/* ]]> */
Feb 222012
 

ஆகஸ்ட் 2008, இந்தியக் கிரிக்கெட் அணியின் தூண்களாக விளங்கும் சச்சின் மற்றும் சேவாக் காயம் காரணமாக விலகினர். அப்பொழுதுதான் ஆஸ்திரேலியாவில் நடந்த,வளர்ந்து வரும் வீரர்களுக்கான போட்டியில் சதமடித்திருந்த வீரட் கோஹ்லி இலங்கை செல்லும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த இவர் அடுத்தப் போட்டியில் எடுத்த 37 ரன்கள் வெற்றிக்கு உதவியது.நான்காவது போட்டியில் அரை சதமடித்த இவர் அடுத்த தொடரில் தண்ணீர் சுமக்க வேண்டியதாயிற்று. பின்னர் நடைப்பெற்ற இலங்கையுடனான இன்னொரு தொடரில் பதினைந்துப் பேர் கொண்ட இந்திய அணியிலிருந்தே நீக்கப்பட்டார்.

 

கோஹ்லியின் வளர்ச்சியில் யுவராஜ் சிங் முக்கியப் பங்கு வகித்தார் என்பது பல பேருக்கு தெரியாது.காயம் காரணமாக யுவராஜ் விலக வீரட் கோஹ்லிக்கு அடித்தது ஜாக்பாட். அணியில் மீண்டும் நுழைந்த கோஹ்லிக்கு, இனிமேல் நாம் வெளியேற்றப் படமாட்டோம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!இலங்கையுடனான ஒரு போட்டியில் இவர் அடித்த சதம் வெற்றிக்கு வித்திட்டது மட்டுமல்லாமல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பெற்றது.நிதானமான போக்கும், பதறாத ஆட்டமும் இவரது பலம்.ஓவ்வொரு தொடரிலும் காயம் காரணமாகவோ, ஒய்வு கருதியோ மூத்த வீரர்கள் விலகும் போது இவர் அழைக்கப் பட்டார். ஒருமுறை சச்சினுக்கு பதிலாக முத்தரப்புத் தொடரில் பங்கேற்ற வீரட் கோஹ்லி மீண்டும் ஒரு சதம் அடித்தார். ஜூன் 2010, இவரது வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான பகுதி.மூத்த வீரர்கள் பலரும் இல்லாத நிலையில் ரெய்னாவின் கீழ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது இவருக்கு வயது 22.
சிறு சிறு வாய்ப்புகளேக் கிடைத்தாலும் ஒவ்வொன்றையும் உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டார். இது மற்ற இளம் வீரர்கள் கற்க வேண்டிய பாடம். இந்த வாய்ப்புகளை தவறவிட்டால் என்ன ஆகும் என்பதை பத்ரினாத்தைப் பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

2010ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் வீரட் கோஹ்லி.[25 ஆட்டங்கள், 3 சதங்கள், 995 ரன்கள்].மிகக் கடினமாக உழைத்து ஒவ்வொருப் படியாக முன்னேறிய இந்த இளம் சிங்கம் எந்த ஒரு வீரரின் வாழ்க்கை லட்சியமான உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார்.ரெய்னாவின் கீழ் பணியாற்றிய இவர் உலகக்கோப்பையில் ரெய்னாவிற்கு பதிலாக களம் இறங்கியது இவரது வளர்ச்சியை இவ்வுலகிற்கு பறைசாற்றியது. தான் ஆடிய முதல் உலகக்கோப்பை போட்டியில் சதம் அடித்த பெருமையும் இவரை வந்து சேர்ந்த்தது.மேற்கிந்திய தீவுகளுடன் அரை சதம் மற்றும் பல 30களை எடுத்தார். இலங்கையுடனான இறுதிப்போட்டியில், சேவாக், சச்சினை விரைவில் இழந்து தவித்த இந்திய அணியை காம்பீருடன் சேர்ந்த்து இவர்கள் குவித்த 83 ரன்கள் எளிதில் மறக்கக்கூடியதல்ல. அணியில் நிரந்தர இடத்தையும் பிடித்தார்.

முதலில் பேட்டிங் செய்வதைவிட இரண்டாவதாக பேட்டிங் செய்வதில் சிரமம் சற்று அதிகம். இலக்கை நோக்கி செல்வதற்கு மிகுந்த பொறுப்பு தேவை.கோஹ்லி இதில் சிறந்தவர் என்பதற்கு சான்று இவரது வியக்கவைக்கும் புள்ளிவிவரங்கள்.வீரட் கோஹ்லி ஆடி இந்தியா 44 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்துள்ளது.(வெற்றி-30, தோல்வி-12, முடிவு இல்லை, சமனிலை-2). இவ்வாறு இரண்டாவதாக ஆடி வெற்றி பெற்ற 30 போட்டிகளில் இவர் 1754 ரன்களை எடுத்துள்ளார். சராசரியோ அதிசயப்படவைக்கும் 62.87. இலக்கை அடையாமல் தோற்ற 12 போட்டிகளில் இவர் எடுத்தது வெறும் 520 ரன்கள்(சராசரி-36.09). கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியிலும் வீரட் கோஹ்லி பெரும் பங்கு வகித்துள்ளர் என்று சொன்னால் அது மிகையாகாது.இவரது ஆட்ட நுணுக்கம் மிக சிறப்பான ஒன்று.எப்பொழுதுமே நிதானத்தை கடைப்பிடிக்கும் இவர் தேவைப்பட்டால் அதிரடியாகவும் ஆடுவார்.சூழழுக்கு ஏற்றார் போல் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளும் திறமையும் தன்னுள் வைத்திருக்கும் இவரது ஆளுமை, 1.1.2011 முதல் இன்றுவரை இந்தியா விளையாடிய அனைத்து ஒருநாள் போட்டியிலும் கலந்துகொண்ட ஒரே வீரர் இவர்தான் என்பதில் இருந்து தெரிகிறது.

வீரட் கோஹ்லியின் பெயர் முதலில் அடிபடத் தொடங்கியது 2008ல். இந்திய அணி ஆஸ்திரேலியவை அவர்கள் குகையிலேயே வீழ்த்திய சமயத்தில், வீரட் கோஹ்லி தலைமையிலான இந்திய இளைஞர் அணி பத்தொன்பது வயதிற்குற்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றது.இயல்பிலேயே ஒரு அணியை வழிநடத்தும் பண்பு, முடிவெடுக்கும் தைரியம், பொறுப்பு அவரிடத்தில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அடுத்து நான் கூறப்போகும் சம்பவம் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தலாம். கர்நாடக அணியுடனான ஒரு ரஞ்சிப் போட்டியில் பாலோ ஆனைத் தவிர்க்க போராடிக் கொண்டிருந்த்த டெல்லி அணியை 18 வயதே நிரம்பிய வீரட் கோஹ்லி 90 ரன்கள் எடுத்துக் கரை சேர்த்தார்.இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்பவர்கள் மேலே படியுங்கள். முந்தய நாள் முடிவில் 40 ரன்கள் எடுத்துக் களத்திலிருந்த கோஹ்லிக்கு மிக அதிர்ச்சியான செய்தி ஒன்று அதிகாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்த்தது.தனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வந்த தனது தந்தையின் மரணச் செய்தி அது. மனம் தளராத வீரட் கோஹ்லி பெரும் சோகத்தை தாங்கிக்கொண்டு அன்றைய ஆட்டத்தில் பங்குகொண்டார். பொறுப்பாக ஆடி பாலோ ஆனைத் தவிர்த்து 90 ரன்களில் ஆட்டமிழந்த பின்னரே தன் தந்தையின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளச் சென்றார்.

வருங்கால இந்திய கேப்டன் இவர்தான் என்று பேச்சுகள் அடிபடத் தொடங்கி இருக்கிறது. பொறுப்பு, விவேகம், நிதானம், பொறுமை ஆகிய பண்புகள் நிறைந்த இவர் இந்த நிலைக்கு உயர்ந்தது ஆச்சர்யப்பட வேண்டியதல்ல. அணியில் மாற்று வீரராக வந்து, தன் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, படிப்படியாக முன்னேறி மாற்ற முடியாத சக்தியாக உருவெடுத்த வீரட் கோஹ்லியின் வளர்ச்சி நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டியது. வாழ்த்துக்கள்.

Arjun

படங்கள், புள்ளிவிவரங்கள்- cricinfo.com

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>