/* ]]> */
Oct 032011
 

உலக ஒளி உலா நவராத்திரி நாயகி அன்னை மீனாக்ஷி

வேதமாகிய கதம்பவனத்தில் கிளியாகவும், 

சாஸ்திரமாகிய காட்டில் மயிலாகவும்,

உபநிஷத்களிலுள்ள ஸமஸ்த தர்மங்களாகிற பொற்றமரைக் குளத்தில் ஹம்ஸமாகவும், 

பிரணவமாகிற தாமரைப்பூவில் கருத்த மதம் கொண்ட தேன் வண்டாகவும், 

மந்திரமாகிற மாமரக் கிளைக்கு கோகிலமாகவும் விளங்கிக் கொண்டு சுந்தரேஸ்வரரின் சக்தியாக, மதுரையின் நாயகியாய், பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான அன்னை மீனாக்ஷி சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடையுடுத்து பொற்றாமரைக்குளத்தருகில் கோவில் கொண்டு ஆட்சிபுரியும் மதுரையில் நவராத்ரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி என்று சொல்வது போல, மதுரை வீதிகளில் நடந்தாலேயே முக்தி

maduraimeenakshi

என் மனதை உன் பாதாரவிந்தங்களில் சமர்பிக்கிறேன். அது மிருதுவானால் உனது பாதுகையாகக் கொள். அவ்வாறின்றி கடினமாக இருக்குமானால் உனது விவாக சமயத்தில் உபயோகிக்கும் அம்மியாக வைத்துக் கொள். எப்படியாகிலும் உன் சரண ஸ்பரிசம் மனதுக்கு வேண்டும் -நீலகண்டதீட்சிதர் அன்னை மீனாக்ஷியை வணங்கிப் பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். இந்த ஸ்லோகங்களைப் பாடி முடித்ததும் நீலகண்டரது கண்பார்வை திரும்பியதாம்..

ராஜராஜேஸ்வரம், ஜம்புகேஸ்வரம், நாகேஸ்வரம், ராமேஸ்வரம் என்பதாக எல்லா கோவில்களிலும் ஈசனது பெயரால் குறிக்கப்படுவதே வழக்கம். மதுரைக் கோவில் மட்டுமே ‘மீனாக்ஷி கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

மீனாக்ஷி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது, இந்த அன்னை மீனாக்ஷியே.

மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாக்ஷி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே காத்து குஞ்சு பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம். ஸ்தல விருட்சமான் கடம்பவனக் காட்டில் தோன்றிய ஸ்வயம்பு லிங்கத் திருமேனியே சொக்கநாதர்.

மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார். இந்தசன்னதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது இது மதுரைக்கே ஆன சிறப்பு தரிசனம், சிதம்பரம் உட்பட வேறெங்கும் காணக் கிடைக்காது.

 இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஸ்படிக லிங்கம்

பண் சுமந்த பாணர்போல் விறகுடன்

மண் சுமந்த திருமுடி அழகா

பெண் செய் பிட்டு விரும்பி மாறன் பிரம்படி

புண் சுமந்த மேனியனே மாமதுரை -

திரு ஆலவாயமர் சொக்கநாதர்

மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவது கண்கொள்ளாக்காட்சி.

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது. மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்று அலங்காரங்கள்.

மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மன் அலங்கரித்து தரும் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது. மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டாது. பள்ளியறை பூஜை சிவ-சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை, ஆகவே தான் மூக்குத்தி மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர் அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனை தரிசிக்கலாம். 

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)

இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

தமிழகத்துக் கோவில்களிலேயே கோபுரத்தில் அதிக அளவு பொம்மைகள் இருப்பது மதுரைக் கோவிலில்தான்

ஆயிரங்கால் மண்டபம், இதில் சப்தஸ்வர ஓசை தரும் ஏழு தூண்கள் உள்ளன. இதே விதமான தூண்கள் வடக்கு கோபுர வாயிலில் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் தூண்கள்பலவித வேலைப்பாடுகளுடன் பிரமிக்க வைப்பவை. இது தவிர, கிளிக்கட்டு மண்டபம், அஷ்டசித்தி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், ஞானசம்பந்தர் மண்டபம், திருமலை நாயக்க மண்டபம், திருப்புகழ் மண்டபம், கல்யாண மண்டபம், வசந்தராய மண்டபம் போன்றவை உள்ளது.

 

வருடத்தின் 12 மாதங்களிலும் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.ஆடி மாதம் மினாட்சி பூப்பு நீராட்டு விழா, ஆவணிமாதம் ஆவணி மூல உத்சவம், (இந்த விழாவில்தான் இறைவன் புட்டுக்கு மண்சுமந்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்) புரட்டாசி நவராத்ரி ……

சம்பந்தரால் திருநீற்றுப் பதிகம் பாடப்பட்டது இந்த தலத்திலேயே!. இன்றும் இக்கோவிலுக்குச் செல்கையில் மடப்பள்ளி சாம்பலை நெற்றியில் தரித்துச் செல்வது வழக்கம். முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து அம்மன் சன்னதி வரும் வழியில் ஓர் இடத்தில் இந்த சாம்பல் மக்களுக்காக இடப்பட்டு இருக்கும்

சர்வே ஜனா சுகினோ பவந்து!.. சர்வ மங்களானி பவந்து.

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>