
குணசுந்தரியின் அகால முடிவு எங்கள் வீட்டில் நிகழ்ந்த துயரார்ந்த சம்பவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள என்னைத் தூண்டியுள்ளது.
என் புகுந்த வீட்டின் கடைகுட்டிப் பெண் அவள். அனைவரின் பிரியத்துக்கும் கனவுகளுக்கும் வடிவமாய் இருந்தவள். அப்போது அவளுக்கு இருபத்தியோரு வயது, நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் ,அழகியாய்த் திகழ்ந்தாள். திருமணம் செய்விக்க மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென கடுமையான வயிற்று வலியால் துடியாய்த்துடித்தாள். எங்கள் ஊரில் இருந்த மருத்துவரிடம் அழைத்துப் போனோம். பரிசோதிக்கக் கூட தொட விடாத அளவுக்குக் கொடூரமான வலி. பார்த்ததுமே சொல்லி விட்டார் மருத்துவர், பித்தப் பை கற்கள் தான் இம்மாதிரியான வலிக்குக் காரணமாய் இருக்க முடியும் என்று! அதற்கான ஒரே தீர்வு பித்தப் பையை அகற்றி விடுவது தான் என்றும் கூறி விட என் மாமியார் அருகிலிருந்த பெரு நகரம் ஒன்றில் பிரபலமாய் இருந்த (இருக்கும்) அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று விட்டார். சென்றோம்.
பரிசோதனைகளுக்குப் பிறகு இவரும் எங்கள் ஊர் மருத்துவரின் கருத்தையே வழி மொழிந்தார். திருமணம் ஆகாத பெண்ணுக்கு இதனை பெரிய அறுவை சிகிச்சை செய்தால், அவளுக்கு எப்படி நல்ல வரன் அமையும் என்று மாமியார் கண்ணீர் சிந்த,” அதனால் என்னம்மா? லாப்ராஸ்கோப் சிகிச்சை செய்த்து விட்டால் அறுவையின் தடமே தெரியாது, உடலும் விரைவில் தேறிவிடும் “என்று மருத்துவர் நம்பிக்கை அளித்தார். உடனே மகளை அங்கு தான் அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் என் அத்தை. செய்தோம்!
அறுவை முடிந்து நல்ல படியாக வீடு திரும்பினோம். ஒரே வாரத்தில் கடுமையான வலி வந்து விட்டது அவளுக்கு. அலறி கட்டி அழைத்துக் கொண்டு ஓடினோம், மருத்துவர் கொஞ்சமும் பதறினார் இல்லை. “எத்தனை பெரிய அறுவை செய்திருக்கிறோம்! இந்த வலி கூட இல்லாமலா இருக்கும்” என்று சாதாரணமாகப் பேசி டிரிப்ஸ் போட்டு அனுப்பி வைத்தார்.
இரண்டே நாட்களில் வலி தீவிரமாக, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி, சிறுநீர் கலங்கலாகவும் மஞ்சள் நிறமாகும் இருக்க, மருத்துவர் முகத்தில் கலவரக் குறி. ஆரம்பித்தது பரிசோதனைகள், மேலும் பரிசோதனைகள் , டாக்டர் குழுவினரின் புருவ உயர்த்தல்கள், குடும்பமே ஆஸ்பத்திரியில் கதியாய்க் கிடந்தோம். என்ன ஏதென்று சொல்வார் இல்லை. நிலமை மோசமாகிக்கொண்டே செல்ல மருத்துவ மேல் படிப்பு படித்துக் கொண்டிருந்த என் தம்பியை வரவழைத்தோம். அவன் சொன்ன பிறகு தான் அடிப்படையான விடயத்திலேயே தவறு நிகழ்ந்து விட்டது என்பதை அறிந்தோம்.
குண்டான உடல் வாகு கொண்டவர்களுக்கு லாப்ராஸ்கோப் அறுவை முறை ஏற்றதல்லவாம்! மேலும் பித்தப் பையை அகற்றியவுடன், பித்த நீர் பயணிக்கும் குழாயை( பைல் டக்ட் என்று நினைக்கிறேன்) கையால் நிரடிப் பார்ப்பார்களாம் அறுவை செய்யும் மருத்துவர்கள், பித்தைபையில் இருந்து கல்லின் உடைந்த துகள்கள் குழாயில் அடைத்துக் கொண்டிருக்கின்றனவா? என்று!” லாப்ராஸ்கோப் முறையில் இவ்வாறு பார்ப்பது அத்துணை எளிதில்லை, அதனால் பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கு இந்த முறை ஏற்றதல்ல என்று!”என்றான் தம்பி! அதிர்ந்து போனோம் நாங்கள்.
நான் சொல்ல விரும்புவது .. மருத்துவர்களை குறை கூறுவது மட்டும் அல்ல! நாமும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது தான்.
1.வீட்டில் யாருக்காவது உடல் நலக் குறைபாடு என்றால் உடனடியாக கவனிக்க வேண்டும். காலம் தாழ்த்துவதால் பிரச்சினையை பெரிதாக்க மட்டுமே முடியும்,
2. அக்குறைபாடு அல்லது வியாதி பற்றி நம்மால் முடிந்த அளவு தெரிந்து கொள்ள வேண்டும்,
3. நுகர்வோராக நம்முடைய உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும்,
4. மருத்துவர்கள் நம்முடைய கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்,
5. தயங்காமல் சந்தேகங்களை கேட்கலாம், பதில் சொல்ல மறுக்கும் டாக்ட்ர்கள் நமக்கு வேண்டாம்,
6. குடும்ப மருத்துவரின் ஆலோசனை பெரும்பாலும் சரியாக இருக்கும், அவருடைய கருத்தின் பேரில் நிபுணர்களை அணுகலாம்,
7. சிக்கலான பிரச்சனை என்றால் ஒரு டாக்டருக்கு மேல் ஆலோசனை பெறத்தயங்க வேண்டாம்.
என் நாத்தனார் இறந்து பல மாதங்கள் ஆன பிறகும் கூட அவள் இல்லாதது அறியாமல் வரன்கள் வந்து கொண்டிருந்தது தான் உச்சகட்ட கொடுமை. அவள் போய்ச் சேர்ந்து விட்டாள், நடைப் பிணமாக வாழ்கிறார் என் அத்தை.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments