர்களா?

பதில்:மனித சமூகத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் புதிய கருத்துக்கள் எப்போதுமே எதிர்ப்புகளுக்கு உள்ளானதை அறியலாம். பல நூற்றாண்டுகளாக பெரிய சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் சமூக மேம்பாட்டுக்காக புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் பரப்பியபடியே தான் இருந்திருக்கின்றனர். ஆனால் மாற்றத்தையும் புதுமைகளையும் எதிர்த்தபடியே உள்ளவர்களும் எப்போதுமே இருந்திருக்கிறார்கள். அவை சமுதாய மேம்பாட்டுக்கான கருத்துக்களாக இருந்தாலும் அப்படித்தானே! என்னுடைய கருத்துக்கள் மக்கள் நலனுக்கானவை, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கானவை.

4. உங்களுடைய கருத்துக்கள் தீவிரவாதப் போக்குடையவை என்று சொல்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

பதில்: எதைத் தீவிரவாதம்  என்கிறீர்கள்? பெண்களும் மனிதப்பிறவிகளே ,அவர்களுக்கு சமரிமையும் சம நீதியும் வேண்டுமெனக் கோருவது தீவிரவாதமா? நாம் இன்னமும் ஆண்களுக்கு வழங்கப்படும் அதே உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்படும் சமுதாயத்தில் தான் வாழ்கிறோம். மதங்கள் புரட்சிகரமான எண்ணங்கள் மற்றும் சமூக மாற்றங்களுக்கு இடையூறானவை. பூனைக்கு யாராவது மணிகட்டி பூமியை நல்லவொரு வசிப்பிடமாக மாற்ற வேண்டும்!

5. உங்களுடைய இந்த இஸ்லாத்துக்கெதிரான நிலைப்பாடு ஹிந்து முஸ்லிம் பகைக்கு இன்னமும் நெருப்பு சேர்க்காதா?

பதில்:திசைதிருப்பாதீர்கள்! ஹிந்து முஸ்லிம் பகைக்கு முக்கிய காரணம் மத அரசியல்..எழுத்தாளர்களுக்கும் அவர் தம் கருத்துக்களுக்கும் இதில் ஏதும் சம்பந்தம் இல்லை! இஸ்லாத்தைப்பற்றி அவதூறாக எழுதி ஹிந்து அடிப்படைவாதிகளின் வரவேற்பை நான் பெற விரும்புவதில்லை. எல்லா மதங்களின் தவறான கோட்பாடுகளைப் பற்றியும் நான் எழுதுகிறேன். பகுத்தறிவுக்கு எதிரான மற்றும் பாரபட்சமான மதக் கருத்துக்களை மக்களின் பேரில் திணிப்பதையே நான் எதிர்க்கிறேன்.

6. உங்கள் விமர்சகர்களின் கருத்து, நீங்கள் இத்தனை சர்ச்சைக்குரியவராக இருப்பது, மக்களின் மற்றும் ஊடகங்களின் கவனத்தைக் கவர்வதர்காகத் தான் என்பது! விளக்குங்கள்?

பதில்:நகைப்புக்குரிய மற்றும் பொருந்தாத விமர்சனம் இது! ..என்னுடைய விமர்சகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம்..இது ஒரு சுதந்திரமான உலகம்.. கவன ஈர்ப்புக்கு அவர்களும் எதை வேண்டுமானாலும் எழுதலாமே! முடிந்தால்? எனக்கு மட்டுமே தான் சிந்திக்கவும் எழுதவும் ஏகபோக உரிமை உள்ளதா என்ன? உண்மையாக சொல்வதானால் கவன ஈர்ப்பு எப்போதும் என்னுடைய குறிப்புகளில் இல்லை! என் வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகளுக்காகவும், பெண்ணுரிமைக்காகவும், மதச்சார்பற்ற சமூகத்துக்காகவும் போராடி வருகிறேன். என்னுடைய எழுத்துக்கள் குழப்பங்களை விளைவிக்கின்றன என்றால்…அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்! மக்கள் என் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள், சமூக மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.

7. உங்களுடைய வாழ்க்கைக் குறிப்பின் மூன்றாம் பாகத்திலிருந்து சில பகுதிகளை நீக்கிஉள்ளீர்கள். இது எழுத்துச் சுதந்திரம் பற்றின உங்கள் எண்ணத்துக்கே எதிரானது இல்லையா?

பதில்:இது நான் சரணடைவதாக அர்த்தம் தராது!!! அமைதி ஒழுங்குக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாமென எண்ணி செய்தது…ஆட்சிக்கு சிரமம் அளிக்க வேண்டாமென்ற முடிவில் செய்தது. என்னுடைய கருத்துச் சுதந்திரத்தை இது எவ்விதத்திலும் தடை செய்வதாக நான் கருதவில்லை!

8. உங்கள் சுயசரிதையில் உங்கள் வாழ்கையில் வந்த ஆண்களைப் பற்றின குறிப்புகளை பகிரங்கமாக எழுதி உள்ளீர்கள். இது அவர்களுடைய அந்தரங்கத்தை கூறு போடுவதாகாதா?

பதில்:அது என்னுடைய சுயசரிதை. நான் எழுதியதெல்லாம் அப்பட்டமான உண்மை! பெண்கள் ஒன்று…மரியாதையுடனும், கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் வாழலாம் அல்லது ஒரு ஆணுடன் வாழலாம்! என் வரையில் நான் பழகின ஆண்களுக்கு நான் மிகவும் சிரமமான பெண்ணாக்கத் தோன்றினேன் ஏனென்றால் நான் அடிமையாக வாழ்வதை வெறுத்தேன். நானும் அவர்களை விரும்பவில்லை ஏனென்றால் என்னை எந்த ஆணும் ஒரு தனி மனுஷியாக நடத்தவில்லை! ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக என் வாழ்வின் முக்கிய சம்பவங்களை என் சுயசரிதையில் நான் மறைக்க முடியாது! நான் பாசாங்கு செய்வதை விரும்பாதவள்!

9. இந்தியாவில் வாழ விரும்புவதாகக் கூறுகிறீர்கள்! இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் கருத்துச் சுதந்திரம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? எம்.எஃப்.ஹுசெய்ன் தன்னுடைய இந்தியக்குடியுரிமையை விட்டுவிட்டாரே..தொடர் விமர்சனங்களால்?

பதில்: என் இதயம் இந்தியாவில் உள்ளது! நான் பாரதத்தை நேசிக்கிறேன்! 1994 இல் நான் பங்களாதேஷை விட்டு வெளியேற்றப் பட்டதிலிருந்து இந்தியாவில் வசிக்கவே விரும்பி வந்திருக்கிறேன். இந்தியா கலாச்சார சிறப்பும் ,பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரமும் உள்ள நாடு. கலைஞர்கள் இங்கு எப்போதுமே சிறப்பிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இங்கு என் சுதந்திரம் பறிக்கப்படுமென எண்ண காரணமே இல்லை! ஹுசெய்ன் அவர்களின் முடிவுக்கு அவருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். நான் கருத்துக் கூறுவதற்கில்லை! மேலும் நான் வங்காள மொழியில் எழுதுபவள்..என் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் இந்தியர்கள் தானே.

10. பலியாடாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

பதில்: இது கொஞ்சம் அதிகப்படியான வார்த்தையாடல். அடிப்படை மதவாதிகளும், மக்களில் ஒரு சாராரும் சமுதாய நன்மை குறித்து சிந்திக்க மறுப்பது எனக்கு துயரளிக்கிறது. சிந்தனையாளர்களும் கூட பேச வேண்டிய நேரங்களில் மௌனம் சாதிப்பதும், மத வெறியர்களை எதிர்க்காதிருப்பதும் என்னை சோர்வு கொள்ளச் செய்கின்றது.

ஆம் என் உயிருக்காக நான் அஞ்சிய நாட்களும் உண்டு! ஆனால் எதுவுமே சும்மா கிடைக்காது. உயிரச்சத்தோடே வாழ்வதென்பது எளிதானதல்ல! ஆனால் என் கொள்கைப் பிடிப்பும் நம்பிக்கையும் என்னைக் கொண்டு செலுத்துகின்றன.

11. உங்கள் தத்தளிப்பான, குழப்பங்கள் நிறைந்த வாழ்கை பற்றி வருத்தங்கள் உண்டா? வேறு மாதிரியான வாழ்க்கையை அமைத்துகொண்டிருக்கலாம் என்று எண்ணியதுண்டா?

பதில்: இல்லவேயில்லை! என்ன நடந்தாலும் நான் உண்மையைப் பேசுவதை நிறுத்தமாட்டேன்.

….ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>