/* ]]> */
Aug 092010
 
எந்திரன் படப் பாடல் இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் சனிக்கிழமையும் ஞாயிறும் ஒலிபரப்பினார்கள். கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் நீண்ட அந்த நிகழ்ச்சி எந்திரன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் நெருடல்களுக்கும் குறைவில்லை. மிகப்பெரிய நெருடல் ஆறு மணி நேரத்துக்கும் மேல் நிகழ்ச்சியை நீட்டி முழக்கியதுதான். ரஜினியே “விழாவைப் பார்த்தவர்களின் பொறுமையை பாராட்டுகிறேன்” என்று சொல்லுமளவுக்கு! அதிலும் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு விளம்பர இடைவேளைகள் வேறு. 250 கோடி பட்ஜெட் படமாம். அதில் இந்த வெளியீட்டு விழாவை வைத்தே 25 கோடி எடுத்திருப்பார்கள். சரி, இந்த அளவுக்கு விளம்பரம் போடும் நிகழ்ச்சி ரசிக்கத்தக்கதாய் இருந்ததா என்றால் அது தான் இல்லை. ஆரம்பத்திலேயே ராதாரவி வந்து ஏதோ அவர் வழக்கமான வில்லன் பாணியில் ஷங்கரையும் ஐஷ்வர்யாவையும் மிரட்டினார். ஷங்கர் சாலமன் பாப்பையாவுக்கும் ராஜாவுக்கும் வாய்ப்பளித்ததைக் காட்டி நடிப்பதையே பிழைப்பாய் வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் ! நானெல்லாம் பட்டி மன்றம் போய் பேச முடியாது என்றார்…விசு ராஜேந்தர் நடத்தும் மன்றங்கள் ஏனோ நம் நினைவுக்கு வந்தது. அதோடு அந்த லாஜிக் படி பார்த்தால் ரஜினியே கண்டக்டராய்த்தான் இருந்திருக்க வேண்டும்! ஐஷ்வர்யா ராயை நடிகர் சங்கத்தில் சேரும்படி ஆங்கிலத்தில் மிரட்டினார். உதாரணமாய்க் கூட இன்னொரு வில்லனான அம்ஜத் கான் பேரைத்தான் சொன்னார். என்னா வில்லத்தனம்! ஆக ஆரம்பமே ஒரு திகிலாய் தொடங்கியது.
நிகழ்ச்சியின் பெரிய சறுக்கல் வழக்கமாய் கலகலப்பாய் நிகழ்ச்சிகளை வழங்கும் விவேக் எந்திரனில் தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதாலோ என்னவோ ஆரம்பம் முதலே சொதப்பிக்கொண்டிருந்தார். ஷங்கரை பற்றி அவர் “பிரம்மாண்டம் என்ற பெயரில் நிறைய செலவழிக்கிறார்” என்னும் பொருள்பட சொன்ன முயல் ஆமை கதையாகட்டும், “கிராஃபிக்ஸ் கிராதகனே” என்ற அடைமொழிகளாகட்டும்.., எல்லாமே எரிச்சல் ரகம். ஷங்கர் பேசும்போது “அடுத்த படத்தில் விவேக்கை போடணுமா என்று யோசிக்கிறேன்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாலும் உள்ளுக்குள் நிஜமான எரிச்சல் நிச்சயம் இருக்கும்…ரஜினையைப் பற்றி 3ம் கிளாஸ் 4ம் கிளாஸ் கதை, ரம்யா கிருஷ்ணனிடம் அவர் அடித்த நட்டும் போல்டும் கமென்ட் என அவர் அடிக்க முயன்ற பல ஜோக்ஸ் வெத்து வேட்டாய்த் தான் போனது. அந்த ஏபிசிடி ராப் சாங் மட்டும் பரவாயில்லை. அதிலும் அவர் தன் அசிஸ்டென்ட் செல் முருகனை “ நீ நாலு ஸ்டேட் அவார்ட் வாங்குனேன்னு சொல்ல ஆசைதான். ஆனா நீ வாங்கலை ! நீ ஒரு பிட் காமெடியன், அவ்வளவுதான்!” என்று அடித்த கமென்ட் ரசிக்கும்படியாக இல்லை. விவேக்கே இது போல பிட் காமெடி செய்து தான் முன்னேறினார் என்பதை மறக்கக் கூடாது.முக்கால்வாசி நிகழ்ச்சி நேரம் பல நடனங்களில் தான் போனது. சிம்பு ரஜினி பாடல்களுக்கு ஆடியதும் அந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் நடனமும் மட்டுமே தேறின. மீதி எல்லாம் ரசிக்கும்படியாக இல்லை. அதிலும் ரகசியா நடனத்துக்கு அணிந்திருந்த ஆடை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியாய் சென்ஸார் தேவையா என்ற கேள்வி எழுப்பும் வகை. ஷங்கர் பேப்பர் பார்த்து படித்தால் கூட சொல்ல வேண்டிய அனைத்தையும் நறுக்கென சொன்னார். ரஹ்மான் வழக்கம்போல் பணிவே உருவாய் சுருக்கமாய் முடித்துக் கொண்டார். கலாநிதி மாறன் இது போன்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக கலந்து கொள்கிறாராம். அதை திரும்பத் திரும்ப சொன்னார்கள். நல்ல வேளை “இந்தியத் தொலக்காட்சிகளில் முதல் முறையாக” என்று சன் டிவி பாணீயில் போடவில்லை. முதல் முறை ஆனாலும் அழகாக பேசினார். அவர் சிம்புவை வைத்துக் கொண்டே “இப்ப வரும் நடிகர்கள் யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சூப்ப்ர் ஸ்டாரைப்போல் யாரும் பிறக்கவே முடியாது!” என்றார். ரஜினி இதுவரை எந்திரன் படத்துக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்றும் ரிலீஸ் தேதியன்று சம்பளம் கொடுங்கள் என்று சொல்லி விட்ட்தாகவும் சொன்னார். ஒருவேளை எவ்வளவு பிசினஸ் ஆகிறது என்று பார்த்துவிட்டு ரஜினி சம்பளம் ஃபிக்ஸ் செய்வாரோ என்னவோ! கலாநிதி சார், நீங்க பெரிய பிசினஸ் மேனாக இருக்கலாம். ஆனால் தன் சம்பள விஷயத்தில் ரஜினி படு கெட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அவர் பேசியதும் எந்திரன் ட்ரெய்லரைப் போட்டுக் காட்டினார்கள். பார்த்த ஃப்ரேம்கள் எல்லாமே மிரட்டலாய் இருந்தது. அதேபோல் போடப்பட்ட பாடல் காட்சிகளிலும் காணப்பட்ட ஃபேரேம்கள் இது ஒரு புதுமையான படம்தான் என்று உறுதி கூறின!

வைரமுத்து, எப்படி எந்திரன் ஐங்கரனிலிருந்து “ஆயிரம்கரன்” கலாநிதி மாறன் கைக்கு மாறியது என்று கூறினார். எப்படி திரையில் தன்னுடைய முதல் முதல் பாடல் “காளி” ரஜினி வாயால் உச்சரிக்கப்பட்டதோ அதேபோல் தன் மகன் கார்த்தியின் முதல் திரைவரிகளும் “எந்திரன்” ரஜினி வாயால் உச்சரிக்கப்படுகிறது என்றார். ஐஷ்வர்யா ராய் மிக அழகாக “வணக்கம்”, மலேயா பாஷையில் வணக்கம், எல்லாம் சொன்னார். ஷங்கரில் ஆரம்பித்து மேக்கப் உமன் வரை எல்லாரையும் பாராட்டிவிட்டு ரஜினையை மறந்துவிட்டு கிளம்பினார். பின்னர் விவேக் ஞாபகப்படுத்த திரும்பி வந்து ரஜினியை கடைசியில் பாராட்டத்தான் அப்படி செய்ததாக ஒரு பிட்டைப் போட்டார். உலக அழகி மட்டும் அல்ல… புத்திசாலியும் கூட! “ராவணன்” போலில்லாமல் எந்திரனில் இளமையாக அழகாகத் தெரிகிறார்.
கடைசியில் அரங்கு நிறைந்த கைத்தட்டலோடு ரஜினி பேசினார். ஷங்கரைப் பற்றி பேசும்போது கமல் ஷங்கரை பற்றி “ கெட்டிக்காரன்… ஆனா ரொம்ப கஷ்டப் படுத்துவாரு !” என்று சொன்னதாகவும் தான் ஷங்கரைப் பற்றி கலாநிதியிடம் “ அது ஒரு வைல்ட் ஹார்ஸ் ( காட்டுக் குதிரை) . போகவேண்டிய இடம் கொண்டு போய் சேர்த்துடும் ஆனா நாமதான் கீழ விழுந்துடாம உக்காரணும்!” என்று சொன்னதாகவும் சொன்னது ரஜினியின் பளிச்! எந்திரனில் தன் பங்கு எதுவும் இல்லை ஷங்கர் சொன்னதை செய்தேன் என்றது சூப்பர் ஸ்டாரின் எளிமைக்கு இன்னொரு சாம்பிள். ஆனால் அவர் பேச்சில் வழக்கமாக இருக்கும் ஸ்பார்க் குறைவுதான். ஐஷ்வர்யாவின் அழகைப் பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்தார். ஏற்கனவே இவர் ஐஷ்வர்யாவைப் பற்றி இன்னொரு விழாவில் “அவ்வளவு அழகு படையப்பா நீலாம்பரியாக நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்!” என்று சொல்லியிருக்கிறார். ஐஷ்வர்யா என்றால் தலைவர் ஏன் இவ்வளவு உருகுகிறார் என்பது ரஜினிக்கே வெளிச்சம்! ஆனால் ஐஷ்வர்யாவுடன் காதல் காட்சியில் நடிக்கும்போதெல்லாம் அமிதாப் நினைவில் வந்து “கபர்தார்’ என்பார் என்றது நல்ல தமாஷ்! அவர் சொன்ன படிக்கட்டு ஏறி இறங்கிய குட்டிக்கதை கூட இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தின் சிடி வெளியீட்டு விழாவில் “இறங்கியாகணும்” என்று பேசுவது சரியா என்ற கேள்வியை எழுப்பியது. ஏற்ற இறக்கம் எல்லாம் பார்த்தால் தான் வாழ்க்கை என்று அட்வைஸ் கொடுத்து முடித்துக் கொண்டார். ஆக மொத்தத்தில் எந்திரன் இசை வெளியீட்டு விழாவை இரண்டு நாட்கள் உட்கார்ந்து அத்தனை விளம்பரங்களையும் நடுவில் காட்டப்பட்ட சன் டிவியின் பாரபட்ச செய்திகளையும் பொறுத்துக் கொண்டு பார்த்தது வீண்தான்.. ஏதாவது இணைய தளத்தில் படித்திருக்கலாம் இல்லை யூட்யூபில் பார்த்திருக்கலாம்.. படமாவது இந்த விழாவைப் போல் சொதப்பாமல் இருந்தால் சரி!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>