தீப மங்கள ஜோதி
“அருணாச்சல சிவ அருணாச்சல சிவ
அருணாச்சல சிவ அருணாச்சலா!”
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
கயிலாயத்திலும் மேருவிலும் இருந்தாலும்திருவண்ணாமலை மலையில் சிவன் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.
ஆராத இன்பம் அருளும் மலை அண்ணாமலை..
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடராய்
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் திகழ்ந்து
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காவாய் கனகக் குன்றே போற்றி!போற்றி!!
சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியர் திருவண்ணாமலையைப் போற்றுகிறார்.
திருவண்ணாமலை மலையே இறை…இறையே மலை….
யுகம் யுகமாய் வாழும் மலை....
கிருத யுகத்தில் இது நெருப்பு மலை.…
திரேதா யுகத்தில் இது மாணிக்க மலை.…
துவாபர யுகத்தில் இது பொன் மலை..
தற்போது கலியுகத்தில் இது கல் மலை..
ஈசனிடம் இடப்பாகத்தில் இடம் வாங்கி.. மாதொரு பாகனாய்..பாகம் பிரியாளாய் நின்ற மந்திர மாமலை திருவண்ணாமலை
திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை
திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி
நந்திபகவான், மார்க்கண்டேய முனிவருக்குச் சொன்ன சிவ ரகசியம் இது.
பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு.
நில நடுக்கங்களால் மற்றப் பகுதிகள் பாதிக்கப் படுவதுபோல் தட்சிணப் பீடபூமி பாதிக்கப் படுவதில்லை என்பதற்கும் அண்ணாமலையின் பழமையே காரணம் என்று கூறப்படுகின்றது. நம்முடைய புராணங்களும் இம்மலையை உலகின் மத்திய பாகமாகக் குறிப்பிடுகின்றது.
வல்லாள மன்னன் நினைவு நாளில் மாசி மாதத்தில் அவன் இறப்பு பற்றிய செய்தி இறைவன் முன் படிக்கப்பட்டு கோயில் மூர்த்திகள் பள்ளிகொண்டாபட்டு என்ற ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மன்னனுக்குத் திதி கொடுக்கப்படுகிறது. ஆண்டவனே மகனாக இருந்து மன்னனுக்கு திதி கொடுப்பதாக கூறி இன்றும் இவ்விழா ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
வினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு அ + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள்.
ஞானசம்பந்தர் – தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார்.
‘
தீப மங்கள ஜோதி நமோநம’ என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
ஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.
இத்தலத்தில் தான் முதல்முதலில் லிங்க வழிபாடு துவங்கியது. எனவே இதுவே மஹா சிவராத்திரியின் பிறப்பிடம்.
மாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
கோயிலின் மூலவரான அண்ணாமலையார் லிங்கத் திருமேனியில் இங்கு காட்சி தருகிறார். பொதுவாகக் கோயில்களில் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யும் போது அஷ்டபந்தனம் செய்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தங்கத்தைக் கொண்டு சொர்ணபந்தனம் செய்யப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா உலக சிறப்பு வாய்ந்தது.
திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே.
திருக்கார்த்திகை தீபம் அண்ட சராசரங்களுக்குமே, ஒளிவிளக்கான திருவண்ணாமலை ஜோதி ஏற்றப்படுகிறது.
ஒரே ஒருமுறை திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனம் செய்தால் போதும், அது நம் 21 தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் என்று கூறுகிறது, தலபுராணப் பாடல்.
முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.
வருடத்திற்கு இருமுறை – ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை செல்லுவது தொன்றுதொட்ட குடும்ப வழக்கம்….
கிரிவலம் வர விரும்பி நானும் சிலமுறைகள் பயணத்தில் பங்குபெற்றேன்..
திருவண்ணாமலையில் தீபம் உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே!’ என்னும் தத்துவ விளக்கம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் முன்னிலையில் திருக்கார்த்திகையன்று அதிகாலை வேளையில் பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதியை ஏற்றி தீபாராதனை செய்வர். இத்தீபம் ” பரணி தீபம்’ என்று பெயர்பெறும்.
கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவதால் இந்த தீபத்தை
“பரணி தீபம்’ என்கிறார்கள். பிறகு அந்த கற்பூரச்சுடரொளி ஒரு பெரிய ஒற்றைத் திரியில் பொருத்தப்பட்டு, நந்தீஸ்வரர் முன்னிலையில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் ஏற்றப்படும்.
ஒற்றை தீபம் ஒன்றாக இருக்கும் கடவுளையும், ஐந்து தீபங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களையும் அவர் மேற்கொள்ள பஞ்சமூர்த்திகளாகப் பிரிவதையும் காட்டும்.
இவர்கள் தங்கள் பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும் வகையில் அம்மன் சன்னதியில் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.
காலை 11 மணி வரை கால பைரவர் சன்னதியில் வைக்கப்பட்டு இருந்த பரணி தீபம் பின்னர் பர்வத ராஜகுலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்..
மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பஞ்சமூர்த்திகளை சன்னதியில் இருந்து வெளியே கொண்டு வந்து மண்டபத்தில் வைத்து. மாலை 5.59 மணிக்கு சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து 6 மணிக்கு கோவில் வளாகத்தில் அகண்ட தீபம் ஏற்பட்டது. அதே நேரம் 2,668 அடி உயர மலை உச்சியில் தயாராக நெய் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோவில் வளாகத்திலும், வெளியேயும் கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். அப்போது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நின்ற இடத்திலேயே தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வணங்கினார்கள். மலை உச்சியில் தீப ஜோதி தெரிந்தவுடன் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள், கடைகளிலும் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வணங்கினார்கள்.. உணர்ந்து சிலிர்த்த அருமையான தரிசனம்…
விசிறி சாமியாரின் சீடர்கள் ஒருமுறை எங்கள் இல்லத்தில்
பஜனையும் பூஜையும் நடத்தினார்கள்..
குழுவினர் இசையுடன் அருமையாய் பாடல் பாடினார்கள்..
தீபாராதனைத்தட்டில் கற்பூர தீபம் ஏற்றி நைவேத்தியம் முடிந்து தட்டில் பார்த்தால் விசிறி சுவாமிகள் தலைப்பாகையுடன் இருகைகளையும் உயர்த்தி ஆசீர்வதிப்பது போன்ற தோற்றம் தட்டில் அச்சுபோல் பதிவாகி இருந்தது.. அதிசயமான அந்ததட்டை நீண்ட நாட்கள் பாதுகாத்து பூஜையில் வைத்திருந்தோம்….
கார்த்திகைதீபம் உயரமாக மலைமீது ஏற்றப்படுவத்ற்கு விஞ்ஞான விளக்கம் உண்டு..
ஆன்மீகத் தேனில் குழைத்துத் தந்த அருமையான விழா.. பன்முகப்பயன்பாடு.. சந்திர ஒளிக்கிரணங்கள்,,,மலையின் ஆன்மீகக்கதிவீச்சு எல்லாம் கிடைக்கும் அரிய தத்துவ விளக்கம்…சகல ஜீவராசிகளும் பயன் பெறும் ஜீவகாருண்ய விழா.
ஐப்பசி பட்டாசு வெடிப்பும் வாணவேடிக்கைகளும் வெறும் விளையாட்டல்ல.. மழை அந்தப்பருவத்தில் பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும் .பட்டாசுகளின் கந்தகப்புகை மழை மேகங்களை கலைத்து வானிலையை சமப்படுத்தச் செய்த அற்புதக்கொண்டாட்டம்! சமுதாயமாகசேர்ந்து பல கைகள் தட்டினால் ஓசை பெரு வெடிப்பாய் நிகழ்வதைப்போல வானிலை கால நிலையை மாற்றவே தீபத்திருநாட்கள் கொண்டாட்டம். பெரும் புயலைத் தடுக்கும் வெப்பம் ..
காற்றை திசைதிருப்பும் அழல்.
.உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம் நம் மெய்ஞானிகளை..
மலைக்கு மலையாய், மலையே சிவனாய், சிவனே மலையாய், மண்ணும் விண்ணும்
தொட்ட மலையே அக்னியின் ஆனந்த வடிவாய் நிற்கும் திருவண்ணாமலை
பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதரராய் சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாச்சலேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதி உலா வரும் மகா தேரோட்டம் ..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments