/* ]]> */
Mar 302012
 
KAR

  

பொதுவாக ஒரு படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டால் அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்வதை நான் தவிர்ப்பது வழக்கம் … ஆனால்  38  ஆண்டுகளுக்கு முன் பி.ஆர்.பந்துலு - சிவாஜிகணேசன்கூட்டணியில் வெளியாகி , மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை பற்றி எழுதாமல் விட்டால் நான் பதிவுலக பாவியாகி விடுவேனோ என்ற பயத்தால் கர்ணன் படம் , சிவாஜி இவர்களை பற்றிய எனது அனுபவங்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் …

என் அப்பாவும் , பெரிய அண்ணனும் சிவாஜியின் தீவிர ரசிகர்கள் , அதிலும் என் அப்பா மதுரையில் சிவாஜி படத்தை பார்க்க முடியாமல் போனால் கூட சைக்கிளை எடுத்துக்கொண்டு பல நூறு கிலோமீட்டர்கள் போய் பக்கத்து ஊரிலாவது படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுமளவிற்கு சிவாஜியின் தீவிர வெறியர் … சிறு வயதிலிருந்தே இவர்களை பார்த்து வளர்ந்த எனக்கு சிவாஜியின் பாதிப்பு இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை …

சிவாஜியின் நடை , உடை ,பேச்சு என எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றும் எத்தனையோ ரசிகர்களை நான் சிறு வயதில் சந்தித்து வியந்திருக்கிறேன் … பிறகு கொஞ்சம் , கொஞ்சமாக கமல் என்னை ஆக்ரமிக்க தொடங்கியும் என்னால் சிவாஜியின் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை … ரஜினி , கமல் இருவரும் கோலோச்சிய பிறகும் கூட சிவாஜி மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த “ திரிசூலம் ” படம் 200  நாட்களுக்கு மேல் ஓடியது …

 படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் ” உள்ளத்துள் நல்ல உள்ளம்”  என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை …

பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்தாலும் பத்துக்கு மேல் வந்து படத்தின் வேகத்தை குறைப்பதென்னவோ உண்மை … எல்லா சிறந்த படங்களிலும் இருப்பது போல இப்படத்திலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன , ஆனால் அவையெல்லாம் சூரியனை கண்ட இருளை போல சிவாஜிக்கு முன் மறைந்து விடுகின்றன …

படம் ஆரம்பித்ததிலிருந்தே சிவாஜியின் கர்ஜனை தொடங்கி விடுகிறது. வில்வித்தை போட்டி நடக்கும் போது அர்ஜுனனுக்கு எதிராக சவால் விடுப்பது , பிறகு குலத்தை காரணம் காட்டி தன்னை அனைவரும் இழிவு படுத்தும் போது கூனி குறுகி நிற்பது , ஆட்ட மும்முரத்தில் நண்பனின் மனைவியை இடுப்பில் தட்டி நிறுத்திவிட்டு தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் துடிப்பது , தான் உதாசீனப்படுத்தப்படுவது தெரிந்ததும் பீஷ்மருடன் நேருக்கு நேர் மோதுவது , கோபத்தில் மாமனாருடன் உறுமுவது , தன் இழி நிலைக்கு காரணமான தாயை கொலை செய்ய வேண்டும் என்று கர்ஜித்து விட்டு பின் தாய் யாரென்பதை அறிந்ததும் குழந்தை போல அழுவது என சிவாஜியின் நடிப்பில் அரங்கமே மெஷ்மெரிசம் செய்யப்பட்ட காட்சிகள் ஏராளம் …

சிவாஜியின் நடிப்புக்கு ஈடு கொடுத்து தன் இயல்பான நடிப்பால் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் சாவித்திரி … இந்த இரண்டு ஜாம்பவான்களிடம் அகப்பட்டுக் கொண்டு என்ன செய்வதென்று புரியாதது போல பாவம் விழிக்கிறார் அசோகன் … சிவாஜிக்கு அடுத்த  படியாக அதிக கைத்தட்டல் பெறுபவர் கிருஷ்ணராக நடித்த என்.டி.ஆர் , சொல்லப்போனால் இவர் வந்த பிறகு படம் இன்னும் சூடு பிடிக்கிறது… சூட்சுமமாக அவர் பேசும் வசனங்கள் அருமை …

சதி திட்டத்தால் கர்ணனை அவர் வீழ்த்தி விட்டு அழிந்தது உடல் தானே தவிர, ஆன்மா அல்ல , தர்மத்தை நிலை நிறுத்த இது போன்ற செயல்கள் அவசியமே என்றெல்லாம் தத்துவங்கள் பேசுவதை புத்தி ஏற்றுக்கொண்டாலும் மனம் ஏற்க மறுக்கிறது … ஏன் கடவுள் மேல் கோபமே வருகிறது , ஏனெனில் இறந்து கிடப்பது கர்ணன் மட்டுமா  ? கர்ணனை நடிப்பால் எமக்கு காட்டிய நடிகர் திலகமல்லவா ?! … கடைசியில் மாஸ் ஹீரோ இறப்பது போல காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு கர்ணன் படம் நல்ல உதாரணம் , அதனால் தானோ என்னவோ படம்  1964  இல் வெளியான போது படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ( தளபதியில் இந்த முடிவை தவிர்த்ததால் படம் வெற்றி பெற்றது ) ..

அதே சமயத்தில் வாழும் போது உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாவிட்டாலும் சாவிற்கு பின் நீங்கா புகழால் எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதியை போல இன்று வரை பல முறை மறு வெளீயீடு செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்துக்கொண்டிருக்கும் படம் கர்ணன் …

ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிவாஜியை கேலி பேசுபவர்கள் நிச்சயம் அவர் இது போல நடித்திருக்காவிட்டால் கர்ணனாய் , கப்பலோட்டிய தமிழனாய் , வீரபாண்டிய கட்டபொம்மனாய் நம்மிடையே  வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் … சிவாஜி என்றுமே இயக்குனர்களின் நடிகராய் இருந்ததால் அவர்கள் சொல்வதை மறுப்பில்லாமல்  அப்படியே செய்திருக்கிறார் … உணர்ச்சிவயப்படும் காட்சிகளில் அது ஓவர் ஆக்டிங்காக வெளிப்பட்டிருக்கிறது … நிச்சயம் அதை குறைத்திருக்கலாம் , ஆனால் அதுவே சிவாஜியின் தனித்தன்மை …

படம் ஆரம்பித்தவுடன் சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் படம் முடிந்து வெளிவரும் போது கொஞ்சம் கலங்கியது போலிருந்ததை காண முடிந்ததே இதற்கு மற்றுமொரு சான்று  … மெத்தட் ஆக்டிங்கில் புகழ்பெற்ற மேலைநாட்டு நடிகர்களே சிவாஜியை வானளாவ புகழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாறு.

கர்ணன் படம் நமக்கு உணர்த்தும் பாடங்கள் நிறைய … என்ன தான் நட்பை போற்றும் நல்லவனாக இருந்தாலும் மண்ணாசையும் , மனதில் வளர்க்கும் பகைமையும் ஒருவனை வீழ்த்தி விடும் என்பதற்குதுரியோதனன் ஒரு உதாரணம் , கொடை வள்ளலாக இருந்தாலும் வாய் துடுக்கு ஆகாது என்பதற்கு கர்ணன் ஒரு உதாரணம் , தர்ம சீலன்  கூட கேட்பார் பேச்சை கேட்டு புத்தி தடுமாறுவான் என்பதற்கு தர்மன் ஒரு உதாரணம் , தர்மத்தை நிலை நாட்டுவதற்காக எந்த வழியையும் கையாளலாம் என்பதற்கு கிருஷ்ணன் ஒரு உதாரணம் , போர் மூண்டால் அதனால் நாசமாக போவது பல்லாயிரக்கணக்கான உயிர்களே என்பதற்கு படமே பெரிய உதாரணம்..

கர்ணனுக்கும் , சிவாஜிக்கும் உள்ள ஒற்றுமைகள் தான் எத்தனை ! கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்பவர்கள் கைகள் கூட தாழ்ந்து விடக்கூடாது என்பதற்காக வருபவர்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளும் பொருட்டு தன் கைகளை தாழ்த்திபிடித்தவன் , கர்ணனிடம் நேரடியாகவும் , மறைமுகமாகும் யாசகம் பெற்றவர்கள் எத்தனையோ பேர் … சிவாஜியும் தான் வாழ்ந்த காலத்தில் விளம்பரம் இல்லாமல் எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார்.

இந்திய – சீன போர் மூண்ட போது தானே வழிய வந்து பண உதவி செய்ததோடு பல நாடகங்கள் நடத்தி அதன் மூலம் வந்த வசூலை அப்போதைய பிரதமர் நேருவிடம் வாரி  வழங்கியது ஒரு உதாரணம் … சிவாஜிக்கு பிறகு வந்த எந்த நடிகரும் அவருடைய நடிப்பை யாசகம் வாங்காமல் நடித்ததில்லை , அந்த விதத்தில் சிவாஜி ஒரு நடிப்புலக  கர்ணன் …

கர்ணனிடம் எவ்வளவோ திறமைகள் இருந்தும் தேரோட்டி என்று சொல்லி அவனை புறம் தள்ளினார்கள் , அதே போல  ” வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில் சிறப்பாக நடித்ததற்காக  ஆசிய – ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகன் என்ற விருதினை பெற்றிருந்தும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதினை கூட கொடுக்காமல் உதாசீனப்படுத்தியது இந்திய அரசு …
போரில் ஜெயிப்பதற்காக நயவஞ்சக சூழ்ச்சிகள் செய்து கர்ணனை வீழ்த்தினான் கண்ணன் … இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார் … எத்தனை யுகங்கள் கடந்தாலும் நாம் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றும் பேசிக்கொண்டிருப்பது போல , இன்னும் எத்தனை யுகங்கள் போனாலும் சிவாஜியின் நடிப்புத்திறமையையும்  பேசிக்கொண்டு தானிருப்போம் , ஏனெனில் இருவருமே காலத்தை வென்றவர்கள் …

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>