/* ]]> */
May 262012
 
petrol

 

ன்ன கொடுமை சார் இது ? – இது தான் இன்று இந்தியாவில் உள்ள எல்லா நடுத்தர வர்க்கத்தினரும் பேசிக்கொண்டிருக்கும் வசனமாய் இருக்கும் …மத்திய அரசாங்கத்திற்கு ஆறு மாத காலமாய் எங்கே அம்னீசியா வந்து விட்டதோ என்று அனைவரும் கொஞ்சம் நிம்மதியாய இருந்ததில் யார் கண் பட்டதோ தெரியவில்லை பெட்ரோலை லிட்டருக்கு எட்டு ரூபாய் ஏற்றி விட்டார்கள். ..

 

விலையை ஏற்றுவதற்கான அதிகாரத்தை எண்ணெய் கம்பனிகளுக்கு கொடுத்ததில் இருந்தே இந்த கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது , எங்களுக்கு நஷ்டம் நஷ்டம் என்று கம்பெனிகளும் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு தானிருக்கிறார்கள் …சச்சினின் சதத்தை போல காங்கிரஸ் ஆட்சியில் விலையேற்றம் ஒன்றும் புதிதில்லை என்ற போதும் இந்த முறை இரவோடு இரவாக அதிகபட்சமாக விலையை ஏற்றியிருப்பதை பார்த்தால் பெட்ரோல் இல்லாமலேயே வயிறு குபு குபுவென்று எரிகிறது …
பேரலின் விலை இறங்கியும் பெட்ரோலின் விலை ஏறியதற்கு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததே காரணம்… ஆனால் உன்னிப்பாய் பார்த்தால் காங்கிரஸ் அரசின் கையாலாகாத தனமும் , தவறான பொருளாதார கொள்கைகளுமே முக்கிய காரணம் என்பது நன்றாக புலப்பட்டும் …2ஜி ஊழல் , கனிம ஊழல் ஆதர்ஸ் ஊழல் இப்படி சில ஊழல்களால் இழந்த பல லட்சம் கோடிகள் இருந்தாலே பல வருடங்களுக்கு மக்களுக்கு இனாமாகவே பெட்ரோல் தரலாம் …
மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திரிமுனூல் காங்கிரசும், தி.மு.கவும் தங்களுடன் கலந்து கொள்ளாமலேயே விலையை ஏற்றி விட்டதாக கோபப்படுகிறார்கள் …அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்… மம்தாவின் மனது கோணாமல் மத்திய அரசு நடக்கிறது மற்றொரு கட்சிக்கோ மாநிலத்தில் ஆட்சியில்லை , ராஜாவும் இப்பொழுது தான் ஜாமீனில் வந்திருக்கிறார் ,இந்த மாதிரி சூழ்நிலையில் கோபப்பட்டு அறிக்கை தான் விடலாமே தவிர உண்மையிலேயே கோபத்தில் ஏதாவது செய்து விட முடியுமா என்ன ? அவர்கள் அப்படி செய்வதாக முடிவெடுத்தால் மத்திய அரசிற்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கலாம் …அவ்வாறு செய்து திரும்பவும் தேர்தலை சந்திக்க அவர்கள் என்ன முட்டாள்களா? …
மிடில் கிளாஸ் மக்களுக்கு எப்பொழுதுமே காங்கிரஸ் மேல் ஒரு சாப்ட் கார்னர் உண்டு. அதனால் தானோ என்னமோ காங்கிரஸ் நம்மை கார்னருக்கு கார்னர் துரத்தி துரத்தி அடிக்கிறது , நாமும் சாயங்காலம் ஆனால் சரக்கு கடை தேடி ஓடும் குடிமகன் போல ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களுக்கே ஓட்டை போடுவோம் , இல்லையென்றால் எவன் வந்தாலும் நாடு உருப்படாது என்று சொல்லி ஒரு நாள் லீவு கிடைத்த சந்தோஷத்தில் வீட்டில் கவுந்தடித்து படுத்துக் கொள்வோம் …
2009 நாடாளு மன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒட்டு போட்டு விட்டு நண்பர் ஒருவர் சொன்ன காரணம் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது … அவருக்கு கம்யுனிஸ்டுகளே பிடிக்காது , அதிலும் அமெரிக்காவுடனான நியூக்லியர் ஒப்பந்தத்தை அவர்கள் தீவிரமாக எதிர்த்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை …பி.ஜே.பி க்கு ஒட்டு போடலாம் என்றால் அந்த கட்சி முழு மெஜாரிட்டியோடு ஜெயிக்காது என்று ஏதோ கமல் படம் நன்றாக தான் இருக்கும் ஆனால் ஓடாது என்பது போல கவலைப்பட்டுக் கொண்டே இரண்டாவது முறையாக தெரிந்தே கிணற்றில் விழுந்தார் … சமீபத்தில் அவரை சந்தித்த போது மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல டீசல் கார் வாங்கியிருக்கலாம் என்று மட்டும் வருத்தப்பட்டுக் கொண்டார் …
இது போன்ற எத்தனையோ காரணங்களால் அன்று அனைவரும் ஒரு முடிவை எடுத்திருக்கலாம் … இன்று பெட்ரோல் விலையுயர்வால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நாம் என்ன செய்யப் போகிறோம் ? இதெல்லாம் வழக்கம் போல நடப்பது தானே என்று சொல்லி விட்டு வேலையை பார்க்க போகிறோமா ? வாகனங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளப் போகிறோமா ? 2014  வரை பல்லைக் கடித்துக் கொள்ளப் போகிறோமா இதை தவிர மிடில் கிளாசால் வேறென்ன சார் செய்ய முடியும் ? உண்மை தான் பெரிதாக வேறென்ன செய்ய முடியும் ?

பெட்ரோல் விலையேற்றத்திற்கு எண்ணெய்  கம்பெனிகள் மட்டும் தான் காரணமா ? நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கொடுக்கும் விலையில் பாதிக்கு மேல் மத்திய , மாநில அரசுகளுக்கு வரியாக போவது தான் மிக முக்கிய காரணம் …கோடி கோடியாக சம்பாதித்தாலும் எதையாவது சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கும் கார்பரேட்களுக்கு வரிச்சலுகையை வாரி வழங்கும் அரசு அத்தியாவசிய தேவையான பெட்ரோலுக்கு வரியை போட்டு மக்களை வதைக்கிறது …

பெரிய பெரிய கம்பனிகளை போலவோ , பணக்காரர்கள் போலவோ அல்லாமல் ஒழுங்காக வருமான வரி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்துவது நடுத்தர மக்களே … முக்கால்வாசி பேருக்கு சம்பளமே வரி பிடித்தத்திற்க்கு பின் தான் வருகிறது … குட்ட குட்ட குனிவதால் மேலும் மேலும் குட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம் …பெட்ரோல் விலை ஏறி விட்டதால் யாருக்கும் சம்பள உயர்வு வரப்போவதில்லை …

மாதம் குறைந்தது 600 ரூபாயாவது பட்ஜெட்டில் விழும் துண்டு மருந்து வாங்குவதிலேயோ , வீட்டு பராமரிப்பு செலவிலோ ,பொழுதுபோக்கிற்கான செலவிலோ அல்லது மளிகை சாமான் வாங்குவதிலேயோ என ஏதோ ஒன்றில் சமன் செய்யப்பட போகிறது ..பெட்ரோல் விலையை மட்டும் நினைத்த மாத்திரத்தில் சர்ரென்று ஏற்றும் அரசு டீசல் விலையை ஏற்றுவதற்கு மட்டும் யோசிக்கிறார்களே ஏன் ? மக்களின் அன்றாட தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக மட்டுமா ? இல்லை … மொத்தமாக போக்குவரத்து வர்த்தகமே பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் வருமானம் குறையும் என்பதோடு , யூனியன்கள் மூலம் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் என்பதற்காகவும் தான் …

பெட்ரோல் போட்டுக் கொண்டு டூ வீலரோ , காரோ ஓட்டுகின்ற யாரும் புலம்புவதை தவிர ரோட்டில் வந்து நின்று போராடப் போவதில்லை… வாழ்க்கை எனும் போராட்டத்தை கடந்து முடிப்பதற்குள்ளே வயது முடிந்து விடுகிறது … இது தெரிந்து தானோ என்னவோ மக்களின் பொறுமையை சோதித்துக் கொண்டேயிருக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர் …

சென்னையில் மட்டும் வாகனம் ஓட்டுவோர் இருபது லட்சம் பேர் இருப்போமா ? இந்தியா முழுவதும் கூட்டிப் பார்த்தால் கோடிக்கணக்கானோர் வருகிறார்கள் … அந்தந்த முக்கிய நகரங்களில் ஒரு நாள் இவர்கள் எல்லாம் ஒன்று கூடினால் கூட அரசாங்கம் ஆடி விடுமே ! … சரி தான் , ஆனால் மாசக்கடைசியில் லீவு கிடைக்காது , அப்படியே கிடைத்தாலும் சம்பளத்த கட் பண்ணிடுவான் என்று உங்களுக்கு தோன்றும் அதே சிந்தனைகள் எனக்கும் தோன்றுகிறது …

சினிமாவுக்கு நம்மால் ஒன்றாக செல்ல முடியும் , ஐ.பி,எல்லில் சென்னை ஜெயிப்பதற்காக ஒன்று கூட முடியும் , சீக்கிரம் போகலேனா பீர் கூலிங் போயிரும் என்று ஓட முடியும் ஆனால் நம்மையே விழுங்கிக் கொண்டிருக்கிற ஓர் பிரச்சனைக்கு ஒன்று கூட முடியாது … ஒன்று கூடுவதை விடுங்கள் , அதை பற்றி சிந்திப்பதற்கு கூட நம்மில் பலருக்கு நேரம் இருப்பதில்லை … போங்க சார் நீங்க வேற , இத பத்தி பேசலாம் , முடிஞ்சா ஏதோ கொஞ்சம் எழுதலாம் ,அத விட்டுட்டு மத்ததெல்லாம் நடக்குற காரியமா என்று முணு முணுப்பது நன்றாகவே கேட்கிறது …

இப்பொழுது கூட காஸ் ,டீசல் விலையை கொஞ்சம் ஏற்றி விட்டு பெட்ரோல் விலையை குறைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்… கத்தியால் குத்தி விட்டு மண்ணை அள்ளிப் போடுவது போல இல்லை… இதையெல்லாம் பார்க்கும் போது என்ன கொடுமை சார் இது என்று ஆரம்ப புள்ளிக்கே மீண்டும் வரத்தோன்றினாலும் ஏதாவது செய்யணும் சார் என்று ஒரு குரல் உள்ளுக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டே தானிருக்கிறது …

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>