மிஞ்சிய பலன் தரும் இஞ்சி
கலியாண சுபுத்திர னாக
குறமாது தனக்கு வி நோத
கவினாரு புயத்திலு லாவி விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு
மடியேனை சுகப்பட வே வை
கடனாகு மிதுக் கன மாகு முருகோனே…..முருகா..
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகை இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து ..
ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம்,
எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல்..
விண்டுவி டாமல் முருகன் பதமேவு
விஞ்சையர் போல அனைவரும்
இஞ்சியினால் நலம் பல பெற்லாம்..
பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது பொதுவான மருத்துவ பயன்கள்.
இஞ்சியின் செயல்பாடு பற்றி பல்கலைக்கழக உணவியல் பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உள்ளதை சமீபத்தில் எலிகளிடம் நடத்திய சோதனையில் அறிவித்தனர்.
உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
இஞ்சியை பச்சையாக உணவில் சேர்த்து சிலருக்கு 11 நாட்கள் அளித்தும். இன்னொரு குழுவினருக்கு கொதிக்க வைத்த இஞ்சியை அதே 11 நாட்கள் கொடுத்தும். அதன் பிறகு நடத்திய சோதனையில் சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை உணவில் சேர்த்தவர்களது உடல் வலிகளுக்கு நிவாரணம் கிடைத்தது தெரிய வந்ததாம்..
குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைப்பது ஆய்வில் உறுதியானது. தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகளை 25 சதவீதம் குறைக்க முடியும் என்கிறது ஆய்வு..
இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.
இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.
உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ ..இதன் மேன்மையை
“சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம்.
மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது..
ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்தமாக பெயர் சூட்டியுள்ளார்கள்.
நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன.
மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள்
மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.
வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி!
மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது.
வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும்.
மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும்.
குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது.
மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.
பதமாய் சுவையாய் உணவுக்கு மகுடம் சூட்டும்
பாங்கான மாங்காய் இஞ்சி ரெசிபீஸ்
மாங்காய் இஞ்சி சாலட் :
மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
துவையல் :
மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
. மாங்காய் இஞ்சி சட்னி:
சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை.
மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி :
தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம்.
மாங்காய் இஞ்சி கறி :
மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
மாங்காய் இஞ்சி ஊறுகாய் :
நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
மாங்காய் இஞ்சி தொக்கு :
சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை.
மாங்காய் இஞ்சி புலவு :
பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான்.
மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு :
மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு.
மாங்காய் இஞ்சி பக்கோடா :
சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா.
இஞ்சி லேகியம்
இஞ்சியை தோல் சீவி வெட்டி 1/2 கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
தெளிந்ததும் மேலாக எடுத்து அதில் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுது, நெய், வெல்லம் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி காற்று புகாத ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.
வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கு நல்ல மருந்து பித்தத்திற்கும் நல்ல மருந்து
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்
இஞ்சி துவையல்
இஞ்சி பொங்கல் சுவையில் மிகவும் சிறந்தது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏற்படும் உபாதைகள் வயிற்று போக்கு, வயிற்று வலி, அஜீரண கோளாறு போன்ற அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் டாக்டர் இஞ்சி பொங்கல் …..
குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.
* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.
* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.
மணி மகுடமாய் சுவையும் மணமும் மகிழ்வுடன் அனைத்து உஅணவுகளுக்கும் அளிக்கும் இஞ்சி… இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடி இருந்தாலும் உபயோகிக்கலாம்.
சீரகத்தை இஞ்சி சாற்றில் ஊறவைத்து சூரணம் செய்து சர்க்கரை சேர்த்து அருந்திவர வாந்தி குறையும்.
மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.
Ginger Ice Cream Might Change Your Life
மலபார் இஞ்சி முரபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும்.
candied ginger
Citrus – Beet Smoothie
பித்தமது அடங்கியனால் பேசதே போய்விடு
எத்திய ஐயம் எழும்பிடில் கிட்டாதே
எத்திய வாதம் எழும்பினால் மருந்து செய்
இது சித்தர் நாடி கூறும் இலக்கணம். இதன் பொருள் வாத நாடி நடக்கும்போது தான் மருந்து தர வேண்டுமாம்! வாதத்தை நடுநிலையாகக் கொண்ட இயற்கை மூலிகைகள் சிலவே.
இதில் இந்த சுக்கு சுப்பிரமணியரைப்போல் முதன்மை வகிக்கக்கூடியது. சுக்கு இதற்குத்தான் உபயோகிக்கலாம்; இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும், எதற்கு வேண்டுமானாலும் யாவரும் பயன்படுத்தக் கூடிய எளிய ஆனால் உயர்ந்த வஸ்து.
அகத்தியர் இதனை ‘ஈதுக்குதவும் தீதுக்குதவா தென்றோரு விதியிலை நவசுறு குணமிதுவே’ என்றார் நவசுறு எனில் சுக்கு.
பெரிய குடும்பத்தில் தலைவன் ஒரு தந்தையாக இருந்த போதிலும் முதல் மருமகளாக வாய்க்கும் பெண்ணுக்கு எவ்வளவு பெருமையும், பொறுப்பும் உள்ளதோ? அத்தகைய மதிப்பினை மக்கள் சமுதாயத்தில் இந்த சுக்கு பெற்றுள்ளது.
தேவர்கள் சேனாபதியாய், தனிப்பெரும் தமிழ்க்கடவுளாய் போற்றும் முருகனைப் போலவே இஞ்சியும் சுக்கும் நம் பாரம்பர்ய உணவும் மருந்தும்..
வாதரோக சம்பந்தப்பட்ட கீல்வாய்வு, பிடிப்பு, வீக்கல், மூட்டுக்களில் வலி இவை உடம்பின் எந்த மூட்டுக்களில் வந்த போதிலும் சரி ஒரு துண்டு சுக்கு, ஒரு துண்டு உயர்ந்த பெருங்காயம் பால் விட்டு அரைத்து சேர்ந்த விழுதியை வலியும் வீக்கமுள்ள இடங்களில் தடவி வெய்யில் அல்லது நெருப்பனல் காட்ட குணமாகும்.
பல்வலி தாங்க முடியாதபோது எகிறுகள் வீங்கி ஊசி குத்துதல் போன்று வலிக்கும்போது, ஒரு துண்டு சுக்கு எடுத்து நறுக்கி அதை அப்படியே வலிகண்ட இடத்தில் வைக்க சாந்தப்படும்
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் உலர்த்தி சுத்தம் செய்து சம எடை எடுத்து இடித்து துல்லியமாக தூள் செய்து வைத்துக் கொள்வது தான் ‘முக்குணத்துணை மருந்து’ என்பது.
இதை நோய்த் தடுப்பு மருந்தாக சிறுவர் முதல் பெரியவர் வரை உபயோகிக்கலாம். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுடைய தொழில் ஆக்கம், காத்தல், அழித்தல் என்பன போன்று இந்த முக்குண துணை மருந்தும் உடலுக்குத் தேவைகளை ஆக்கி, தேவையற்றவைகளை அழித்து வெளியேற்றி உடலைக்காக்கும் தன்மையது.
.
நம் முன்னோர்கள் சிறு வயதில் அடங்காது அட்டகாசம் செய்யும் முரட்டுப் பிள்ளைகளை ஒரே சுக்குத் துண்டால் சாதுவாகச் செய்து விடுவார்கள்!
சுக்கு ஒரு பழங்கால பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே!
என்பது பண்டைய தமிழ்மொழி.
சுக்கு – சித்தர்கள் கண்டுபிடித்த பென்சிலின் ..
சுக்கு தீவிர நோய்களை குணப்படுத்துவது போல நாட்பட்ட நோயால் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம் என்பதனை ‘திரிபலா சுக்கு டோக்க தெரித்து உயிர் போமுன்’ என்ற திருப்புகழ் பாடலால் அறியலாம்.
அறியாமையும், நோயுடைய வாழ்க்கையும் இருண்டுபோன இரவுக்கு சமமானவைகளே! எனவே இருள் என்ற அறியாமை, பிணி யாவும் சுப்பிரமணி (சுக்கு) எனும் முருகன் அருளால் நீங்கிவிடும்.
திரிகடுகம் ,ஏலாதி போன்ற தமிழ் நூல்களும் நமக்கு அறியாமையையும், நோய்களையும் ஒருங்கே அகற்றும் பெருமைகொண்டவை.
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்..
நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சி உலர்த்தப்பட்டு சுக்கு என செல்லமாக அழைப்பது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான்.
ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லைஎன்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
Butterfly Ginger
Gingers are one of the most beautiful and colorful flowers in the world of flowers.
மஞ்சளும் இஞ்சியும் கொஞ்சி பிணைந்து மங்களகரமாக விளையும் பூமி பார்க்க கண்கோடி வேண்டும்..
Life Cycle of Ginger
சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
இஞ்சியின் மேல்தோல் முழுவதுமாக நீக்கப்ப்டவேண்டும்..இஞ்சிச்சாறிலும் அடியில் தங்கும் கசடு நீக்கப்படவேண்டும்..
இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும்
அகன்றிடும்பித்ததோடம்நெஞ்சினில்
இருமல் கோழைநெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னைமிஞ்சினி
வருமேவென்றும் விளம்பிடும்வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீதம் இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும்.
ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை!
ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர்.
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும்.
இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
ஆஸ்துமா இருமலுக்குஇஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம்.(இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.
டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.
மணி என்றால் செவியால் கேட்கும் ஒலி மட்டும் அல்ல! கண்களால் பார்க்கும் ஒளிக்கும் மணி என்றுதான் பொருள்.சுப்பிரமணி என்னும் நம் தமிழ்க்கடவுளுடன் இணைத்து வழங்கப்படும் இஞ்சி பலவகையிலும் வாழ்விற்கு வளமும் ஒளியும் தரும் குணமுடையது…
Ginger Cat loves Cheetos
Ginger Domestic Cat Running with Litter of Five Kittens
A golden snub nosed monkey eats
இஞ்சி தின்ன குரங்கு….
Mr Monkey
Wild Ginger.
tags : இஞ்சி, இஞ்சி + ஹெல்த், இஞ்சி + மருத்துவம், கொலஸ்ட்ரால், நிவாரணி, மூலிகை, வயிற்றுப் பூச்சி, நாட்டு மருந்து, பாட்டி வைத்தியம், இஞ்சி லேகியம், சித்தர் நாடி, சுக்கு,சித்தர்,இஞ்சி பொங்கல்,சுக்குப் பொடி,இஞ்சி – மிளகு டீ,இஞ்சி துவையல்,லேகியம், திரிகடுகம் ,கஷாயம், நீரிழிவு, ginger, sukku, ginger dishes, sukku tea, ginger tea, cholestrol, டயாபடீஸ், மிளகு, இஞ்சி கஷாயம், ஏலாதி,வெள்ளை வெங்காயம்,ஓலைச் சுவடி,வாயுக் கோளாறு, கொத்துமல்லி, கறிவேப்பிலை,வாயு, பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ,பித்தம், புதினா,
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments