இவர் பெயர் அருணிமா. 25 வயதான இவர், தேசிய அளவிலான ஒரு வாலிபால் விலையாட்டு வீராங்கனை. இவர் ஒரு சமயம், 2011 ம் வருடம் ,ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, ‘ பத்மாவதி எக்ஸ்ப்ரஸில் ,லக்னௌவிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் பிரயாணம் செய்துகொண்டிருந்த பெட்டியில் கொள்ளைக்காரர்கள் புகுந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தனர். பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர். அருணிமா இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல் கொள்ளையர்களை விரட்டும் முயற்சியில் இறங்கி, அவர்களுடன் சண்டையிட்டார். ஆனால் அதிக எண்ணிக்கையில் இருந்த அவர்களோ,அருணிமாவை சரமாரியாகத் தாக்கி, ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வெளியே வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அருணிமாவின் மீது ரயில் ஏறியது. இறந்தே விட்டார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் , ஓராண்டு சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். ஆனால் தனது வலது காலை இழந்துவிட்டார். ஆனால் நம்பிக்கையை இழக்கவில்லை கொஞ்சமாகத் தொங்கிக்கொண்டிருந்த வலது காலில் செயற்கைக் காலைப் பொருத்தி, இமயமலை மீது ஏறும் பயிற்சியைப் பெற்றார். அதில் அவர் தேர்ச்சி பெறவே, கடந்த ஏப்ரலில், உலகின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்ட் மீது ஏறி சாதனை படைத்தார். இதன்மூலம் ஒரு காலை இழந்த எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை அருணிமா பெற்றார். பனி சூழ்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதும், தன் முதுகுப் பையில் இருந்து இரண்டு திரிசூலங்களை எடுத்து தரையில் நட்டு வைத்தார். அருகிலேயே ஸ்வாமி விவேகானந்தரின் படத்தையும் வைத்தார். சிவபெருமானின் புகழ் பாடும் பாடல்களைப் பாடினார். ஒற்றைக் காலுடன் தன்னை உலகின் மிக உயரமான சிகரத்தை ஏற வைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். கிடைத்த பணத்தைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி துவக்க உள்ளார்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments