/* ]]> */
Oct 302011
 

     ஒரு படத்திலேயே இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் , சமீபத்தில் தோல்வியே கண்டிராத சூப்பர் ஹீரோ இருவரின் கூட்டணியில் ஆறு வருட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை … அதிலும் பிரமோக்களை தாண்டி “ போதி தர்மன் ” என்ற பல்லவ இளவரசனை பற்றிஏ.ஆர்..முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக்கியது …

வான சாஸ்திரத்தில்  இருந்து வயகரா வரை இங்கிருந்து மூல காரணிகளை வெளிநாட்டவர்கள்  சுருட்டி செல்ல நாமோ அந்த வரலாறு தெரியாமல் அயல்நாட்டு  மோகத்தில் இருக்கிறோம் என்பதை உரக்க சொல்வதால் வரலாற்றோடு கலந்து கட்டிய கற்பனையை நாம் கண்டுகொள்ளாமல் விடலாம் …

 1600  வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலிருந்து சீனா செல்லும் பல்லவ இளவரசன் போதி தர்மன் அங்கேயே தங்கி சீனர்களுக்கு மருத்துவத்தையும்  , தற்காப்பு கலையையும் கற்று தருவதோடல்லாமல் தன் வாழ்கையையும்  முடித்து கொள்கிறார் …

தற்காலத்தில் சீனர்கள் அந்த கலையை பயோ வார் மூலம் நம்மை அழிப்பதற்காகவும்  , போதி தர்மன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ருதியை கொல்வதற்காகவும் டோன் லீ என்பவனை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் … போதிதர்மன் பரம்பரையில் வந்த சூர்யாவை கொண்டு இந்த பயங்கரத்தை ஸ்ருதி எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை …

நடுவில் மானே தேனே போல ஆறு பாடல்கள் , காதல் , வில்லனின் ஹிப்னாடிச கொலைகள் , நீள , நீள வசனங்கள் , போதி தர்மன் பற்றிய போதனைகள் என போகிறது படம் …

முதல் பதினைந்து நிமிடத்திற்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு சொல்லி விடுவதே சிறந்த திரைக்கதைக்கு அடையாளம்  என்பார்கள் … ஆனால் இந்த படத்தில் முதல் இருபது நிமிடங்களுக்குள் மொத்த கதையையும் சொல்லிவிட்டு பின் படம் முழுவதும் அந்த சுவாரஷ்யத்தை தக்க வைக்க தவறி விடுகிறார்கள் …

சூர்யா சிக்ஸ் பேக்கிற்கு மெனக்கெட்ட அளவிற்கு நடிப்பில் மெனக்கெடவில்லை … அவர் போதி  தர்மனாக பிரகாசித்தாலும்  அவருடைய அரவிந்தன் கேரக்டரை வில்லனும்  , ஸ்ருதியும் அமுக்கி விடுகிறார்கள் … அதிலும் சூர்யா ஸ்ருதியை  விழுந்து , விழுந்து காதலித்து விட்டு பின் ஸ்ருதி ஏமாற்றி விட்டார் என்று சொல்லி ” எம்மா , எம்மா ” என வழக்கமான காதல் தோல்வி  பாட்டு பாடுவது செயற்கை திணிப்பு …

ஸ்ருதிக்கு தமிழில் அருமையான அறிமுகம் … படத்தில் சூர்யாவை விட அவருக்கு தான் வசனங்கள் அதிகம் … அதனால் தானோ என்னவோ அவர் கஜினி அசின் அளவிற்கு மனதில் ஒட்டவில்லை … மற்ற படி கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் …

    வில்லனை எதிபார்த்து படத்திற்கு  நிறைய பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன் … அவர் அறிமுகம் ஆகும் போது அவ்வளவு கைதட்டல்கள் … பார்வையாலே கலக்கும் வில்லன் … அதற்காக இவர் படம் நெடுக கண்களாலேயே ஹிபனாடிச கொலைகள் செய்து கொண்டிருப்பதும் கொடுமை… ஒருவனை ஹிப்னாடிசம் செய்யும் போது நடுவில் தடுப்பு இருக்க கூடாது என்பது நியதி , ஆனால் வில்லனோ சகட்டுமேனிக்கு லாரி , கார் ஓட்டுபவர் என்று ஒருவனை விடாமல் தொடர்ச்சியாக கொலை செய்யும் போது சலிப்பு தட்டுகிறது …

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனுக்கு ஒரு சபாஷ் … படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை அருமையான ஒளிப்பதிவு … ஹாரிஸ்

“ ஒ ரிங்கா ” பாடலை “ டாக்ஸி டாக்ஸி ” யில் இருந்து சுட்டிருந்தாலும்

 எம்மா எம்மா ” பாடலிலும் “ தோழா ” பாடலிலும் ஒரிஜினாலிட்டி காட்டுகிறார் … அதிலும் குறிப்பாக ” எம்மா எம்மா ” வில் எஸ்.பி.பியின் குரலும் , கபிலனின் வரிகளும் மனதை வருடுகின்றன … இருந்தும் பாடலுக்கான லீட் அழுத்தமாக இல்லாததால் அழகு குறைகிறது …

ஏற்கனவே தசாவதாரம் போன்ற படங்கள் பயோ வாரை தொட்டிருந்தாலும்  இதற்காக இயக்குனர் நிறைய மெனக்கட்டிருப்பது டீடைளிங்கில் தெரிகிறது … ஆனால் அது ஓவர்டோஸ் ஆகாமல் தடுத்திருக்கலாம் …

” மஞ்சளே மொளைக்காத நாட்டுக்காரன் நம்ம ஊர் மஞ்சளுக்கு பேட்டர்ன் ரைட் வாங்குறான் ” ,  “ 800 வருசமா இருக்கற இங்கிலிஷ்ல நீங்க பேசலாம் பல்லாயிரம் வருசமா இருக்கற தமிழ்ல நான் பேச கூடாதா ” போன்ற நச் வசனங்கள் நிறைய … வசனங்களில் நாம் நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டு எதையோ தேடி அலைகிறோம் என்பதன் ஏக்கம் நன்றாக தெரிகிறது … அதே போல தமிழ் , தமிழன் என்று வசனங்களில் பிரச்சார  நெடி …

     போதி தர்மன் “ தமிழன் ”  என்று நிறைய இடங்களில் சொல்கிறார்கள் , ஆனால் பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் , அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு ஆண்டவர்கள் என்கிறது தமிழர் வரலாறு … அதே போல் போதி தர்மன் சீனாவில் பரப்பியது “ ஜென் புத்திசம் ” என்ற கோட்பாடே , தற்காப்பு கலைகள் அங்கு முன்பே இருந்தன என்கிறது உலக வரலாறு …

சீனாவில் கடவுளாக வணங்கப்படும் புத்தர் நம் நாட்டில் பிறந்தவரே … அவரை போல போதி தருமனையும் 28 வது குரு மாராக சீனர்கள் ஏற்றுக்கொண்டதில் நமக்கெல்லாம் பெருமை , அந்த பெருமையை இந்த படம் மூலம் பறை சாற்றியதால் ஏ.ஆர்.முருகதாஸை கண்டிப்பாக பாராட்டலாம் …

ஆனால் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஏதோ இருவர் மட்டும் சம்பந்தப்பட்டது போல எடுத்து சென்றது  , காட்சிகளால் சொல்ல வந்ததை விளக்காமல் வெறும் வசனங்களாலேயே நிரப்புவது , “ கஜினி ” யில் இருந்தது போல காதல் காட்சிகள் இதில் சுவாரஷ்யமாக இல்லாதது இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஏழாம் அறிவு – ஆறாம் அறிவே …

ஸ்கோர் கார்ட் : 43

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>